கூடுதலான ராணுவப் பள்ளி கேட்டு மத்திய அரசுக்கு மாநிலங்கள் கடிதம்: 'தமிழகத்திடம் இருந்து கோரிக்கை இல்லை' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 2, 2015

கூடுதலான ராணுவப் பள்ளி கேட்டு மத்திய அரசுக்கு மாநிலங்கள் கடிதம்: 'தமிழகத்திடம் இருந்து கோரிக்கை இல்லை'

கூடுதலான ராணுவப் பள்ளிகள் கேட்டு பாதுகாப்பு அமைச்சகத்திற்கு 15மாநிலங்களின் அரசுகள் கடிதம் எழுதியுள்ளன. ஆனால், இப்பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது.


தமிழகம் உட்பட நாடு முழுவதிலும் உள்ள 21 மாநிலங்களில் தற்போது ‘சைனிக் ஸ்கூல்’ எனப்படும் ராணுவப்பள்ளிகள் 25 இயங்கி வருகின்றன. இதில்,ஆந்திரா, கர்நாடகா, பிஹார் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் தலா இரண்டு பள்ளிகள் உள்ளன.இவற்றுடன் மேலும் 15 மாநிலங்களில் இருந்து 19 ராணுவப் பள்ளிகள் அமைக்க அதன் அமைச்சகத்திற்கு கோரிக்கை வந்திருக்கிறது.இதில், அசாம், பஞ்சாப், ராஜஸ்தான், ஜார்கண்ட், ஒடிஸா, மகராஷ்ட்ரா, மேற்கு வங்காளம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய 8 மாநிலங்களில் ஏற்கனவே ராணுவப் பள்ளிகள் இருந்தும் அவை, கூடுதலாக வேண்டும் எனக் கேட்டு எழுதியுள்ளனர்.இந்த எட்டில், ராஜஸ்தான் அரசு மட்டும் மேலும் இரு பள்ளிகள் ஆரம்பிக்கக் கேட்டு எழுதியுள்ளது. இதுவரை ஒரு ராணுவப்பள்ளியும் இல்லாத உபியில் ஒரே சமயத்தில் மூன்று அமைக்க கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இவற்றை ஏற்ற மத்தியஅரசு அவை அனைத்தையும் அமைப்பதற்கான பணிகளை செய்து வருகிறது. ஆனால், கூடுதல்பள்ளிகள் கேட்டிருக்கும் மாநிலங்கள் தமிழகத்தின் பெயர் இல்லை எனக் கூறப்படுகிறது.


இது குறித்து மத்திய ராணுவத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்த சைனிக் ஸ்கூல் துவக்க அரசு விரும்புகிறது. இவற்றில் இரண்டு அல்லது மூன்று பள்ளிகள் கேட்டு எழுதும் மாநிலங்களிலும் அப்பள்ளிகளை துவக்க அரசு தயாராக உள்ளது.ஆனால், தமிழகத்தின் அமராவதி நகரில் ஒரே ஒரு பள்ளி இருந்தும் ஏனோ கூடுதலாக கேட்டு அவர்கள் இதுவரை எழுதவில்லை. அப்படி எழுதினால் அதற்கு அனுமதி அளித்து அமைப்பதில் மத்திய அரசிற்கு எந்த பிரச்சனையும் இல்லை.இங்கு கூடுதலான ராணுவப்பள்ளிகள் வருவதன் மூலம் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ராணுவத்தின் உயர்பதவியில் சேர்ந்து இந்நாட்டிற்கு சேவை செய்வது எளிதாக இருக்கும். எனத் தெரிவித்தனர்.தேசிய ராணுவக் கல்வி மையத்தில் சேர வேண்டி சிறுவர்களை உடல், கல்வி மற்றும் மனோரீதியாக தயார்படுத்த 1961 ஆம் ஆண்டு பல மாநிலங்களில் சைனிக் ஸ்கூல் எனப்படும் ராணுவப் பள்ளிகள் துவக்கப்பட்டன.


இந்த திட்டத்தின் முக்கிய கொள்கை என்னவெனில், பிராந்தியங்களில் இருக்கும் அதிகாரிகளின் பதவிகளில் உள்ள வேறுபாட்டை நீக்குவது மற்றும் ராணுவக் கல்வியை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதும் ஆகும். மாநில அரசுகளின் கோரிக்கையின் பேரில் இப்பள்ளிகள், மத்திய அரசால் துவக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இதற்கு நிலம், கட்டிடம் மற்றும் விளையாட்டு மைதானம் போன்றவை மாநில அரசுகளால் அளிக்கப்பட வேண்டும்.தற்போது அமைக்கப்பட்டு வரும் ராணுவப்பள்ளிகள் எட்டு மாநிலங்களில் முதன்முறையாக அமையவிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி