10-வது, பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்கள் கொண்ட பள்ளிகள் பட்டியல் உடனே தரும்படி பள்ளிக்கல்வித்துறைக்கு தேர்வுத்துறை கடிதம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 30, 2014

10-வது, பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்கள் கொண்ட பள்ளிகள் பட்டியல் உடனே தரும்படி பள்ளிக்கல்வித்துறைக்கு தேர்வுத்துறை கடிதம்.


10-வது மற்றும் பிளஸ்-2 தேர்வு எழுதக்கூடிய மாணவ-மாணவிகள் கொண்ட பள்ளிகளின் பட்டியலை தரும்படி தேர்வுத்துறை பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

10-வது, பிளஸ்-2 தேர்வு

தமிழ்நாட்டில் வருடந்தோறும் மார்ச் மாதம் பிளஸ்-2 தேர்வும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வும் பள்ளிக்கல்வித்துறையின் அரசு தேர்வுத்துறையால் நடத்தப்படுகிறது. கடந்த வருடம் பிளஸ்-2 தேர்வை 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ-மாணவிகளும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை11 லட்சம் மாணவ-மாணவிகளும் எழுதினார்கள். இந்த வருடம் அந்த எண்ணிக்கையை விட அதிகம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுவார்கள்.தேர்வு நடத்தக் கூடிய அரசு தேர்வுத்துறை இயக்குனராக இருப்பவர் கு.தேவராஜன். அவர் பள்ளிகல்வித்துறை இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் பிச்சை ஆகியோருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

பட்டியல்

2015-ம் ஆண்டு மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வு நடத்தப்படுவதற்கு இந்த வருடம் எந்த எந்த பள்ளிகள் தங்கள்மாணவர்களை எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுக்கு மாணவ-மாணவிகளை அனுப்புகிறது. இப்படி அனுப்பக்கூடிய பள்ளிகள் எவை என்ற பட்டியலை அரசு தேர்வுத்துறைக்கு 30-ந்தேதிக்குள் அனுப்புங்கள்.இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த கடிதத்தையொட்டி பள்ளிக்கல்வி இயக்குனரகமும், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகமும் ஒவ்வொரு மாவட்டத்திலும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ள பள்ளிகள் எத்தனை என்பது குறித்த பட்டியல் தரும்படி அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள், மெட்ரிகுலேசன் பள்ளிக்கல்வி ஆய்வர்கள் ஆகியோருக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.

12 ஆயிரம் உயர் நிலைப் பள்ளிகள்

அவர்கள் பட்டியலில் குறைந்த பட்சம் 6 ஆயிரம் மேல்நிலைப்பள்ளிகளும், 12 ஆயிரம் உயர்நிலைப்பள்ளிகளுக்கும் அதிகமாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பள்ளிகளின் பட்டியல் வந்த பிறகு தான் எத்தனை மாணவர்கள், மாணவிகள் பள்ளிகளில் இருந்து தேர்வு எழுதுகிறார்கள் என்ற விவரம் அரசு தேர்வுத்துறைக்கு தெரியவரும். அதன் பின்னர் தான் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

தேர்வு மையம் குறித்து அரசு தேர்வு இயக்குனர் கு.தேவராஜன் கூறியதாவது:-

தேர்வு மையம்

தேர்வு மையத்தின் அறைகள் 20 அடி நீளமும், 20 அடி அகலமும் இருக்க வேண்டும். அந்த பள்ளியில் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு பெஞ்சுகள் இருக்க வேண்டும். பெரும்பாலும் 2 அல்லது 3 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் சேர்ந்து ஒரு மையத்தில் தேர்வு எழுதுவார்கள். ஆனால் குறைந்த மாணவர்கள் இருந்த போதிலும் அருகே தேர்வு மையம் இல்லைஎன்றால் மாணவர்கள் நலன் கருதி புதிய தேர்வு மையமாக அந்த பள்ளி அமைக்கப்படும்.

இவ்வாறு கு.தேவராஜன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி