மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 8, 2014

மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு

தூத்துக்குடி : சுதந்திர போராட்டத்தின் போது ஆங்கிலேய கலெக்டரை சுட்டுகொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்டவர் வீர வாஞ்சிநாதன். அவர் உயிர் நீத்த நாளில் ரயில் நிலையத்தில் அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து அனுமதி மறுத்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்தியாவை ஆங்கிலேயர்கள் கைப்பற்றி ஆட்சி செய்த காலத்தில் , சுதந்திரத்திற்காக பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர். குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய தலைவர்கள் இருந்துள்ளனர். குறிப்பாக எட்டயபுரம் பாரதியார், ஓட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனார். பாஞ்சாலங்குறிச்சி கட்ட பொம்மன், வீரன் சுந்தரலிங்கம், வெள்ளையத்தேவன் இப்படி இந்த மாவட்டத்தில் விடுதலை போராட்ட வீரர்கள் உள்ளனர். இதில் வீர வாஞ்சிநாதனும் ஒருவர். 

1911 ஜூன் 11 ம் நாள் ரயிலில் வந்த நெல்லை கலெக்டரான ஆங்கிலேய அதிகாரி ஆஷ் துரையை மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதன் சுட்டுக் கொலை செய்தார். அதன் பின் அங்குள்ள கழிப்பறையில் தன்னையே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த செயலால், மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சி மணியாச்சி என, பெயரிடப்பட்டது. இவ்வளவு பெருமைகள் இருந்தும், வாஞ்சிநாதன் உயிரிழந்த இடத்தில், அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும், என தொடர்ந்து பல ஆண்டுகளாக ரயில்வே நிர்வாகத்தினை வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுத்து வருகிறது. தற்போது அவர் உயிரிழந்த கழிப்பறையை தரை மட்டமாக்கி அந்த இடமே அடையாளம் தெரியாத அளவிற்கு ரயில் நிர்வாகம் மாற்றி விட்டது. வாங்சிநாதன் பிறந்த ஊரான செங்ககோட்டையில் நினைவு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தான் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழச்சி நடந்து வருகிறது. என்னதான் இருந்தாலும், அவர் உயிர் துறந்த இடத்தில் நினைவகம் அமைத்து அஞ்சலி செலுத்த பலர் ஆர்வத்துடன் இருந்தும், இன்று வரை அரசும், ரயில் நிர்வாகமும் அனுமதியளிக்க மறுத்து வருகின்றனர். 

வரலாற்று ஆய்வாளர் இளசை மணியன் கூறியதாவது: சுதந்திர போராட்ட வரலாற்றில் ஆங்கிலேய ஆட்சியின் அடக்கு முறைகளை எதிர்த்து, தீவிரமாக போராடி உயிர் நீத்த இளைஞர்களில் வாஞ்சிநாதனும் ஒருவர். இவரது நூற்றாண்டு விழா சமயத்தில் அவர் உயிரிழந்த இடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி கேட்டு ரயில் நிர்வாகத்திற்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் இதனை கண்டு கொள்வதில்லை. அன்றைய தினம் பிளாட்பாரம் டிக்கெட் எடுத்து சென்று 10 நிமிடங்களில் அஞ்சலி செலுத்தி கொள்ளுங்கள் என, கேவலமாக சொல்கின்றனர் அதிகாரிகள். மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து ரயில் நிர்வாகத்திற்கு பல முறை மனுக்கள் அனுப்பியும், இன்று வரை அனுமதி வழங்கவில்லை, என்பது வருத்தமான செயலாகும். வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம், என பெயர் மாற்றம் செய்தது கூட இன்றும் பெயரளவிற்குத்தான் உள்ளது. தற்போது டிக்கெட் எடுத்தால் கூட மணியாச்சி என்ற பெயரில் தான் ரயில் நிர்வாகம் டிக்கெட் வழங்குகிறது. வாஞ்சி மணியாச்சி என்ற பெயரில் டிக்கெட் வழங்குவதில்லை.வாஞ்சிநாதன் உயிரிழந்த இடத்தில் நினைவகம் அமைத்து அங்கு சுதந்திர போராட்ட வரலாறு, தலைவர்கள் படங்களை வைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜகோபால், காங்., கட்சி பிரமுகர் கூறியதாவது: வாஞ்சிநாதன் உயிரிழந்த நூற்றாண்டு விழா சமயத்தில் இருந்து ரயில் நிர்வாகத்திற்கும், தென்னக ரயில்வே மேலாளர், ரயில்வேஅமைச்சர், தமிழக முதல்வர் உட்பட அனைவருக்கும் மனு கொடுத்து வருகிறோம். இன்று வரை யாரும் அதனை கண்டு கொள்ளவில்லை. அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த கூட அனுமதி மறுக்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் அரசுக்கு நெருக்கடி கொடுத்த போது மணியாச்சி ஊராட்சித்தலைவரும், வி.ஏ,ஓ., முன்னிலையில் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டது. அதன் பிறகு இது வரை எந்த முன்னேற்றமும் இல்லை. இது போன்ற நிலையால் சுதந்திரப்போராட்ட வீரர்களை வரும் இளம் தலைமுறைகள் மறந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு நடவடிக்கை எடுத்து வாஞ்சிநாதன் உயிரிழந்த இடத்தில் நினைவகம் அமைத்து அஞ்சலி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2 comments:

  1. முதுநிலை ஆசிரியர் நியமனம் கால தாமதம்
    காலி இடங்களை உடனடியாக நிரப்பக் கோரிக்கை

    The Hindu Tamil
    திருநெல்வேலி
    அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்களை போட்டித் தேர்வு மூலம் நியமனம் செய்யும் நடைமுறை தற்போது பின்பற்றப் படுகிறது. 2011-12ம் ஆண்டுக்கு, முதுநிலை ஆசிரியர்கள் தேர்வு நிறைவுற்று, 3,000-க்கும் மேற் பட்டோருக்கு 2013 ஜனவரி மாதம் நியமன ஆணை வழங்கப்பட்டது.
    இதன் தொடர்ச்சியாக 2012-13ம் ஆண்டுக்கு, 2,881 முதுநிலை ஆசிரியர் பணியிடத்துக்கு, 2013 ஜூலை மாதம் தேர்வு நடைபெற்றது. தேர்வானவர்களுக்கு அக்டோபர் மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவுற்றது.
    தமிழ் பாடத்துக்கான 605 பணியிடத்துக்கு மட்டும் நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. மற்ற பாடங்களுக்கான ஆசிரி யர் நியமனம் இதுவரை நடை பெறவில்லை.
    இப்பணியிடங்கள், 2014 ஜன வரி மாதமே நிரப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இத்தேர்வை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப் பட்ட வழக்குகளைக் காரணம் காட்டி, ஆசிரியர் தேர்வு வாரியம், நியமன ஆணை வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது. இதனால், கடந்த கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயின்ற மாணவர்கள் நலனை உத்தேசித்து, அரையாண்டுத் தேர்வுக்குப் பின், தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
    பள்ளிகளுக்கு தேவையான முது நிலை ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள, அந்தந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அதி காரம் வழங்கப்பட்டது. மாதம் ரூ.5,000 தொகுப்பூதியத்தில் நிய மனம் பெற்ற அந்த ஆசிரியர் களுக்கு, மார்ச் மாதம் பொதுத் தேர்வு வரை மட்டுமே பணி வழங்கப்பட்டது. அதன்பின் அவர் கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
    நடப்பு கல்வியாண்டு தொடங் கியுள்ள நிலையில், பல அரசுப் பள்ளிகளில், பிளஸ் 2 மாணவர்களுக்கு பல பாடங் களுக்கு ஆசிரியர்கள் இல்லை. தனியார் பள்ளிகளில் பாதி பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், அரசுப் பள்ளிக ளில் பாடம் நடத்த ஆசிரியரே இல்லாத நிலை நீடிக்கிறது.
    அதுபோல், சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த முதுநிலை ஆசிரி யர்கள், ஏற்கெனவே பணிபுரிந்த தனியார் பள்ளிகளால் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். தற்போது, அரசு பணியும் கிடைக்காத நிலை யில் பொருளாதாரரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    சட்டமன்றத்தில் அறிவிப்பு
    2012-13ம் ஆண்டுக்கான ஆசிரியர்களே இன்னும் நியமிக்கப்படாத நிலையில், 2013-14ம் ஆண்டுக்கு 900 ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பப்படும் என சட்டமன்றத்தில் தமிழக அரசு அறிவித்து உள்ளது.
    அரசுப் பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலனை கருத்தில் கொண்டு, முதுநிலை ஆசிரியர் நியமனத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி