அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வகுப்பறை இல்லாத பள்ளிகளுக்கு வகுப்பறை கட்ட 4.18 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் விரைவில் கட்டப்படவுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் மாணவர்களின் கல்வித்தரம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் நிதி பங்களிப்பின் மூலம் வகுப்பறைகள் இல்லாத பள்ளிகளைக் கண்டறிந்து பள்ளியின் தேவைக்கேற்ப வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை,மேல்நிலை மற்றும் நகராட்சி பள்ளிகள் என மொத்தம் 1,425 பள்ளிகளில், கடந்த ஆண்டு 62 பள்ளிகளுக்கு, 103 வகுப்பறைகளை, 5 கோடியே 66 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டநிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.தற்போது 15 இடங்களில் பணிகள் முழுவதுமாக முடிவடைந்து பயன்பாட்டில் உள்ளது. மீதமுள்ள பள்ளிகளில் விரைவாக பணிகள் நடந்து வருகின்றன.
இதற்கான நிதி, பள்ளி தலைமை ஆசிரியர் ஊராட்சித் தலைவர் ஆகியோரின் பொறுப்பில் 100 சதவீதம் செலவு செய்து வகுப்பறைகள் கட்ட உத்தரவிட்டு, பணிகளை அவ்வப்போது,அதிகாரிகள் சென்று கட்டுமானத் தரம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், செலவைக் குறைக்க, அரசு மூலம் வழங்கப்படும் சிமென்ட் மூட்டைகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்தாண்டு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 39 பள்ளிகளில் 76 வகுப்பறைகள் கட்ட இடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 4 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பள்ளி வகுப்பறைகள் கட்ட அனுமதி கோரப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி பெறப்பட்டு உடன் கட்டடப் பணிகள் துவங்க உள்ளது.
பொதுமக்களுக்கும் பொறுப்பு தேவை
தமிழகத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்த மத்திய, மாநில அரசு பல்வேறு, திட்டங்கள் மூலம் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து வருகிறது.
குறிப்பாக, கிராமப்புற பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.அரசு பள்ளிகளில் தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக வகுப்பறைகள் கட்டப்பட்டு,டைல்ஸ் தளம் அமைக்கப்படுகிறது. ஆனால், பள்ளி வார விடுமுறை மற்றும் தேர்வு விடுமுறை நாட்களுக்குப் பின், பள்ளியை திறக்கும்போது, அங்குள்ள கழிப்பறைகளில் சமூக விரோதிகளால் பைப்புகள் உடைக்கப்பட்டு, பள்ளி வராண்டால் மது அருந்திவிட்டு, பாட்டில்கள் மற்றும் பொருட்களை போட்டு அசுத்தம் செய்து வருவதும் வழக்கமாக இருந்து வருகிறது.தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் சமூக விரோதிகள் புகுந்து நாசம் செய்யாமல்பாதுகாக்க வேண்டியது அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களின் கடமையாகும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி