மின் கழிவுகள்; நாம் மீள்வது எப்படி? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 14, 2014

மின் கழிவுகள்; நாம் மீள்வது எப்படி?

பருவநிலை மாற்றத்தால் இயற்கை அன்னை மடியின் அன்றாட நிகழ்வுகளிலும் அதற்கேற்ப மாற்றம் ஏற்படுகிறது. இதனால், மழை காலத்தில் வெயிலும், வெயில் காலத்தில் மழையும், காற்றடிக்கும் காலத்தில் இலைகூட அசையாத நிலையையும் நாம் காண முடிகிறது. எதனால் இந்த மாற்றம்? புவி மேற்பரப்பில் நிகழ்வது என்ன? இயற்கை அன்னை மடியில் இதுபோன்ற புரியாத புதிர்கள் நிகழக் காரணம் என்ன?

இதற்கு ஒரே விடை, சமநிலை சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றம் தான். இதனால் தான், இன்று உலக நாடுகள் விவாதிக்கும் முக்கிய கருப் பொருள் 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு'.சுற்றுச்சூழல் என்பது உயிரினங்களின் வாழ்விடத்தையும், அங்குள்ள உயிரிகள், நிலம், நீர், காற்று மற்றும் அங்கு நிலவும் தட்பவெட்ப நிலையை உள்ளடக்கியது. ஆயிரக்கணக்கான உயிரினங்கள் வாழும் இப்புவியில், அவை வாழ்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், ஆரோக்கியமான 'சமநிலை சுற்றுச்சூழல்' அவசியம்.இதுகுறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு பள்ளி மற்றும் கல்லூரி பாடத் திட்டங்களில் சுற்றுச்சூழல் தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன. கல்லூரிகளிலும் சுற்றுச்சூழல் அறிவியல் பாடம் பயில்வது கட்டாயமாக்கப்பட்டு வருவது ஆரோக்கியமான விஷயம்.

அச்சுறுத்தல் சூழல் :

நீர் நிலைகள், காடுகள், விலங்குகள், வளிமண்டலம், பறவைகள், சோலைகள், கடற்கரைகள் அனைத்தும் மனித குலத்திற்காக வடிவமைக்கப்பட்ட 'பொக்கிஷங்கள்' ஆகும். மனிதன், விலங்குகள், பறவைகள், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்களின் நல்வாழ்விற்காக சமநிலையில் உள்ள சுற்றுச்சூழலில், மாற்றம் ஏற்படும் போதுதான் உயிரினங்கள் வாழ்விற்கும் அச்சுறுத்தலான சூழல் ஏற்படுகிறது.சுற்றுச்சூழலை பாதுகாப்பது ஒவ்வொரு தனிமனிதனின் கடமை. நிலம், நீர், காற்று, இயற்கை வளங்கள் மற்றும் பல்லுயிரினப் பெருக்கம் ஆகியவற்றை பாதுகாப்பது மூலம் நம் வருங்கால சந்ததியினருக்கான வாழ்வுரிமை பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம்.

இயற்கை வள பாதுகாப்பு :
உலகின் நிலப்பரப்புகளுக்கு இயற்கை தான் அரண்களாக அமைந்துள்ளன. வெப்ப நாடான இந்தியாவின் சிறப்பே 'பல்லுயிரியம்' என்ற 'பயோடைவர்சிட்டி' தான். பல்வேறு வகை உயிரினங்கள் தங்களுக்காக வாழாமல் சுற்றுச்சூழலுக்கு தேவையான பாதுகாப்பு, உணவு, சுவாசிக்க தேவையான பிராணவாயு போன்றவற்றை வழங்குவது சமநிலையை உருவாக்கும் சுற்றுச்சூழல், இயற்கையின் அதிசயம். மனிதனின் தீய செயல்கள் மற்றும் தவறுகளால் தற்போது அவை அழிந்து, புவிக்கு ஆபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இவற்றை தடுக்க, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் சட்டங்கள் மத்திய, மாநில அரசுகள் முறைப்படுத்த வேண்டும்.

நீர்வளப் பாதுகாப்பு :

நிலத்தடி நீர் குறைந்து வருகிற இத்தருணத்தில், தண்ணீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு எற்படுத்த வேண்டும். அடையாளங்களாக எஞ்சியிருக்கும் 'கிராமப் பொருளாதாரத்தின் ஊற்றுக்கண்களான' கண்மாய்களை பாதுகாத்து மீண்டும் உயிரூட்டும் முயற்சியில் ஈடுபட வேண்டும். மழைநீர் கிடங்குகள் அமைத்து, தண்ணீரை எவ்வாறெல்லாம் சிக்கனமாக பயன்படுத்தலாம் என்ற புதிய புதிய வழிமுறைகளை மக்களுக்கு கற்றுத் தரவேண்டும். இதில், அரசும், தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் முனைப்புடன் ஆர்வம் காட்ட வேண்டும்.

மாசுபடுதலால் ஆபத்து :

தற்போது நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு வனம், நீர், நிலம், காற்று ஆகியன மனிதர்கள் தெரிந்து செய்யும் தவறான செயல்பாடுகளால் மாசுபட்டு வருகின்றன. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுப் பொருட்களும், கழிவு நீரும் ஆறுகளிலும், நீர்நிலைகளிலும் கலப்பதால் நீரின் தன்மை கெடுவதோடு விவசாயமும் பாதிக்கிறது. கடந்த 250 ஆண்டுகளில் நம் வளிமண்டலத்தில் உள்ள கரியமல வாயு 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், ஓசோன் படலம் பாதித்து, புற ஊதா கதிர்வீச்சு அதிகரிப்பதை அறிவியல் உலகம் கவலையுடன் உற்று நோக்குகிறது.இதற்கு தீர்வாக மின்சார குண்டு பல்புகளுக்கு பதில், சி.எப்.எல். பல்புகளை பயன்படுத்தலாம். கார்களுக்கு மாற்றாக பஸ்களையும், பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் துணி அல்லது காகித பைகளை பயன்படுத்தலாம். வாகனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு சவாலாக உள்ளது. உலக சுகாதார ஆய்வுப்படி, ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசுபாட்டால் நம் நாட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 5,27,000 ஆக உள்ளது.கொசு தொல்லையில் இருந்து விடுபட வேதிப் பொருட்களடங்கிய கொசு பத்தி சுருள் பயன்படுத்துவதற்கு பதில் கொசு வலைகளை அதிகம் பயன்படுத்தலாம்.

பகையாகும் மின் கழிவுகள் :

நகரங்களில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் மிகப் பெரிய பிரச்னை, அதிகரிக்கும் மின் கழிவுகள். பழைய கணினி, மின் கலங்கள் போன்றவற்றை முறையற்ற கழிவாகக் கொட்டுவதால் மண், காற்று நிலத்தடி நீர் உள்ளிட்டவை நச்சுத்தன்மையாகவும், புற்றுநோயை உருவாக்கும் வகையிலும் மாறுகின்றன. விரைவில் இந்தியாவில் 20 லட்சம் பழைய கணினிகள் அகற்றப்படும் என்பதால், 1,44,2700 கிலோ பிளாஸ்டிக் 3,96,2700 கிலோ காரீயம், 1,386 கிலோ பாதரசம் கழிவாக வெளியேற்றப்படும் என கணிக்கப்பட்டுஉள்ளது.


சுற்றுச்சூழலுக்கு சவாலாகும் மின்கழிவு பிரச்னையை தீர்க்க...
*மின் மற்றும் மின்னியல் சாதனங்களின் தேவையில்லா பயன்பாட்டின் உற்பத்தியை குறைக்க வேண்டும். தயாரிக்கப்படும் மின்னியல் சாதனங்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்க வேண்டும்.
*சுற்றுச்சூழல் பாதிக்காமல் மின்னியல் சாதனங்கள் கழிவுகளிலிருந்து மூலப் பொருட்களை பிரித்தெடுக்க அதிகளவில் தொழில் கூடங்கள் அமைக்க வேண்டும்.
*மறுபயன்பாடு மின்னியல் சாதனங்களை திரும்ப திரும்ப சரி செய்து உபயோகிக்க வேண்டும்.

- பேராசிரியை டாக்டர் ஜெ.காரூண்யாள், தலைவர், பசுமை கிளப்
அமெரிக்கன் கல்லூரி, மதுரை.

1 comment:

  1. Sri I like this article and everyone has to take initiate then only we can avoid this type of pollution

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி