அஞ்சலக நடைமுறைகள் எப்படி?சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 14, 2014

அஞ்சலக நடைமுறைகள் எப்படி?சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம்.


சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவ மாணவியர்அஞ்சலக தேசிய வாரவிழாவினை முன்னிட்டு அஞ்சலக நடைமுறைகள் பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ளும் வாய்ப்பினை பெற்றனர்.

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவ மாணவியர்க்கு அஞ்சலகம்தொடர்பான நடைமுறைகள் அறிந்து கொள்ள தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் ஏற்பாடு செய்தார்.தேவகோட்டை அஞ்சலக தலைமை அதிகாரி ராமசந்திரன் சம்மதம் தெரிவித்தார்.மாணவர்கள் பள்ளியிலிருந்து அஞ்சலகத்திற்கு சுற்றுலாவிற்கு பயணிப்பது போல் உற்சாகத்துடன் அனைவரும் சென்றனர்.அஞ்சலக எழுத்தர் சத்யா அனைவரையும் வரவேற்றார்.அஞ்சலக எழுத்தர் தன்ராஜ், அஞ்சலக அலுவலர்கள் செல்வகணேசன்,ஷேக் அலாவுதீன் ஆகியோர் மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார்.அஞ்சலகத்தின் செயல்பாடுகள் என்ன,என்ன என்பது குறித்து விளக்கப்பட்டது.அஞ்சலகத்தில் பொதுமக்கள் பயன்பாடும்,பொதுமக்களுக்கு அஞ்சலகத்தின் சேவை குறித்தும் எடுத்து கூறினார்கள் .அஞ்சலகத்தில் அமைந்து உள்ள ஒவ்வொரு பிரிவையும் தனித்தனியே மாணவர்களை அழைத்து சென்று விளக்கம் அளித்தார்.

தபால்கள் பிரிப்பது எப்படி? தபால்கள் உரிய இடங்களுக்கு அனுப்பப்பட்டு வீடுகளுக்கு சென்றடைவது எப்படி? அஞ்சல் அட்டை, உள்நாட்டு தபால் சேவை, ஒப்புதல் அட்டை, மணிஆர்டர் படிவம் பூர்த்தி செய்வது எப்படி? பணம் செலுத்தும் படிவம்,பணம் எடுக்கும் படிவம்,ஆகியவை பூர்த்தி செய்வது எப்படி? பதிவு தபால் என்ன என்பது தொடர்பாகவும்,பதிவு தபாலுக்கும் ,விரைவு தபாலுக்கும் என்ன வேறுபாடு என்பதையும் விளக்கமாக எடுத்து கூறினார்கள் .அஞ்சலகத்தின் முக்கிய சேவைகளாக உள்ள இ ​- போஸ்ட் ,முக்கிய நகரங்களுக்கு பொது மக்கள் தங்களது சரக்குகளை குறைந்த விலையில் அனுப்பி வைக்கப்படும் தபால் சேவை, உள்நாட்டில் பண பரிமாற்ற சேவை,வெளிநாடுகளுக்கு தபால்கள்,பார்சல்கள் அனுப்ப அறிமுகம் செய்யப்பட்டுள்ள world net express சேவை,Mobile Money System,IMO என பல தகவல்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.மை ஸ்டாம்ப்,பணம் செலுத்தும் கவுன்ட்டர்,பார்கோடு மூலம் கணினியில் எவ்வாறு பதிவு செய்தல் என்பதையும் செயல் விளக்கம் அளித்தனர்.

மாணவி சொர்ணம்பிகா, கிருஷ்ணவேணி,மாணவர்கள் சூர்யா,நடராஜன்,ராம்குமார்,பார்த்திபன், ஆகியோர் படிவங்கள் பூர்த்தி செய்வது தொடர்பாககேள்விகள் கேட்டு பதில் பெற்றனர்.சில மணி நேரங்கள் மாணவ,மாணவியர் உற்சாக வெள்ளத்தில் திளைத்தனர்.மாணவர்களை அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை ஆசிரியை செல்வமீனாள் மற்றும் ஆசிரியர் ஸ்ரீதர் ஆகியோர் செய்திருந்தார்கள்.நிறைவாக பள்ளியின் சார்பாக ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.

மாணவர்களின் கேள்விகளும்,தபால் அலுவலக அதிகாரிகளின் பதில்களும்:

மாணவி சொர்ணம்பிகா:எந்தெந்த ஊருக்கு எந்த விலையில் தபால் தலை ஒட்டவேண்டும்? என்று கேட்டார்.

தலைமை தபால் அதிகாரி ராமச்சந்திரன் : தபால்களுக்கு பொதுவாக 5 ரூபாய் முதல் எடையை பொறுத்து அதற்குரிய தபால் தலைகளை ஓட்ட வேண்டும் என்றார்.

மாணவி பவனா : விரைவு தபாலுக்கும் , பதிவு தபாலுக்கும் என்ன வித்தியாசம் ? என கேட்டார்.

அஞ்சலக தலைமை அதிகாரி ராமசந்திரன் : பதிவு தபால் யார் பெயருக்குவந்துள்ளதோ அவர்களிடம் நேரடியாக கையெழுத்து வாங்கிகொண்டுதான்கொடுக்க வேண்டும். ஒருவேளை சம்பந்தப்பட்ட நபர் வெளிஊரில்,வெளிநாட்டில் எங்கு இருந்தாலும் அவர்கள் எனக்கு வரும்தபால்களை எங்கள் வீட்டில் உள்ள இன்னாரிடம் தரலாம் என அஞ்சல் அலுவலகத்தில் எழுதி கொடுத்திருந்தால் குறிப்பிட்ட நபரிடம் தபாலை கொடுக்கலாம். ஆனால் விரைவு தபால் என்பதை யார் பெயருக்கு வந்துள்ளதோ அவர்கள் வீட்டில் உள்ள யாரிடமும் தந்து விடலாம் என்றார்.

மாணவர் நடராஜன் : எந்தெந்த தலைவர்கள் அஞ்சல் தலையில் இடம் பெற்றுள்ளனர்? என கேட்டார்.

தலைமை தபால் அதிகாரி ராமச்சந்திரன் :தபால் தலையில் இடம் பெற்றுள்ள தலைவர்கள் யார்,யார் என்பதையும்,தலைவர்களின் பிறந்த நாளில் புதிது,புதிதாக வெளியிட வாய்ப்புள்ளது என்றார்.

மாணவர் ராம்குமார்: ரெவின்யு ஸ்டாம்ப் எவற்றிருக்கு பயன்படுத்தபடுகிறது? என கேட்டார்.

அஞ்சலக எழுத்தர் சத்யா : ரெவின்யு ஸ்டாம்ப் என்பது வருமானத்திற்கு மட்டும் ஓட்டகூடியது. அதற்கு மட்டும்தான் அதை பயன்படுத்த வேண்டும் என்றார்.

மாணவன் சூர்யா : இ -போஸ்ட் என்றால் என்ன? என கேட்டார்.

அஞ்சலக அலுவலர் செல்வகணேசன் : இ -போஸ்ட் என்பது நாம் அனுப்ப வேண்டிய தகவலை எ -4 தாளில் எழுதி கொடுத்தால் அதனை மின்னஞ்சல் மூலமாக பதிவு செய்து அனுப்பி விடுவோம் .அது உரிய நேரத்தில் உரியநபருக்கு சென்று கிடைத்து விடும் என்றார்.

மாணவி மங்கையர்க்கரசி : புக் - போஸ்ட் என்பது என்ன? என்று கேட்டார்.

அஞ்சலக அலுவலர் ஷேக் அலாவுதீன்: புக் - போஸ்ட் என்பது தபாலை ஒட்டாமல் அனுப்புவது ஆகும்.பெரும்பாலும் திருமண கவர்கள் இது போன்று அனுப்புவது உண்டு.

மாணவர் நவீன் :ஆர் பி எல் ஐ - என்பது என்ன என கேட்டார்?

அஞ்சலக எழுத்தர் தன்ராஜ் : இது ஒரு இன்சூரன்ஸ் திட்டமாகும்.இது அனைவரும் சேர்ந்து பயன்பட வேண்டிய ஒன்றாகும்.உங்கள் வீடுகளிலும்,அனைவரிடமும் சொல்லி இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுங்கள் என்றார்.

மாணவி சமயபுரத்தாள் : பின் கோடு என்பது என்ன என கேட்டார்?

அஞ்சலக தலைமை அதிகாரி ராமசந்திரன்: அஞ்சலக குறியீட்டு எண் ஆகும். 630 001 என்கிற அஞ்சலக குறியீட்டு எண்ணில் முதலில் உள்ள 6 என்கிற எண் மாநிலத்தையும்,அடுத்து உள்ள இரண்டு எண்கள் மாவட்டத்தையும் , அடுத்து உள்ள மூன்று எண்கள் தபால் சென்று அடைய வேண்டிய தபால் அலுவலகத்தையும் குறிக்கும். நீங்கள் எழுதும் அணைத்து தபால்களிலும் அஞ்சலக குறியீட்டு எண்எழுதி அனுப்பவும்.எழுதி அனுப்பினால் சேர வேண்டிய நபருக்கு உடனடியாக தபால் சென்று அடைந்து விடும் என்றார்.

மாணவி கிருஷ்ணவேணி : விரைவு தபால் உட்பட அணைத்து முக்கிய தபால்களிலும் ஒரு ஸ்டிக்கர் ஓட்டபடுகிறதே,அது என்ன ஸ்டிக்கர்? என்று கேட்டார்.

அஞ்சலக எழுத்தர் தன்ராஜ் : ஸ்டிக்கர் ஆனது பார் கோடு உள்ளது ஆகும். தபால் கவரில் அதனை ஒட்டி ஸ்கேன் செய்தால் அதில் உள்ள எண்ணை கணிணியில் பார்த்து எளிதாக அனுப்பி விடலாம்.பார் கோடு எண்மூலமாக நீங்கள் அனுப்பிய தபால் எங்கு, எப்போது போய் சேர்ந்து உள்ளது என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம் என்றார்.

மாணவர் ருத்திக் ரோஷன் : மை ஸ்டாம்ப் என்பது தொடர்பாக என்ன? என்று கேட்டார்.

தலைமை தபால் அதிகாரி ராமசந்திரன் : மை ஸ்டாம்ப் என்பது யார் வேண்டுமானாலும் நீங்களே உங்கள் புகைபடத்தை தபால் அலுவலகத்தில் உரிய கட்டணத்துடன் கொடுத்து உங்கள் புகை படத்துடன் அதனை ஸ்டம்பாக ஒட்டி பயன்படுத்தி கொள்ளலாம் என்றார்.

மாணவி ரூபா : அஞ்சலகத்தின் சேவைகள் என்ன ,என்ன ? என்று கேட்டார்.

தலைமை தபால் அதிகாரி ராமசந்திரன் : தொலைபேசி கட்டணம் செலுத்துதல்,தமிழ்நாடு மின்சாரவாரிய கட்டணம் செலுத்துதல், சில குறிப்பிட்ட தனியார் ஓம்னி பேருந்துகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்தல்,சில குறிப்பிட்ட அஞ்சலகங்களில் ரயில் முன்பதிவு செய்தல்,ஆர் பி எல் ஐ திட்டம்,பணம் சேமிப்பு கணக்கு,தபால்கள் அனுப்புதல்,பார்சல் சேவைகள்,பணம் அனுப்புதல்,பணம் பெறுதல்,விரைவில் எ டி எம் இயந்திரம் பயன்பாட்டிற்கு வருதல் என பல்வேறு பொது மக்கள் சேவை தொடர்பான பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.

மாணவன் பார்த்திபன்: உடனடி மின்னஞ்சல் மணி ஆர்டர் என்பது என்ன? என கேட்டார்.

அஞ்சலக தலைமை அதிகாரி ராமசந்திரன்: மணி ஆர்டர் படிவம் மூலம் பணம் அனுப்ப முடியும்.உடனடி மணி ஆர்டர் படிவம் மூலம் ரூபாய் 50,000 வரை பணத்தை செலுத்தி உடனடியாக இந்தியா முழுவதும் அடையாள அட்டை காண்பித்து குறிப்பிட்ட சில மணி நிமிடங்களில் ரகசிய எண்ணை சொல்லி பணம் அனுப்பி பெற்று கொள்ளலாம் என்றார்.

மாணவன் சூர்யா :அஞ்சலக வேலையில் எவ்வாறு சேருவது? என கேட்டார் .

அஞ்சலக எழுத்தர் தன்ராஜ்: அஞ்சலக வேலைக்கு மத்திய அரசு நடத்தும் போட்டி தேர்வுகள் எழுதி அதில் வெற்றி பெற்று பணிக்கு வரலாம் என்றார்.

1 comment:

  1. THANK YOU SIR.
    I AM ALSO LEARN ABOUT POST OFFICE NEWS LIKE THESE STUDENTS. I APPRECIATE THAT THINK...
    TO CONTINUE YOUR GOOD THINGS. ...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி