வந்தது சயின்ஸ் எக்ஸ்பிரஸ்: ஒரே நாளில் 40 பள்ளிகள் விசிட். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 21, 2013

வந்தது சயின்ஸ் எக்ஸ்பிரஸ்: ஒரே நாளில் 40 பள்ளிகள் விசிட்.

கோவைக்கு வந்துள்ள சயின்ஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை, முதல் நாளில் 40 பள்ளிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பார்த்து, பல்வேறு தகவல்களைச் சேகரித்துச் சென்றனர்.சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையுடன் இணைந்து, சயின்ஸ் எக்ஸ்பிரஸ்-பயோடைவர்சிட்டி ஸ்பெஷல் என்ற பெயரிலான கண்காட்சி ரயிலை, ரயில்வேஅமைச்சகம் இயக்கி வருகிறது.கடந்த 2007 அக்டோபரில் டில்லியில் பயணத்தைத் துவக்கிய இந்தரயில், இதுவரை 96 ஆயிரம் கி.மீ., தூரத்தைக் கடந்துள்ளது. இந்தரயில் தற்போது கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துள்ளது. 6வது பிளாட்பார்மில் நிறுத்தப்பட்டுள்ளது; வரும் 23ம் தேதி மாலை 5.00 மணி வரை இதனை மக்கள் பார்வையிடலாம்.இந்த ரயிலை, கோவை கலெக்டர் கருணாகரன், நேற்று காலையில் திறந்து வைத்துப் பார்வையிட்டார். அதன் பின் மாணவ, மாணவியர் அனுமதிக்கப்பட்டனர். காலை 10.00 மணியிலிருந்து மாலை வரையிலும் இடைவெளியின்றி பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவியர் இந்தகண்காட்சி ரயிலைப் பார்வையிட்டனர்.நேற்று ஒரே நாளில் 33 மெட்ரிக் பள்ளிகள், 7 அரசுப் பள்ளிகள் மற்றும் 2 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் இந்த ரயிலைப் பார்வையிட்டு, பல்வேறு தகவல்களையும் சேகரித்துச் சென்றனர். இந்தியாவிலுள்ள புவி அமைப்புகள், ஆறுகள், மலைகள், உயிரினங்கள் பற்றி விளக்கும் 300 விளக்கப்படங்கள், 35 மாதிரிகள், கலந்துரையாடல் தொடர்பான 15 அரங்குகள் இதில் இடம் பெற்றுள்ளன.கோவையில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையைப் பற்றியும், நீலகிரி பல்லுயிர்க்கோவை குறித்த தனிப்பெட்டியும் இதில் அமைந்திருப்பது, இங்குள்ள மக்களை மேலும் ஈர்க்கின்ற சிறப்பு அம்சமாகும்.கண்காட்சியில் இடம் பெற்றுள்ள விளக்கப்படங்கள் குறித்து, அகமதாபாத்திலுள்ள விக்ரம் சாராபாய் அறிவியல் தகவல் மையத்தைச் சேர்ந்த 30 பயிற்றுனர்கள், அயராமல் விளக்கமளித்து வருகின்றனர். குழந்தைகளை குதூகலப்படுத்தும் கிட்ஸ் ஜோன் பெட்டியில், ஆரம்பப் பள்ளி மாணவ, மாணவியரை உற்சாகப்படுத்தி அறிவியல் அறிவை ஊட்டக்கூடிய பல்வேறு செயல்முறைகளும் காட்டப்படுகின்றன.உயர்நிலை மாணவ, மாணவிகளுக்காக, பிளாட்பார்ம் ஆக்டிவிட்டிஸ் என்றபெயரில், அறிவுப்பூர்வமான பல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இறுதியாக அமைந்துள்ள ஜாய் ஆப் சயின்ஸ் என்ற பெட்டியிலுள்ள ஆய்வகத்தில் மேல்நிலை மற்றும் கல்லூரி மாணவ, மாணவியரின் விஞ்ஞானஅறிவை மேம்படுத்தும் வகையில் பலவிதமான செய்முறை விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.இன்னும் 3 நாட்கள் மட்டுமே நிற்கவுள்ள இந்த ரயிலை, கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களிலுள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் அனைவரும் பார்வையிட வர வேண்டுமென்று சுற்றுச்சூழல் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.கலெக்டர் கருணாகரன் கூறுகையில், ”இந்தியாவின் அனைத்து விதமான புவி அமைப்புகள், ஆறுகள், மலைகள், வன உயிரினங்கள், கடல் வாழ் உயிரினங்கள், சூழலின் மகத்துவம் என ஏராளமான அரிய செய்திகளை உள்ளடக்கியுள்ள இந்த கண்காட்சி ரயில், ஓர் அறிவுப் பொக்கிஷமாகும். கோவைக்கு இந்த ரயில் வந்திருப்பது மிகப்பெரிய வாய்ப்பாகும். இதை, மாணவ, மாணவியர் யாரும் தவற விடக்கூடாது” என்றார்.பள்ளிகள் பதிவுக்கு: முதல் நாளான நேற்று, ரயிலைப் பார்வையிட வந்த மாணவ, மாணவியர் பலரும் கூரையில்லாத பகுதியிலும், பின்புற நுழைவாயிலிலும், குறுகலான சுரங்க நடைபாதையிலும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. ரயில் நிற்கும் 6வது பிளாட்பார்மில் ரயிலை ஒட்டி அமைந்துள்ள நீண்ட கூரையின் கீழ் இவர்களை வரிசையில் நிறுத்த ஏற்பாடு செய்தால், இந்த சங்கடங்களைத்தவிர்க்க முடியும்.கண்காட்சி ரயிலைப் பார்வையிட விரும்பும் பள்ளி நிர்வாகங்கள், 94884 48016, 94898 75076, 9442709120, 74026 22738, 74026 22772,74026 22779 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு, வர வேண்டிய நேரத்தைப் பதிவு செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி