ஆசிரியர்களின் கவனக் குறைவால் 3-ஆம் வகுப்பு மாணவன் இறப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 15, 2014

ஆசிரியர்களின் கவனக் குறைவால் 3-ஆம் வகுப்பு மாணவன் இறப்பு.


ஆசிரியர்களின் கவனக் குறைவால் பள்ளி அருகே உள்ள குட்டையில் விழுந்து இறந்த பள்ளி மாணவன் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு தாலுக்காவில் உள்ள கருநிலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கே.வீரராகவன்.இவரது மகன் பிரசாந்த் (8) அங்கு உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தான்.கடந்த 2009-ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 25-ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற பிரசாந்த் வீடு திரும்பவில்லை. பள்ளியில் சென்று ஆசிரியர்களிடம் கேட்ட போது அவர்களுக்கும் தெரியவில்லை. அவனுடன் இருந்த மற்ற மாணவர்களை விசாரித்தபோது, பகல்12 மணி வரை வகுப்பறையில்தான் இருந்தான் எனத் தெரிவித்துள்ளனர். அவர்கள் அதன்பிறகு பிரசாந்த்தை பார்க்கவில்லை.ஆனால், வகுப்பறையில் பிரசாந்த்தின் பை இருந்தது.

அவனுடைய கால்சட்டை பள்ளியிலிருந்து 25 அடி தூரத்தில் உள்ள குட்டையின் அருகே கிடந்தது. அந்தக் குளம் 22 அடி ஆழம் கொண்டது.பிரசாந்த் ஒருவேளை குட்டையில் விழுந்திருப்பானோ என்ற நோக்கத்தில் குட்டையில் தேடும்போது, பிரசாந்த் மற்றும் விக்னேஷ் ஆகியோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.பிரசாந்த் வகுப்பாசிரியர் விடுமுறையில் இருந்ததால், அந்த வகுப்பு பொறுப்பாளராக மற்றொரு ஆசிரியர் நியமிக்கப்பட்டிருந்தார்.அவரும் வகுப்பறையில் இல்லை. அவர்களின் கவனக்குறைவால்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.அதனால், ஆசிரியர்களின் குறைபாடு காரணமாக எனது மகன் இறந்துள்ளான். எனவே, எனது மகன் இறப்புக்கு இழப்பீடாக ரூ. 5 லட்சம் வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரி பிரசாந்த்தின் தந்தை வீரராகவன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு நீதிபதி எம்.வேணுகோபால் முன்பு விசாரணை நடந்தது.

விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: பள்ளியில் கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. அதனால் மாணவர்கள் பள்ளிநேரங்களில் வெளியே சென்று இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டிய நிலை இருந்துள்ளது.இதன் காரணமாகவே மூன்றாம் வகுப்பு படித்த 8 வயது மாணவன் பிரசாந்த்தும், இரண்டாம் வகுப்பு படித்த விக்னேஷும் வெளியில் சென்று இயற்கை உபாதைகளை கழித்து விட்டு, குட்டையை பயன்படுத்தியபோது தவறி விழுந்து இறந்துள்ளனர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.இது தொடர்பாக, காட்டாங்குளத்தூர் உதவி தொடக்கக் கல்வி அதிகாரி விசாரணை செய்து, மாணவர்கள் இறப்பு ஆசிரியர்களின் கவனக் குறைவால் நடந்துள்ளது எனக் கண்டறிந்துள்ளார்.அதனால், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் இரண்டு உதவி ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

மேலும், அவர்களை வேறு பள்ளிக்கு பணியிட மாற்றமும் செய்துள்ளார். இதற்கு ஆசிரியர்கள் மட்டும் பொறுப்பாக முடியாது, அரசும்தான் பொறுப்பு.பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததால்தான் மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியில் சென்றுள்ளனர்.எனவே, மாணவன் பிரசாந்த்தின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ. 5 லட்சத்தை, எட்டு வாரங்களுக்குள் அரசு வழங்க வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி