வரும் கல்வியாண்டில் (2014-15) பத்தாம் வகுப்பில் முப்பருவ முறை அறிமுகம் செய்யப்படாது: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 17, 2014

வரும் கல்வியாண்டில் (2014-15) பத்தாம் வகுப்பில் முப்பருவ முறை அறிமுகம் செய்யப்படாது: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு.


வரும் கல்வியாண்டில் (2014-15) பத்தாம் வகுப்பில் முப்பருவ முறை அறிமுகம் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆண்டு முழுவதுக்கும் ஒரே புத்தகம்,
பொதுத்தேர்வு ஆகியவை அடுத்த கல்வியாண்டிலும்தொடரும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.இதையடுத்து, பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு முறை நீடிக்குமா, இல்லையா என்ற குழப்பம் தாற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைப்பதற்காக, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை முப்பருவ முறை 2012-13-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.ஒன்பதாம் வகுப்பில் 2013-14-ஆம் கல்வியாண்டில் முப்பருவ முறை அறிமுகம் செய்ததோடு, பத்தாம் வகுப்புக்கு 2014-15-ஆம் கல்வியாண்டில்அறிமுகம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.முப்பருவ முறையின் கீழ் ஒரு கல்வியாண்டு மூன்று பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

ஜூன் முதல் செப்டம்பர் வரை முதல் பருவம், அக்டோபர் முதல் டிசம்பர் வரை இரண்டாம் பருவம், ஜனவரி முதல் ஏப்ரல் வரை மூன்றாம் பருவம் என மூன்று பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.1, 2 வகுப்புகளில் 4 பாடப்புத்தகங்கள், 3 முதல் 9 வரை 5 பாடப்புத்தகங்கள் இருந்தன. இந்தப் புத்தகங்கள் மூன்றாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவத்துக்கும் இரண்டு புத்தகங்கள் மட்டுமே எடுத்துச்செல்லும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.முப்பருவமுறையோடு தொடர் மதிப்பீட்டு முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொடர் மதிப்பீட்டு முறையில் அக மதிப்பீட்டுக்கு 40 மதிப்பெண்ணும், பருவ இறுதி மதிப்பீட்டுக்கு 60 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது. இவற்றின் சராசரி மதிப்பெண்ணுக்குப் பதில் கிரேடு வழங்கப்படுகிறது.ஆண்டு முழுவதும் மாணவர்களின் செயல்பாடுகள் கணக்கில் கொள்ளப்படுவதோடு, ஆண்டுத் தேர்வுகள் தொடர்பாக மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காகவும் இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டது.

பத்தாம் வகுப்பில்...

பத்தாம் வகுப்பில் முப்பருவ முறை அறிமுகப்படுத்தப்பட்டால் பொதுத்தேர்வு முறை இருக்குமா என்ற சந்தேகம் இருந்தது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்தனர்.பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு முறையை மாற்றுவதற்கு ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. பொதுத்தேர்வு முறை தொடர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.இதைத்தொடர்ந்து, சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இருப்பதைப் போன்று செமஸ்டர் முறையைக்கொண்டுவரலாமா என்றும் அதிகாரிகள் பரிசீலித்து வந்தனர். இரண்டாவது செமஸ்டரைப் பொதுத்தேர்வு போல் நடத்தலாம் என்பதும் பரிசீலனையில் இருந்தது.இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை தமிழக அரசுக்கு பரிந்துரையும் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், அடுத்தக் கல்வியாண்டில் இப்போதுள்ள நிலையே தொடர்வதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, வரும் கல்வியாண்டில் முப்பருவ முறை அமல்செய்யப்படாது என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.அதோடு, பத்தாம் வகுப்புக்காக இப்போதுள்ள புத்தகங்களையே அச்சிடுவதற்கும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

1 comment:

  1. IT IS VERY BEST TO CONVERT 10,+1,+2 EXAMS WITH TWO SEMESTERS AND ALL AS PUBLIC EXAMS. THEN ONLY THE STUDENTS WILL READ THE +1 SUBJECTS ALSO WELL. AND IT WILL BE A TRAINING FOR THE STUDENTS FOR THEIR HIGHER STUDIES.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி