தனியார் பள்ளிகள் இட விவகாரம் குழுவின் பரிந்துரையை அரசு செயல்படுத்துமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 1, 2014

தனியார் பள்ளிகள் இட விவகாரம் குழுவின் பரிந்துரையை அரசு செயல்படுத்துமா?


தமிழகத்தில் இயங்கிவரும் தனியார் பள்ளிகளுக்கு 3 ஆண்டுக்கு ஒரு முறைதற்காலிக அங்கீகாரம் வழங்கப்படும்.
இதற்கு சில விதிகளை அரசு கொண்டு வந்து ஒரு உத்தரவையும்(ஜிஓ எண் 48) போட்டது. அதில் தனியார் பள்ளிகள் இயங்க குறிப்பிட்ட இடம் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதன்படி மாநகராட்சியில் 6 கிரவுண்ட், நகராட்சியில் 10 கிரவுண்ட், பேரூராட்சியில் 1 ஏக்கர், கிராமஊராட்சியில் 3 ஏக்கர் இடம் வசதி இருக்க வேண்டும்.பல பள்ளிகளில் இதுபோன்ற இட வசதி இல்லாததால் அந்த பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் கொடுக்காமல், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககம் நிறுத்தி வைத்தது.

இது கடந்த 2 ஆண்டுகளாக பெரிய பிரச்னையாக உருமாறியது. தனியார் பள்ளிகள் தரப்பில் உடனடியாக அங்கீகாரம் வழங்காவிட்டால் மாணவர்களின் நலன் பாதிக்கும் என்றனர். இதையடுத்து, கடந்த ஆண்டு வல்லுநர் குழு ஒன்றை அரசு அமைத்தது. அதில் நகர ஊரமைப்பு துறை, ஊரகவளர்ச்சித்துறை, பொதுப்பணித் துறை அதிகாரிகள் இடம் பெற்றனர். அவர்கள் தவிர குழுவின் உறுப்பினர் செயலாளராக மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனர் நியமிக்கப்பட்டார். உறுப்பினர்களாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளும் இடம் பெற்றனர்.இந்த குழு தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் இடப்பிரச்னை குறித்து ஆய்வு செய்யவும், தனியார் பள்ளிகளிடம் கருத்து கேட்கவும் கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தியது. அதில் தனியார் பள்ளி நிர்வாகிகள் நேரில் ஆஜராகி தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர். இறுதியாக வல்லுநர் குழுவின் இறுதிக் கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்தது. அதில் முடிவை எடுத்து, இறுதி அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.

இந்த அறிக்கை சமர்ப்பித்து 6 மாதங்கள் ஆன நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரோ, செயலாளரோ இறுதி முடிவு எடுக்காமல் உள்ளனர். இதனால், தனியார் பள்ளி நிர்வாகிகள் பள்ளிகளை நடத்துவதா வேண்டாமா என்பதில் முடிவு எடுக்க திணறுகின்றனர். வல்லுநர் குழுவின் பரிந்துரையில் கூறப்பட்டுள்ள விவரங்களையும் அரசு வெளியிடாமல் உள்ளது. இதனால் பல தனியார் பள்ளிகள் கலக்கத்தில் உள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி