நடுவணரசின் மாதிரிப் பள்ளித் திட்டம் நாட்டின் கூட்டாட்சிக் கொள்கைக்கு முரண்பட்டது. ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சிப் பாதையில் வெவ்வேறு நிலைகளில்உள்ளன. கல்வி அளிப்பில்
சிலமாநிலங்கள் வெகுவாக முன்னேறியும், சில மிகப் பிற்போக்கான நிலையிலும் இருப்பதைக் காணலாம். அவரவர் நிலையறிந்து அதற்கேற்ற திட்டத்தை வகுத்துச் செயல்படுத்துவதன் மூலமே அனைவரும் கற்றவர்என்ற குறிக்கோளை எட்ட முடியும். விடுதலை பெற்ற நாள் தொட்டு நாடு முழுமைக்கும் ஒரே கல்வித் திட்டம் கொணர்ந்திட முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் எப்பயனும் விளையவில்லை என்பதே யதார்த்தம்.கல்வி பொதுப் பட்டியலில் நாட்டில் அவசரநிலை அமுல் படுத்தப்பட்ட 1975-ஆம் ஆண்டிலேயே சேர்க்கப்பட்டும் கடந்த சில ஆண்டுகளாகத் தான் நடுவணரசு தன்னிச்சையாக முடிவுகள் எடுத்து நாட்டு மக்களின் மீது திணிக்கத் தொடங்கியிருக்கிறது. மாநில அரசுடன் கலந்து முடிவு செய்ய வேண்டுமென்ற நாகரிகம் இல்லாது இயங்குவது நாட்டின் ஒற்றுமைக்குப் பேராபத்து.
மீண்டும் கல்வியை மாநிலப்பட்டியலுக்குக் கொணர்ந்திட அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசியம் எழுந்திருக்கிறது.மாதிரிப் பள்ளிகள் யாருக்காக, எந்த நோக்கத்திற்காக என்பது ஒரு பெரிய வினாக்குறி. முன்னர் ஒவ்வொரு ஆசிரியர் கல்வி நிறுவனத்தோடும் ஒரு மாதிரிப் பள்ளி இணைக்கப் பட்டிருக்க வேண்டுமென்பது விதி முறை. அப்பள்ளிகளில் அனுபவம் நிறைந்த மூத்த ஆசிரி யர்கள் பயிற்சி ஆசிரியர்கட்குக் கற்பித்தலில் வழிகாட்டியாகத் திகழ்வர்.
மேலும் பயிற்சி மாணவர் வகுப்புகள் எடுக்குமிடமும் மாதிரிப் பள்ளிகளாக இருந்தன. ஆனால் இன்று புற்றீசல் போலத் தொடங்கப் பெற்றுள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் மாதிரிப் பள்ளிகள் ஏதும் இல்லாமலே இயங்கி வருகின்றன.இன்றையக் கல்விச் சீரழிவிற்கு இதுவும் ஒரு காரணம். தற்பொழுது தொடங்கப்படவுள்ள மாதிரிப் பள்ளிகள் அவற்றைச் சுற்றியுள்ள பள்ளி ஆசிரியர்களுக்குக் கற்றல்-கற்பித்தலை மேம்படுத்த உதவ மாட்டா. பாடத் திட்டங்கள் வேறு, தேர்வுமுறை வேறு, பள்ளிச் சூழலே வேறு. ஒராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எல்லா வசதிகளும் நிரம்பப் பெற்ற மாதிரிப் பள்ளிகள் வழிகாட்ட இயலாது.
மாதிரிப் பள்ளிகள் சி.பி. எஸ்.ஈ. பாடத்திட்டத்தை ஆங்கி லம் அல்லது இந்தி மொழி வாயிலாகக் கற்பிப்பர். பல மாநிலங்களில் மாநில மொழியே பயிற்று மொழியாகும். மொழிக் கொள்கையும் சி.பி. எஸ்.ஈ. முறைக்கு முரண்பட்டிருக்கிறது. மொழிவாரி மாநிலங்கள் உருவானதன் நோக்கங்களே முறியடிக்கப் படும். பேரா.யஷ்பால் தலைமையில் அமைந்த சுமையின்றி கற்றல் குழு தனது அறிக்கையில் கேந்திரியா வித்யாசாலைகள், நவோதய பள்ளிகள் தவிர பிற தனியார் சி.பி.எஸ்.ஈ. பள்ளிகள் அந்தந்த மாநில வாரியங்களோடு இணைந்து கொள்ள வேண்டுமென்று கூறிய பரிந்துரைகாற்றில் விடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஏன் ஒவ்வொரு ஒன்றியத்திலும் இருவகைப் பள்ளிகள் இயங்கும். ஒன்று ஏதுமில்லார்க்கு என்றும்,மற்றது தெரிவு செய்யப்பட்ட ஒருசிலர்க்கு என்பதும் அரசியல் சட்டம் அளித்துள்ள சமத்துவம், சமநீதி உரிமைகளை மறுக்கும் செயலாகும். இப் பள்ளிகளில் அரசின் பொறுப்பிலுள்ள இடங்கள் நுழைவுத் தேர் வின் மூலம் நிரப்பப்படும்.தனியார் நிர்வாகங்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களைத் தாம் விரும்பியதுபோல நிரப்பிக் கொள்ளலாம். அதாவது மிக அதிக விலைக்கு விற்கலாம். நுழைவுத் தேர்வுகளுக்கென்று ஆயத்தப் பயிற்சி மையங்கள் தோன்றிவசதி மிக்கவரிடமிருந்து பணம் பறிக்கும்.எளியவர்க்கு இம்மையங்களில்சேர இயலாததால் அவர்கள் நுழைவுத் தேர்வில் வெற்றி பெறும் வாய்ப்பு மிகக் குறைவு. மற்றும் நிர்வாக இடங்களுக்கு இட ஒதுக்கீடு முறையினின்று விலக்குஅளிக்கப்பட்டிருப்பது சமூகநீதியை மறுப்பதாகும். அயலான் தோட்டம் நன்றாக இருக்கின்றது என்று எண்ணுவது மனித இயல்பு.
நம் காவல்துறையை விட சி.பி.ஐ.மேலானது என்று நினைப்பதுபோல, நமது பாடத் திட்டத்தைவிட சி.பி.எஸ்.ஈ. பாடத் திட்டம் மேலானது என்று மக்களிடையே பரவலான கருத்து நிலவுகின்றது. தமிழ் நாட்டுப் பள்ளிப் பாடத் திட்டம் தரத்தில் குறைந்தது அல்ல. சி.பி.எஸ்.ஈ. பாடத் திட்டம் பற்றிய உயர் கருத்திற்குக் காரணம் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுகளில் அம்மாணவர் அதிக இடம் பிடிப்பதே என்றால் அம் மாணவர்கள் தனிப் பயிற்சி மையங்களில் பெறும் பயிற்சியும்,நுழைவுத் தேர்வுஅவர்களது பாடத்திட்டத்தை ஒட்டியும் இருப்பதே. மாதிரிப் பள்ளிகள் அரசு-தனியார் கூட்டில் அமையுமென்று கூறப்பட்டுள்ளது. பல்வேறு சலுகைகள் தனியார்க்கு வழங்கப்படுகின்றன. ஆனால் அவற்றிற்கான கட்டுப்பாடுகள் ஏதும் வரையறுக்கப்பட வில்லை.
ஆசிரியர் ஊதியம், பணிப் பாதுகாப்பு, மாநில அரசின்கண்காணிப்பு,மேற்பார்வை உரிமைகள், விதிமீறல் களுக்கான தண்டனை போன்ற பலவும் விளக்கப்படவில்லை. முதலாண்டில் தமிழ்நாட்டில் 10000 மாணவரும், ஏழு ஆண்டுகட்குப் பின்னர் மொத்தம் 70000-க்கும் குறைவான மாணவருமே இத்திட்டத்திற்கு உட்படுவர்.இத்திட்டத்தின் பயன் என ஏதாவது இருந்தால் அது மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கே கிடைக்கும். பாதகம் ஏற்பட்டால் பெரும் ஏமாற்றதை மாணவர் சந்திக்க நேரும்.இத்திட்டத்திற்கு ஒதுக்கப்படும் மூலதன மற்றும் தொடர் செலவினைப் பொதுப் பள்ளிகளை மேம்படுத்தப் பயன்படுத்துவதே நியாயமாகும். பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகக் கூடும் இத்திட்டத்தைக் கைவிடுவதே சாலச் சிறந்ததாகும்.
ச.சீ. இராஜகோபாலன்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி