கண்ணோட்டம்
TET வினா அமைப்பிற்கு எதிரான ஆசிரியர்களின் குரல்கள் : ஆதங்கமா? அரசியலா? அடுத்து என்ன?
_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_
'100% அரசியல் தான்' என்று ஆட்சியாளர்கள் கருதியதன் வெளிப்பாடே TRBன் விளக்க அறிக்கை என்ற ஐயத்தை ஆசிரியர்கள் மத்தியில் பற்ற வைத்துள்ளது. ஏனெனில் நாளிதழில் வரும் செய்திக்காக அதுவும் வினாத்தாள் வடிவமைப்பு எனும் தனது தனித்த அதிகார எல்கைக்குட்பட்ட விடயம் சார்ந்ததற்கு தனிப்பட்ட முறையில் TRB விளக்கம் அளித்தாக வேண்டிய எந்தவிதத் தேவையும் அதன் நிருவாகக் கட்டமைப்பின்படி இல்லை. ஒருவேளை வழக்குத் தொடுக்கப்பட்டால் அப்போதும் நீதிமன்றத்திற்குத் தெளிவுபடுத்த வேண்டிய தேவை மட்டுமே TRBக்கு உள்ளது.
இச்சிக்கல் அரசியல் காரணங்களுக்காகவே ஊடக வெளிச்சம் பெற்றுள்ளது என்று ஆட்சியாளர்கள் கருதுவதால்தானோ என்னவோ TRB தனது தரப்பு நியாயத்தை செய்தித்தாளை முன்வைத்துச் செய்தியாக்கியுள்ளது என்ற ஐயம் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஒருவேளை இவ்வையம் உண்மையாக இருக்கக் கூடுமானால், அதை ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்தியாக வேண்டிய தேவை ஆசிரிய சமூகத்திற்கு உள்ளது. ஏனெனில், கட்சிச் சாயம் ஊற்றி ஊற்றியே எவராலும் கண்டுகொள்ளப்படாமல் அரசியல் அநாதைகளாக்கப்பட்டிருப்பது ஆசிரிய சமூகம் மட்டுமே!
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியாளர்கள் தொடங்கி அரசமைப்புக் காவலர்கள் வரை சட்டப்படியான எந்தவொரு நன்மையும் கிடைக்கப்பெறாதவர்களாகவும், ஆட்சியாளர்களால் தொடர்ந்து உரிமைப் பறிப்பிற்கு உள்ளானவர்களாகவுமே ஆசிரியர்கள் உள்ளனர். அனைத்து வகையிலும் தொடர் நெருக்கடிக்குள்ளான ஆசிரியர் சமூகத்தின் கழுத்தைச் சுருக்கியுள்ள கயிறே பணியிலுள்ளோருக்கும் TET கட்டாயமென்ற உத்தரவு.
இதையும் எதிர்கொண்டு பணி எனும் உயிரையேனும் காப்பாற்றிக் கொள்ளலாம் என்ற சூழலில் தேர்வை எதிர்கொண்ட ஆசிரியர்கள் எவருக்குமே TETஐ வைத்து அரசியல் செய்ய வேண்டுமென்ற தேவையோ / நோக்கமோ / அதற்குண்டான பலமோ / பார்வையோ இல்லவே இல்லை.
இப்போதைய TET வினாத்தாள் வடிவமைப்பிற்கு எதிரான ஆசிரியர்களின் அனைத்து குரல்களுமே மரணத்திற்கு முந்தைய கூக்குரல்களே! இப்போது ஆட்சியில் இருப்போராவது ஏதாகிலும் நன்மை செய்துவிட மாட்டார்களா என்ற ஆதங்கமே! இக்கூக்குரலும் ஆதங்கமும் துளியும் அரசியல் அற்றவை. அதேநேரம் அணுவளவும் அறமற்றவை அல்லவே அல்ல.
2000ற்கு முன்பு Doctor, Engineer படிப்புகளுக்கு நிகராக இருந்தது Teacher Training. +2வில் 80%க்கு மேல் மதிப்பெண் பெற்றோர் மட்டுமே D.T.Ed., / B.Ed., கல்விக் கூடங்களுக்குள் நுழைய முடியும். அத்தகைய மதிப்பெண்களோடே பயிற்சி முடித்து, தேர்ச்சி பெற்று, ஆசிரியராகப் பணியேற்று 15 - 25 ஆண்டுகளாக ஆசிரியர் பணியிலுள்ள எவரும் தேர்வுகளுக்குப் பயந்தவர்கள் அல்ல.
ஆனால், வயது மூப்பின் காரணமாக அவர்களுடைய உடல்நிலையோ போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் நேரமேலாண்மைக்கு முழுத் திறன் பெற்றவை அல்ல; என்றாலும் 180 நிமிடங்களில் 150 கேள்விகளை எதிர்கொள்ளும் நேர மேலாண்மைக்கு இயன்றவரை தங்களைத் தயார்ப்படுத்தியே தேர்வறைக்குள் வந்தனர்.
TET தாள் 1ல் கேட்கப்பட்ட வினாக்களில், 70 வினாக்கள் (46%) குறைந்தது 4 நிமிடங்களுக்கு மேலான நேரமெடுக்கும் கூற்று & பொருத்துதல் வகை வினாக்கள். கணிதப் பாடத்தில் கேட்கப்பட்டவையும் பல நேரத்தை கூடுதலாகச் செலவழிக்கத்தக்க அயற்கூற்று வினாக்களே. இத்தகைய வினாக்களால் குறிப்பிட்ட 180 நிமிடங்களுக்குள் சிந்தித்து அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க போதிய நேரமில்லாமல் போனதும் TET வினாத்தாள் வடிவமைப்பிற்கு எதிரான குரல்கள் எதிரொலிக்கக் காரணம்.
இது ஒருபுறமிருக்க, TRB தனது விளக்கத்தில் அளித்துள்ளபடி, முன்னரே தெரிவிக்கப்பட்டபடியும் NCTE & SCERT வழிகாட்டல் படியே 1 - 5 வகுப்பு ஆசிரியர்களுக்கான TET 1 தாளில் 6 - 10 வகுப்புகள் வரை வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. 6 - 10 வகுப்பு வினாக்களைக் கேட்டதை யாரும் கேள்வி எழுப்பவில்லை.
ஆனால், பாடம் சார்ந்த 120 வினாக்களில் 20 கேள்விகளை மட்டும் 4 & 5 வகுப்புகளில் கேட்டுவிட்டு மீதமுள்ள 100 கேள்விகளை (83%) 6 - 10 வகுப்புகளில் இருந்து கேட்டுள்ளதைத்தான் அறமற்ற வினா வடிவமைப்பென ஆசிரியர்கள் தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
அடிப்படையில் 6 - 10 வகுப்புகளுக்கென TET தாள் 2 என்ற தனித் தேர்வு இருக்கும் சூழலில் அவர்களுக்குண்டான பாடப்பகுதிகளின் 83% வினாக்களை அதற்குத் தொடர்பில்லாத தாள் 1ல் கேட்கப்பட்டதுதான் இச்சிக்கலுக்கான மூலக் காரணமாக உள்ளது.
பாடம் சார்ந்த கூடுதல் புரிதலைத் தேவையான அளவில் சோதிப்பது நல்லதே. ஆனால் உயர் நிலைப் புரிதலுக்கென தனித் தேர்வு இருக்கையில், அதை மட்டுமே முதன்மைப்படுத்தி முந்தைய நிலையிலேயே சோதிப்பது எவ்வகையில் நியாயமாக இருக்கக் கூடும்? 49%க்கு அதிகமான பங்கு எதில் இடப்படுகின்றது என்ற அடிப்படையில் தான் பங்கின் உரிமை கோரப்படுமென்பதே அறம்.
6 - 10 வகுப்புகளில் இருந்தே 83% வினாக்களை எதிர்கொண்டு TET 1ல் தேர்ச்சி பெறுவோரை நேரடியாக 6 - 8 வகுப்புகளுக்கு பதவி உயர்வில் செல்ல அனுமதிக்கக் கூடுமா? முடியாதே. மேலும், TET 1ற்கு 83% வினாக்களை TET 2 பாடப்பகுதியில் இருந்து கேட்கப்பட்டது சரிதான் எனில், எதற்காக அரசு தாள் 1, தாள் 2 என்று இருவேறு தேர்வுகளை வைக்க வேண்டும்? மொத்தமாக ஒரே TET தேர்வை வைத்துவிடலாமே!?
ஆசிரியராக விரும்புபவர் தொடக்க நிலை & உயர் தொடக்க நிலை மாணவர்களின் உளவியல் & கற்றல் தேவைகளில் எவ்வாறு திறன்மிக்கவராக உள்ளார் என்பதைக் கண்டறிவதற்காகத்தானே TETல் இரு தனித்தனி தாள்களே கொண்டுவரப்பட்டன. ஆனால், தற்போதைய இந்த நிலை மீறிய 83% கேள்விகளால், TET தேர்விற்கான அடிப்படைத்தேவையே கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் கருதுகின்றனர். ஆம், நடந்து முடிந்துள்ள TET தாள் 1 என்பதே தொடக்கநிலையை மீறிய / முதன்மைப்படுத்தாத வினா வடிவமைப்பாக அமைந்திருந்தது என்பதே ஆசிரியர்களின் ஒருமித்த குற்றச்சாட்டாக உள்ளது.
இவ்விடயத்தில் ஆசிரியர்களின் அறமிக்க கேள்விகளில் - ஆதங்கங்களில் எவ்வித அரசியலும் இல்லை என்பதை ஆசிரியர்களின் பிரதிநிதிகளான சங்கங்கள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களைச் சந்தித்துத் தெளிவுபடுத்தி, விடைக்குறிப்புகள் தவறாக இருந்த வினாக்களுக்கும், அதீத அளவிலான நிலை மாறிய கேள்விகளுக்கும் நியாயமான இழப்பீடுகளை விதிகளுக்குட்பட்டு வழங்க வலியுறுத்துவதும், எதிர்வரும் தேர்வுகளிலும் இது போன்ற வினா நிலை மாற்றங்கள் நேராமல் இருப்பதை உறுதி செய்வதும் மட்டுமே ஆக்கப்பூர்வ அடுத்தகட்ட நடவடிக்கையாக அமைவதே ஆசிரிய சமூகத்திற்கு நன்மை தரக்கூடியதாக இருக்கும்.
தேர்வு நடந்து முடிந்த பின்னர் தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைக்கக் கோருவதும், பணிக்காலத்திற்கு மதிப்பெண் கேட்பதும் மேலும் மேலும் வழக்குகளைக் குவிக்கத்தான் செய்யுமே அன்றி தீர்வைத் தரவே தராது. ஒருவேளை தீர்ப்பே கிடைத்தாலும் அதை டெல்லி வரை சென்று இறுதித் தீர்ப்பாக்கி நடைமுறைப்படுத்த இன்னும் பல ஆண்டுகளாகலாம் என்பது நாம் கடந்து வந்துள்ள / எழுதிக் கொண்டுள்ள வரலாறு என்பதை மறந்துவிட வேண்டாம். கூடுதலாக இது போன்ற கோரிக்கைகள் பொதுவெளியில் ஆசிரியர்களை மேலும் சிறுமைப்படுத்தவே பயன்படுத்தப்படும்.
உண்மையில் ஆசிரிய சமூகத்திற்கு எதிரானவர்கள் ஆசிரிய சமூகத்திற்குள்ளேயேதான் அதிகம் உள்ளனர். எனவே, சங்கங்களின் முன்வைப்புகள் சட்டச்சிக்கல்களுக்குள் சிக்காதவையாக இருக்குமாறு நன்கு சிந்தித்துச் செயல்பட வேண்டியது இன்றைய இன்றியமையாத் தேவையாக உள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி