பலரையும் சிந்திக்க வைக்கும் அபாயம் மிக்க ஜூன் மாதம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 12, 2014

பலரையும் சிந்திக்க வைக்கும் அபாயம் மிக்க ஜூன் மாதம்!


தமிழக மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோருக்கு, ஜூன் மாதம் ஒரு முக்கியமான மாதம். பொறியியல் கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகள், பட்டப்படிப்பு கற்றுத் தரும் கல்லூரிகள் என, பலரும் அதிக ஆர்வத்துடன் இடம் பிடிக்கும் காலம்.
தமிழகத்தில் மொத்தம், 561 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.அரசு மருத்துவக் கல்லூரிகள், 19, தனியார் மருத்துவக் கல்லூரி கள், 12 உள்ளன. இவை தவிர, பல் மருத்துவக் கல்லூரிகளும் உண்டு. சட்டப்படிப்புக்கு, சில ஆயிரம் பேர் தான் ஆர்வம்காட்டுவர். பல்வேறு பட்டப்படிப்புகள் கற்றுத்தரும் கலை, அறிவியல் கல்லூரிகள், நூற்றுக்கணக்கில்உள்ளன. பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேர, ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்கள், 'கட் - ஆப்' மதிப்பெண் படி சேர்க்கப்படுவர். ஆண்டு தோறும் நடைபெறும் நிகழ்ச்சி இது என்றாலும், பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை மற்றும் இதில் எந்தப் படிப்பை படித்தால், நான்கு ஆண்டுகளுக்கு பின் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற தகவல், அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

அதனால் தான், தனியாக தகவல்தொடர்பு படிப்பை படிக்க, அதிக ஆர்வம் மாணவர்களிடம் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. காரணம், தகவல்தொடர்பு சம்பந்தப்பட்ட தனியார் கம்பெனிகள், புதிதாக ஆள் எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டாததும், இம்மாதிரி படிப்புகள் படித்த பின், ஆண்டுக்கு, மூன்று லட்சம் ரூபாய் வருமானம் ஈட்ட முடியுமா என்ற கேள்வியும், பலரை உலுக்கி வருகிறது. இவை தவிர, பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியரில், 20 சதவீதம் பேர், கல்விச்சுமை காரணமாக பாதியில், 'டிராப் அவுட்' ஆகும் அவலம் இருக்கிறது. அதேபோல, கல்விக்காகும் செலவை ஏற்க முடியாமல் சிலர், பாதியில் கைவிடுவதும் உண்டு. ஒரு பக்கம், பிளஸ் 2 படிப்புக்கு மேல், கல்வி பெறும் எண்ணிக்கை அதிகரித்தாலும், பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு, படித்த மாணவ, மாணவியர் தங்கள்தகுதிக்கேற்ற பணிகளில் சேர முடியாமல், ஏதாவது பணியில் சேர்ந்து வாழ்க்கையை தொடங்கும் அவலம் உள்ளது. படித்த படிப்பில் தனித்திறன் இன்மை என்பதுடன், இம்மாதிரி படிப்புகளுக்கு ஏற்ப அதிக வேலைவாய்ப்புகளும் சந்தையில் இல்லை.அரசு மற்றும் பொதுத்துறை மட்டும் அனைவருக்கும் வேலை தரமுடியாது.

இதே நிலை தொடர்ந்தால், இளைய தலைமுறையினர் அதிருப்தி அதிகரிக்கும். தற்போது நடக்கும் தங்கச் செயின் பறிப்பு நிகழ்ச்சிகளில், பொறியியல் படிப்பு படிக்கும் மாணவர் சிலர் ஈடுபட்டது இதன் வெளிப்பாடே ஆகும். பட்டப்படிப்பு படித்த சதவீதம் அதிகரிப்பதுடன், வேலைவாய்ப்பும் அதிகரிக்காத நிலையில், அதற்கான அவசரத் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக அமல்படுத்தாத பட்சத்தில், பெருகி வரும் நகர்ப்புற வாழ்க்கையில், இது அதிக பிரச்னைகளை ஏற்படுத்தும். அதை தவிர்ப்பது, ஆட்சியாளர் மற்றும் தொழில் நிறுவனங்கள் கையில் தான் உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி