உடுமலை அருகே அரசுப்பள்ளியில், வகுப்பறை கட்டட பராமரிப்பு, சுற்றுச்சுவர் போன்ற கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, கிராமப்புற மாணவர்களுக்கு அரசு உதவ வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.குடிமங்கலம் ஒன்றியம் பெதப்பம்பட்டியில், கடந்த 1962 ம் ஆண்டு அரசுப்பள்ளி துவக்கப்பட்டது. போதிய பராமரிப்பு இல்லாததால், கட்டடத்தின் ஜன்னல் கம்பிகள் பல ஆண்டுகளாக உடைந்து தொங்கி வருகிறது. மேற்கூரையில், கான்கிரீட் பூச்சு உதிர்ந்து வருகிறது.கட்டடத்தின் உறுதித்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது குறித்து பெற்றோர் மற்றும் மாணவர் தரப்பில், தொடர் புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. வகுப்பறையிலிருந்து மாணவர்கள் வெளியேறும் நடைபாதையும் பராமரிப்பு இல்லாமல் பயமுறுத்தி வருகிறது. தற்போது, இப்பள்ளியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.போதிய வகுப்பறைகள் இல்லாத நிலையில், தற்போதுள்ள இரு மாடி கட்டடமும் பயன்படுத்த முடியாத நிலையை நோக்கிச்செல்வதால், மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாகும் நிலை உள்ளது. இப்பள்ளி, 4 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. பள்ளியின் வடக்குப்பகுதியில், கட்டப்பட்ட சுற்றுச்சுவர் பராமரிப்பு இல்லாமல் இடிந்து விழுந்துள்ளது. இதன் மறுபுறம் முட்புதர் மண்டி கிடப்பதால், விஷ ஜந்துகள் பள்ளிக்குள் புகுந்து விடும் அபாயம் உள்ளது.இரவு நேரங்களில், சமூக விரோதிகள் முட்காடு வழியாக பள்ளி வளாகத்திற்குள் புகுந்து பல்வேறு அவலங்களை அரங்கேற்றுகின்றனர். பள்ளி வளாகம் முழுவதும் சுற்றுச்சுவர் கட்ட கல்விக்குழு மற்றும்பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.சுற்றுச்சுவர் இல்லாததால், பள்ளி வளாகத்திலுள்ள பொருட்களுக்கு பாதுகாப்பு இல்லை. பள்ளி வளாகத்திலுள்ள சத்துணவு மைய கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் ஓராண்டாக பீதி ஏற்படுத்தி வருகிறது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் உண்ணும் சத்துணவு தயாரிக்கும் கட்டடத்தின் அவல நிலை பெற்றோரை வேதனையடையச் செய்கிறது.இந்த சத்துணவுக்கூடத்தை பராமரிக்க ஒன்றிய மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. சத்துணவுகட்டடத்தால், அசம்பாவிதங்கள் நடக்கும் முன் கட்டடத்தை புதுப்பிக்க வேண்டும். இப்பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் ஒன்றிய அலுவலகத்தின் எதிரில், 7 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது.மைதானத்திற்கு பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு பகுதியில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. மறு பகுதியில் சுற்றுச்சுவர் இல்லாததால், ஆக்கிரமிப்பு உட்பட பிரச்னைகள் ஏற்படும் அவலம் உள்ளது. மீதியுள்ள பகுதிக்கும் சுற்றுச்சுவர் கட்டப்பட வேண்டும்.இதுகுறித்து பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கூறுகையில்,"இப்பள்ளி பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில், தொடர்ந்து முன்னேறி வருகிறது. வகுப்பறை கட்டட பராமரிப்பு, சுற்றுச்சுவர் உட்பட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால், மாணவர்கள் கல்வித்தரம் உயர வாய்ப்பாக அமையும்" என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி