அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு (ஏ.ஐ.சி.டி.இ.,) உத்தரவின்படி பொறியியல் கல்வி வகுப்புகள், நாடு முழுவதும் ஆகஸ்ட், 1ம் தேதி துவங்கப்பட உள்ளன.இதற்கு ஏற்ப தமிழகத்தில் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகள் சேர்க்கைக்கான கலந்தாய்வை, ஜூலைக்குப் பதில், ஒரு மாதம் முன்பாக, ஜூன் முதல் வாரத்திலேயே துவக்குவதற்கு, ஆலோசனைகள் நடந்து வருகின்றன.ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் மான்தா, கடந்த ஆண்டு, துணைவேந்தர்கள் கூட்டத்தை கூட்டியபோது, பொறியியல் படிப்பு துவங்கும் காலத்தை,முறைப்படுத்துவதன் அவசியம் குறித்து பேசினார். அவர் பேசும்போது குறிப்பிட்டதாவது:ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு தேதியில், பொறியியல் வகுப்புகள் துவங்குகின்றன. தேர்வுகளும், வெவ்வேறு தேதிகளில் நடக்கின்றன. இதனால், தேர்வு எழுதாத ஒரு மாணவர், வேறு மாநிலத்தில் உள்ள கல்லூரிக்கு மாற விரும்பும்போது, அந்த மாநிலத்தில், தேர்வு முடிந்து விடும் நிலை இருக்கிறது.இது போன்ற குழப்பங்களை தவிர்க்க, நாடு முழுவதும், ஆகஸ்ட், 1ம் தேதி, பொறியியல் வகுப்புகள் துவங்கும் வகையில், சேர்க்கை அட்டவணையை மாற்ற வேண்டும். 2013-14ம் கல்விஆண்டில், புதிய அட்டவணைப்படி, வகுப்புகள் துவங்க வேண்டும்.தமிழகம் போன்ற மாநிலங்களில், கலந்தாய்வு முறை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட மாநிலங்கள் ஆலோசித்து, எங்களுக்கு முடிவை தெரிவிக்கலாம். இவ்வாறு மான்தா தெரிவித்திருந்தார்.இந்நிலையில், ஏ.ஐ.சி.டி.இ., அறிவுறுத்தலின்படி, ஆகஸ்ட், 1ம் தேதி, பொறியியல் வகுப்புகள் ஆரம்பிப்பதற்கு ஏற்ப, கலந்தாய்வு அட்டவணையை நிர்ணயிக்கும்படி, அண்ணா பல்கலைக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.வழக்கமாக, ஜூலை இரண்டாவது வாரத்தில், கலந்தாய்வு துவங்கி, ஆகஸ்ட், 20 தேதி வரை நடக்கும். கடந்த ஆண்டு, பொது கலந்தாய்வு, ஜூலை, 13ல் துவங்கி, ஆகஸ்ட், 18 வரை நடந்தது. துணை கலந்தாய்வுகள் காரணமாக, ஆகஸ்ட் இறுதி வரை, நாட்கள் கரைந்தன. இதனால், செப்டம்பரில் தான், வகுப்புகள் துவங்கின.வரும் கல்வி ஆண்டில், ஆகஸ்ட், 1ம் தேதியே வகுப்புகள் துவங்கும் வகையில், ஜூன், 15 தேதியில் துவக்கி, ஜூலை, 15தேதிக்குள் முடிக்க, ஆலோசனைகள் நடந்து வருகின்றன. ஓரிரு கூட்டங்களுக்குப் பின், இறுதி முடிவு எடுக்கப்படும் என, தெரிகிறது.இதுகுறித்து, பல்கலை வட்டாரம் கூறியதாவது: வழக்கமாக, ஜூலை இரண்டாவது வாரத்தில், கலந்தாய்வை துவக்கி, ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் முடிக்கிறோம். ஆகஸ்ட், 1ம் தேதி, வகுப்புகள் துவங்க வேண்டும் எனில், ஜூன் மாதமே, கலந்தாய்வை நடத்த வேண்டும்.இதற்கு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள், முன்கூட்டியே வெளியாக வேண்டும். அவர்கள், மிக விரைவாக, முடிவை வெளியிட்டால், கலந்தாய்வை விரைந்து முடிக்க, நாங்கள் தயாராக இருக்கிறோம். இவ்வாறு, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.மே, 10 தேதிக்குள், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானால்,விண்ணப்பங்கள் வழங்கவும், பூர்த்தி செய்து தரவும், அடுத்த, 20 நாட்கள் போதும் என, பல்கலை வட்டாரங்கள் கருதுகின்றன.இதற்கு முன்னதாக, ஜூன், 15 தேதிக்குள், மருத்துவ படிப்பு சேர்க்கை கலந்தாய்வு முடிக்க வேண்டும் எனவும், பல்கலை வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.வழக்கமாக, பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, இரண்டாவது வாரத்திற்குள் வெளியாகும். கடந்த ஆண்டு, மின்வெட்டு பிரச்னை உள்ளிட்ட காரணங்களால், மே, 22ம் தேதி தான் வெளியானது. ஆனால், இந்த ஆண்டு, வழக்கம்போல், மே, 15 தேதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து தேர்வுத்துறை வட்டாரங்கள் கூறுகையில், "மே, 15என்பதை, ஐந்து நாட்கள் முன்னதாக, 10ம் தேதிக்குள் வெளியிட,நடவடிக்கை எடுக்க முடியும்" என, தெரிவித்தன.இந்த விவகாரம் தொடர்பாக, அண்ணா பல்கலை, தேர்வுத்துறை அதிகாரிகள், விரைவில் கூடி ஆலோசிக்க திட்டமிட்டுள்ளனர். ஓரிரு கூட்டங்களுக்குப் பின், இறுதி முடிவு எடுக்கப்படும் என,கூறப்படுகிறது.கடந்த ஆண்டு, 1.8 லட்சம் இடங்கள், கலந்தாய்வு மூலம் நிரப்பநடவடிக்கை எடுக்கப்பட்டதில், 1.3 லட்சம் இடங்கள் மட்டுமே நிரம்பின. 50 ஆயிரம் இடங்கள், கடைசிவரை நிரம்பவில்லை.கடந்த ஆண்டு, கலந்தாய்வு துவங்கும்போது, பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை, 507 என, இருந்தது. கலந்தாய்வு துவங்கியபின், 30க்கும் மேற்பட்ட புதிய கல்லூரிகள், கலந்தாய்வில் இணைந்தன. இந்த ஆண்டும், 35க்கும் மேற்பட்ட கல்லூரிகள், ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் கேட்டு, விண்ணப்பித்துள்ளன.கலந்தாய்வு துவங்குவதற்குள், இந்த கல்லூரிகளுக்கு, அங்கீகாரம்கிடைத்துவிடும். புதிய கல்லூரிகள் வருகை காரணமாக, கலந்தாய்வுஇடங்கள், 2 லட்சமாக உயரும் என, அண்ணா பல்கலை எதிர்பார்க்கிறது.கடந்த ஆண்டு, இ.சி.இ.,-மெக்கானிக்கல், இ.இ.இ., ஆகிய மூன்று பாடப் பிரிவுகளும், மாணவ, மாணவியர் மத்தியில், அமோக வரவேற்பை பெற்றன. கடந்த ஆண்டு, ஆகஸ்ட் 11ம் தேதி நிலவரப்படி, இ.சி.இ., பிரிவில், 23 ஆயிரத்து, 108 பேரும், மெக்கானிக்கல் பிரிவில், 21 ஆயிரத்து 628 பேரும், இ.இ.இ., பிரிவில், 12 ஆயிரத்து, 308 பேரும் சேர்ந்தனர்.கலந்தாய்வு இறுதி நாளில், இதே பிரிவுகள் தான், டாப்-3 வரிசையில் இருந்தன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி