குடும்ப ஓய்வூதியம் பெறும் உரிமை பெற்றோருக்கு உண்டா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 16, 2014

குடும்ப ஓய்வூதியம் பெறும் உரிமை பெற்றோருக்கு உண்டா?


பணியில் இருக்கும் ஒருவர் உயிரிழக்க நேரிட்டால் அந்த ஊழியரின் மனைவியோ, கணவரோ அல்லது பிள்ளைகளோ குடும்ப ஓய்வூதியம் பெற முடியும் என்பது தெரியும்.
ஆனால், திருமணம் ஆகாத ஊழியர் உயிரிழந்தால் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுமா? அந்த ஊழியரின் பெற்றோருக்கு அதைப் பெறும் உரிமை உண்டா? இந்த சந்தேகம் பலருக்கும் உள்ளது.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் 2012-ம் ஆண்டு ஒருவழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலாக துறைமுக ஊழியராகப் பணியாற்றி வந்த ரவிக்குமார் என்பவருக்குத் திருமணம் ஆகவில்லை. தனது தாயார் மாரியம்மாளை அவர்தான் பராமரித்துவந்தார். இந்நிலையில், ரவிக்குமார் கடந்த 2006-ம் ஆண்டு திடீரென இறந்துவிட்டார்.

அவரது இறப்புக்குப் பிறகு வழங்கவேண்டிய பணப் பயன்கள் முழுவதையும் அவரது தாய் மாரியம்மாளுக்கு துறைமுக நிர்வாகம் வழங்கியது. அதே சமயம், மகனுக்குத் திருமணம் ஆகவில்லை என்பதாலும், தனக்கு வேறு ஆதரவு யாரும் இல்லை என்பதாலும் துறைமுக நிர்வாகம் தனக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என மாரியம்மாள் கோரிக்கை விடுத்தார்.

ஆனால், துறைமுகநிர்வாகமோ, ‘‘துறைமுக ஊழியர் ஒருவர் இறக்க நேரிட்டால் அவரது மனைவி, கணவர், மகன் அல்லது மகள் மட்டுமே குடும்ப ஓய்வூதியம் பெறும் உரிமை உள்ளது. விதிகளின்படி பெற்றோருக்கு அந்த உரிமை இல்லை’’ என்று கூறி கோரிக்கையை நிராகரித்துவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மாரியம்மாள் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், குடும்ப ஓய்வூதியம் பெறும் உரிமை தாய் மாரியம்மாளுக்கு உண்டு என்று தீர்ப்பளித்தது.

மேலும் அந்த தீர்ப்பில், ‘‘தாய், தந்தையைப் பராமரித்து, பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு மகன், மகளின் கட்டாயக் கடமை. இந்த வழக்கில் துறைமுக ஊழியர் ரவிக்குமார்தனது வயதான தாயைப் பாதுகாத்து வந்துள்ளார். அவர் திடீரென இறந்துவிட்டார். தாயைப் பாதுகாக்கும் கடமையைச் செய்துவந்த மகன் தற்போது உயிருடன் இல்லை. தாய் ஆதரவின்றி நிற்கிறார். இந்த சூழலில் குடும்ப ஓய்வூதியம் மட்டுமே அவருக்கு ஒரே வாழ்வாதாரம். குடும்ப ஓய்வூதியப் பயன்களைப் பெறும் உரிமை பெற்றோருக்கும் உண்டு என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளது.

ரவிக்குமார் திருமணமாகாத ஊழியர்என்பதால், அவரது உயிரிழப்புக்குப் பிறகு குடும்ப ஓய்வூதியம் பெறும் உரிமை தாய் மாரியம்மாளுக்கு உண்டு’’ என்று உயர் நீதிமன்றம் கூறியது.

1 comment:

  1. It is very good with moral Judgement India is one of the holynation of the world, so never failed ethic here like our parlimentary election. JAI HIND Jai NARENDTER MODI. -S.THAMILSELVAN. PERAVURANI.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி