IAS - முதன்மைத் தேர்வு மாற்றம் வாபஸ்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 22, 2013

IAS - முதன்மைத் தேர்வு மாற்றம் வாபஸ்!

சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வில் அறிவிக்கப்பட்ட மாற்றங்கள் தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கொண்டு வந்த மாற்றங்களுக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து,அந்தமாற்றங்கள் தற்போதுவாபஸ் பெறப்பட்டுள்ளன. அதன்படி, இனிமேல் நடைபெற இருக்கும் மெயின் எனப்படும் முதன்மைத் தேர்வுகள் எப்படி இருக்கும் என்ற விவரங்களை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வில் முன்பு இருந்ததுபோல, அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதாவது பிராந்திய மொழியிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுத்துத் தேர்வை எழுதலாம். அதாவது, முன்புபோல தமிழிலும் எழுதலாம். பிராந்திய மொழிகளில் எழுத வேண்டுமானால்,குறைந்தது 25 பேராவது இருக்க வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது. பிராந்திய மொழியில் தேர்வு எழுத விரும்புபவர்கள், பட்டப்படிப்பு நிலையில் அந்த மீடியத்தில் படித்துத் தேர்வு எழுதியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் நீக்கப்பட்டுள்ளது.அத்துடன், இலக்கியத்தில் பட்டப் படிப்பு படித்திருந்தால்தான்இலக்கியத்தை விருப்பப் பாடமாக (அதாவது அரசியலமைப்புச் சட்டத்தில் 8-ஆவது பிரிவில் கூறப்பட்டுள்ள 22 மொழிகள் மற்றும் ஆங்கிலம்) எடுக்க அனுமதிக்கப்படுவர் என்ற நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழ் இலக்கியத்தில் பட்டப் படிப்பு படிக்காதவர்கள் கூட, தமிழ் இலக்கியத்தை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள முடியும்.கட்டுரைக்கான ஆங்கிலப் பாடத்தாளுக்கு நூறு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று ஏற்கெனவே வெளியிடப்பட்ட அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதாவது, நவீன இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலப் பாடத்தில் தலா 300 மதிப்பெண்களுக்கான தேர்வுகளில் தகுதி பெற வேண்டும். இந்த இரண்டு தாள்களும் தகுதித் தேர்வாக மட்டுமே கருதப்படும். இத்தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்கள், மெயின் தேர்வுக்கான மொத்த மதிப்பெண்களின் கணக்கில் சேர்க்கப்படுவதில்லை.கட்டுரைத்தாளுக்கு 250 மதிப்பெண்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரைத் தாளை, எந்த மொழியிலும் எழுதலாம். ஜெனரஸ் ஸ்டடீஸ் என்ற பொது அறிவுப் பாடப் பிரிவில் நான்கு தாள்கள் இருக்கும். ஒவ்வொரு தாளுக்கும் 250 மதிப்பெண்கள் வழங்கப்படும். அத்துடன் விருப்பப் பாடத்தில் இரண்டு தாள்கள். அவற்றுக்கு தலா 250மதிப்பெண்கள்.நடைபெற இருக்கும் இந்த ஆண்டு மெயின் தேர்வில் தலா 300 மதிப்பெண்கள் கொண்ட 2 தகுதித் தாள்கள், தலா 250 மதிப்பெண்கள் கொண்ட 4 கட்டாயப் பொதுத்தாள்கள், தலா 250 மதிப்பெண்கள் கொண்ட 2 தாள்கள் விருப்பப் பாடத்தில் இருக்கும். எனவே, மெயின் தேர்வுக்கான மொத்த மதிப்பெண்கள் 1,750 ஆகும். எழுத்துத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வுக்கு275 மதிப்பெண்கள் வழங்கப்படும். அதாவது, மெயின் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளில் மொத்தம் 2,025 மதிப்பெண்களுக்கு பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் சிவில் சர்வீஸ் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி