ஒரே நாளில் டி.இ.டி., - ரயில்வே தேர்வு: குழப்பத்தில் தேர்வர்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 8, 2013

ஒரே நாளில் டி.இ.டி., - ரயில்வே தேர்வு: குழப்பத்தில் தேர்வர்கள்.

டி.இ.டி., மற்றும் ரயில்வே தேர்வுகள், ஒரே நாளில் (18ம் தேதி) நடப்பதால், இந்த இரு தேர்வுகளுக்கும் விண்ணப்பித்துள்ள, 5,000த்திற்கும் மேற்பட்டோர், எந்தத் தேர்வை எழுதுவது என, தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்து உள்ளனர்.அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, வரும், 17, 18ம் தேதிகளில், ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்கிறது. 17ம் தேதி காலை, இடைநிலை ஆசிரியர் பணிக்கான, முதல் தாள் தேர்வு நடக்கிறது.தமிழகம் முழுவதும், 870 மையங்களில் நடைபெறும் தேர்வை, 2.68 லட்சம் பேர் எழுதுகின்றனர். 18ம் தேதி காலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு நடக்கிறது. 1,070 மையங்களில் நடைபெறும் தேர்வை, 4.11 லட்சம் பேர் எழுதுகின்றனர். காலை, 10:00 மணிக்குத் துவங்கி, 1:00 மணி வரை, தேர்வு நடக்கிறது. 7 லட்சம் பேர் தேர்வை எழுதுவதால், தேர்வுக்கான பணிகளை, டி.ஆர்.பி., தீவிரமாகச் செய்து வருகிறது.இந்நிலையில், தமிழகத்தில், ரயில்வேயில் காலியாக உள்ள, 700 உதவி ரயில் நிலைய அதிகாரி பணியிடங்களுக்கு, வரும், 18ம் தேதி தேர்வு நடக்கிறது. இத்தேர்வை, தமிழகம் முழுவதும், 14 ஆயிரம் பேர் எழுத உள்ளனர்.டி.இ.டி., - ரயில்வே தேர்வுகள் என, இரண்டிற்கும், 5,000த்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். இரு தேர்வுகளும் ஒரே நேரத்தில் வருவதால், எந்தத் தேர்வை எழுதுவது என, தெரியாமல் பலர் சிக்கலுக்கு உள்ளாகி உள்ளனர்.இதுகுறித்து, இரு தேர்வுகளுக்கும் விண்ணப்பித்துள்ள, தங்க முத்துசாமி கூறியதாவது: டி.இ.டி., மற்றும் உதவி ரயில் நிலைய அதிகாரி தேர்வு என, இரு தேர்வுகளுக்கும் விண்ணப்பித்து உள்ளேன்.இரு தேர்வுகளும் ஒரே நாளில் நடைபெற உள்ளது. இதனால், எந்தத் தேர்வை எழுதுவது என, தெரியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்.இதுகுறித்து, டி.ஆர்.பி.,யிடம் முறையிட்டதற்கு, தேர்வு தேதிகளில்மாற்றம் செய்ய முடியாது என, தெரிவித்து விட்டனர். தேர்வு தேதிகளை அறிவிக்கும் போது, சம்பந்தப்பட்ட துறைகள் கலந்தாலோசித்தால், இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.மத்திய, மாநில அரசு தேர்வுகளை நடத்தும் போது, பலமுறை இது போன்றுஒரே நாளில் தேர்வுகள் அமைகின்றன. இதனால், தேர்வு எழுதுவோரே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மத்திய அரசு அறிவித்துள்ள தேர்வு தேதிகளை கவனத்தில் கொண்டு, மாநில அரசு தங்கள் நடத்தும் தேர்வுகளுக்கான தேதிகளை அறிவிக்க வேண்டும் என, கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி