அக்டோபர் 16 முதல் மீண்டும் "கிஸான் விகாஸ்' திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 10, 2014

அக்டோபர் 16 முதல் மீண்டும் "கிஸான் விகாஸ்' திட்டம்

"கிஸான் விகாஸ்' பத்திர சேமிப்புத் திட்டம் அக்டோபர் 16-ஆம் தேதி முதல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தமிழக தலைமை தபால் துறைத் தலைவர் டி.மூர்த்தி தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியது:

உலக தபால் தினத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவில் தேசிய தபால் வாரம் அக்டோபர் 9 முதல் 15-ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவு தபால் சேவையில் அன்றைய தினம் அனுப்பும் தபாலை அன்றைய தினமே பட்டுவாடா செய்யும் திட்டம், சென்னை அண்ணாசாலை, வால்டாக்ஸ் சாலை ஆகிய இரண்டு தபால் நிலையங்களில் 24 மணி நேர விரைவு தபால் சேவை மையம், தாம்பரம் ரயில் நிலையத்தில் விரைவு தபால், பார்சல் பதிவு மையங்கள் ஆகிய புதிய திட்டங்கள் அக்டோபர் 11-ஆம் தேதி தொடங்கப்படுகின்றன.

மேலும், சென்னையில் தெரிவு செய்யப்பட்ட தபால் நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமையும் விரைவு தபால்களுக்கு சிறப்பு பட்டுவாடா செய்யும் சேவை தொடங்கப்படுகிறது. அக்டோபர் 14-ஆம் தேதி, தமிழகத்தில் தெரிவு செய்யப்பட்ட தபால் அலுவலகங்களில் தனியார் "டி.டி.ஹெச்' சேவைக்கான சந்தா வசூல் செய்தல், டி.வி.எஸ். நிறுவனத்தில் கடன் மூலம் வாங்கிய இரண்டு சக்கர வாகனங்களுக்கான மாதத் தவணை செலுத்தும் சேவை ஆகியவை தொடங்கப்படுகின்றன.

கடந்த நிதியாண்டில் வணிக நடவடிக்கைகள் வாயிலாக தமிழக தபால் துறைக்கு ரூ.1,041 கோடி வருவாய் கிடைத்துள்ளது. நிகழாண்டு ஆகஸ்ட் வரை, ரூ.440 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தனி நபர் கடிதப் போக்குவரத்து, 15 முதல் 20 சதவீதம் வரை குறைந்துள்ளது. அதே நேரத்தில், வணிகக் கடிதங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

கடந்தாண்டில், தமிழக தபால் வட்டம், 2.5 லட்சம் பார்சல்களை கையாண்டுள்ளது. இது நிகழாண்டு ஆகஸ்ட் வரை 3.35 லட்சமாகும். இந்த எண்ணிக்கை 7 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கிறோம். தமிழகத்தில் மொத்தமுள்ள 11,888 தபால் நிலையங்கள், 2,506 துணை தபால் நிலையங்கள், 94 தலைமை தபால் நிலையங்களில் கணினி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக 2 ஆயிரம் கிராமப்புறத் தபால் நிலையங்களில் இன்னும் 6 மாதங்களுக்குள் கணினி வசதி ஏற்படுத்தப்படும். தற்போது 9,288 கிராமிய தபால் நிலையங்கள் செயல்படுகின்றன. மின் கட்டணம் வசூல் சேவையில், தமிழக தபால் துறைக்கு ரூ.1 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் 4 கிராமப்புற, 4 துணை தபால் நிலையங்கள் திறக்கத் திட்டமிட்டுள்ளோம். கடந்த 2011-ஆம் ஆண்டு நவம்பரில் "கிஸான் விகாஸ்' பத்திர சேமிப்புத் திட்டம் நிறுத்தப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தத் திட்டம் மீண்டும் அறிமுகம் செய்யப்படுகிறது. அக்டோபர் 16-ஆம் தேதி முதல் "கிஸான் விகாஸ்' பத்திர சேமிப்புத் திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது என்றார் டி.மூர்த்தி.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி