பதிவுமூப்பு இருந்தும் பணி வழங்கப்படவில்லை நுகர்பொருள் வாணிபக்கழக இயக்குநர்பதில் அளிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 26, 2013

பதிவுமூப்பு இருந்தும் பணி வழங்கப்படவில்லை நுகர்பொருள் வாணிபக்கழக இயக்குநர்பதில் அளிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு


பதிவுமூப்பு இருந்தும் பணி வழங்காதது குறித்து நுகர்பொருள் வாணிபக்கழக இயக்குநர் பதில் அளிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கொள்முதல் நிலையங்கள்

மதுரை மாவட்டம்
உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் டி.செந்தில்குமார். இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
தமிழகத்தில் அரசு சார்பில் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத பகுதிகளில் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு எழுத்தர், உதவியாளர், காப்பாளர் ஆகிய பணிகளில் தற்காலிகமாக ஆட்கள் வேலை செய்வார்கள். இதில் எழுத்தராக நான் 2.2.2011 அன்று பணியில் சேர்ந்தேன். சொக்கத்தேவன்பட்டியில் வேலை பார்த்த என்னை செல்லம்பட்டிக்கு மாற்றம் செய்தனர். அங்கு சில மாதங்கள் வேலை செய்தபின் விடுவித்தனர். அதன்பின் 21.11.2011 முதல் 30.4.2012 அன்று வரை மீண்டும் வேலை செய்தேன்.இந்தநிலையில் தற்காலிகமாக வேலை செய்தவர்களின் ஒட்டுமொத்த பதிவுமூப்பு பட்டியலை நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மேலாண்மை இயக்குநர் அந்தந்த மாவட்ட மண்டல அலுவலர்களிடம் கேட்டார். அதன்படி அவர்கள் பட்டியலை அனுப்பி வைத்தனர்.

புறக்கணிப்பு

அந்த பட்டியலில் நான் 24–வது இடத்தில் இருந்தேன். 40 காலிப்பணியிடங்களில் முதற்கட்டமாக 19 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அடுத்தகட்டமாக 5 பணியிடங்களுக்கு உள்ளூரைச் சேர்ந்த என்னை புறக்கணித்து நாகை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுவிட்டனர். எனக்கு வாய்ப்பு இருந்தும் பணி வழங்கப்படவில்லை. இதுகுறித்து கடந்த 29.6.2013 அன்று மேலாண்மை இயக்குநரிடம் மனு அளித்தேன். இதுவரை பதில் அளிக்கப்படவில்லை. எனவே எனக்கு எழுத்தர் வேலை வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

பதில் மனு தாக்கல்

இந்த மனு குறித்து நுகர்பொருள் வாணிபக்கழக மதுரை மண்டல மேலாளர் கே.மணி தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:–
மதுரையில் 19 பணியிடங்கள் இருந்தன. அதில் 13 இடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன. மனுதாரருக்கு வாய்ப்பு இருக்கலாம். ஆனால் சிவில் சப்ளை கார்ப்பரேசனுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையே பணியாளர் நியமனத்தில் மாநில ஒருங்கிணைந்த பதிவுமூப்பையே பின்பற்றலாம் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட பதிவுமூப்பில் யாரும் இருக்க முடியாதென யூகித்து, அதன்படி நாகை,திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை பணியமர்த்தி உள்ளோம். மனுதாரருக்கு வேலை அளிக்க மேலாண்மை இயக்குநரிடம் பரிந்துரைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண்மை இயக்குநர் நாளை மறுநாள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி