மலைவாழ் குழந்தைகளுக்கு எட்டாக் கனியாகும் கல்வி: அரசின் கவனம் பாயுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 26, 2013

மலைவாழ் குழந்தைகளுக்கு எட்டாக் கனியாகும் கல்வி: அரசின் கவனம் பாயுமா?

தொண்டாமுத்தூர் அருகே உள்ள அட்டுக்கல் மலை கிராமத்தில், பள்ளிக்கூடம் இல்லாததால், அங்குள்ள பெரும்பாலான குழந்தைகளுக்கு, கல்வி என்பது எட்டாக் கனியாகவே உள்ளது. இங்குள்ள
குழந்தைகள், அடிப்படை கல்வியாவது பெற, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற, கோரிக்கை மேலோங்கியுள்ளது.கோவையில், தொண்டாமுத்தூர் அருகில் உள்ள அட்டுக்கல் மலையடிவாரத்தில், 80 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு, பள்ளிக்கூடம் இல்லாததால், கல்வி கற்பதன் முக்கியத்துவம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. இதனால், அங்கிருக்கும் பெரும்பாலான குழந்தைகள், பள்ளி வாசலை மிதிக்க வாய்ப்பில்லாத நிலை உருவாகியுள்ளது. கட்டாய கல்வி சட்டத்தின் படி, மக்கள் வசிப்பிடங்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு அருகில் தொடக்கப்பள்ளியும், மூன்று கிலோ மீட்டருக்கு அருகில் நடுநிலைப்பள்ளியும், ஐந்து கிலோ மீட்டருக்குள் உயர்நிலைப்பள்ளியும், ஏழு கிலோ மீட்டருக்குள் மேல்நிலைப்பள்ளியும் இருக்க வேண்டும்.ஆனால், அட்டுக்கல் கிராமத்தில் இருந்து, மூன்று கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும், தொண்டாமுத்தூர் பகுதியில், ஒரு மேல்நிலைப்பள்ளி மட்டுமே உள்ளது. பள்ளி செல்ல, போதிய போக்குவரத்து வசதியில்லாததால், அங்குள்ள குழந்தைகள் பள்ளி வாசலை மிதிக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. கல்வியால் மட்டுமே மிகப்பெரிய சமூக மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதாலே, அரசு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் நிதியை கல்வித் துறைக்காக ஒதுக்கி வருகிறது.ஆனால், எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத, இதுபோன்ற மலைப்பகுதிகளில், குழந்தைகள்கல்வி அறிவின்றி இருப்பது வேதனைக்குரியதே. அட்டுக்கல் பகுதியில் வாழும் மலைவாழ்மக்கள் கூறுகையில், "எங்கள் பகுதியில் மாலை நேரங்களில் விலங்குகள் அதிகம் வருவதாலும், போக்குவரத்து வசதியில்லாததாலும், பள்ளிக்கூடம் அனுப்புவதில்லை. எங்கள் பகுதியிலே பள்ளிக்கூடம் வந்தால், படிக்க அனுப்புவோம்" என்றனர்.காட்டுயிர் ஆர்வலர் கோவை சதாசிவம் கூறுகையில், "கோவையில், 50 க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்கள் உள்ளன. பெரும்பாலான மலைவாழ் கிராமங்களில், உண்டு உறைவிட பள்ளியும், தொடக்க பள்ளியும் உள்ளது. அட்டுக்கல் கிராமத்தில் உள்ளகுழந்தைகளின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு, அங்குள்ள குழந்தைகளுக்கு அடிப்படைகல்வியாவது பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.எஸ்.எஸ்.ஏ., கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் லத்திகா கூறுகையில், "அட்டுக்கல் மலை கிராமத்தை போல, பள்ளிக்கூடம் தேவைப்படும் மற்ற இடங்கள் குறித்தும், அரசிடம்அறிக்கை தாக்கல் செய்துள்ளோம். விரைவில், இங்கு பள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி