CPS: புதிதாக அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட(CPS) எண்களை உடனே வழங்க அரசு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 13, 2014

CPS: புதிதாக அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட(CPS) எண்களை உடனே வழங்க அரசு உத்தரவு.


புதிதாக அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்துக்கான ஒதுக்கீட்டு எண்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று துறைத் தலைவர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமானது, கடந்த 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது. அதாவது, ஓய்வூதியத்தில் அரசின் பங்களிப்புடன், அரசுத் துறைகளில் புதிதாகப் பணியில் சேரும் ஊழியர்களின் பங்குத் தொகையையும் சேர்ப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டம் தொடர்பாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து அவற்றை வெளியிட வேண்டுமென பல்வேறு ஊழியர் சங்கங்களும், அமைப்புகளும் அரசிடம் கோரிக்கை விடுத்தன. இந்த நிலையில், புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, நிதித் துறை செயலாளர் க.சண்முகம் வெளியிட்ட அறிவிப்பு:கடந்த 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு அரசுப்பணியில் சேர்ந்த ஊழியர்கள் அனைவரையும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேர்த்து, அதற்கான ஒதுக்கீட்டு எண்களை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒதுக்கீட்டு எண்களை வழங்குவதற்குதுறைத் தலைவர்கள், சம்பளம் வழங்கும் அலுவலர்கள் ஆகியோர் பொறுப்பாவர்.பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ள அரசுத் துறை ஊழியர்கள் அனைவரும் உடனடியாக அதற்குரிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தங்களது துறையின் தலைவர்களிடம் அளிக்க வேண்டும்.

அந்த விண்ணப்பங்களைத் துறையின் தலைவர்கள் அரசின் தரவு (டேட்டா) மையத்துக்கு அனுப்ப வேண்டும். அங்கு, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கான ஒதுக்கீட்டு எண்கள் வழங்கப்படும். அதில் எந்தவித தாமதமும் ஏற்படக் கூடாது.கருவூலங்களில் உள்ள சம்பளம் வழங்கும் அலுவலர்களைப் பொருத்தவரையில், புதிதாக அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கு விண்ணப்பித்துள்ளார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

அது குறித்த நிலையை கருவூலத் துறை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.தமிழக அரசின் தரவு மையத்தின் மூலம் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கான ஒதுக்கீட்டு எண் வழங்கப்படாத பட்சத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் எந்தத் தடையும் ஏற்படுத்திவிடக் கூடாது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கான ஒதுக்கீட்டு எண்ணைப் பெறாத அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பளப் பட்டியலை ஏற்றுக் கொள்ளாததற்கான காலக்கெடு நவம்பர் வரை நீட்டிக்கப்படுகிறது.

அதன் பிறகே, சம்பளம் வழங்குவது நிறுத்தி வைக்கப்படும். இந்த வழிகாட்டு நெறிமுறைகளை துறைத் தலைவர்கள், சம்பளம் வழங்கும் அலுவலர்கள் பின்பற்ற வேண்டும் என்று நிதித் துறை செயலாளர் க.சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1 comment:

  1. Hai dear friends...
    Aided School Vacant available in Chennai...
    PG Chemistry (Bc,MBC,OC)
    B.T Science with TET Pass (Sc/St)
    B.T. Telugu Pandit with TET Pass (Sc/St)
    Contact - 9843951505|(thiru)

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி