காந்தி, படேலுக்கு முன்னுரிமை - தேசத்தின் பெருமை உயர வழி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 30, 2014

காந்தி, படேலுக்கு முன்னுரிமை - தேசத்தின் பெருமை உயர வழி

'காந்தி மற்றும் சர்தார் படேல் ஆகியோரது நினைவு தினம் மட்டுமே, அரசு விழாவாக கொண்டாடப்படும்' என்ற மத்திய அரசின் முடிவு, பரபரப்பை ஏற்படுத்தும் தகவல்.
இதுவரை, தேசப்பிதா காந்தி மற்றும் பண்டித நேரு மற்றும் அவரது குடும்ப வாரிசு தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், மற்ற மாபெரும் தலைவர்களை அடையாளம் காணமுடியாமல் இருட்டடிப்பு செய்து விட்டது. இந்தியா போன்ற ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாறு கொண்ட ஒரு ஜனநாயக நாட்டில், பிரிட்டிஷ் ஆட்சி ஒழிய பாடுபட்ட பலர் இருந்த போதும், பண்டித நேருவுக்கும், அவர் வாரிசுகளுக்கும் இங்கு அளிக்கப்பட்ட தனிப்பெருமை அபரிமிதமானது. இப்போது, இந்த நாட்டின் கலாசாரம், மரபுகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில், அரசு செயல்பட விரும்புகிறது. கட்சி அரசியலில் ஈடுபடாத, ராமராஜ்யத்தை வலியுறுத்திய காந்தியையும், இந்திய மண்ணில் ஒருமைப்பாட்டை வலியுறுத்தி, அதை ஒரு யூனியனாக உருவாக்கிய சர்தார் படேலை மட்டும் முதனிலையாக வைக்க விரும்புகிறது.

லோகமான்ய திலகர், 'சுவராஜ்யம் என் பிறப்புரிமை' என்று குரல் எழுப்பி, பிரிட்டிஷாரை மிரட்டியவர்; கோபால கிருஷ்ண கோகலே அறவழிப் போராட்டத்தில், காந்தியின் முன்னோடி. அவர்களை புதிய கோணத்தில் காட்டி, இந்த நாட்டில் நெடுங்காலமாக பேசப்பட்ட ராமராஜ்ய கொள்கை வழியில், அறவழிப் போராட்டத்தை நடத்தியவர் காந்தி. அவருக்கு சர்தார் படேல் ஆளுமை பற்றி அதிகம் தெரியும். பாகிஸ்தான் பிரிவினையின் போது, அன்றைய கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டன் எடுத்த முடிவுகளை சிறிதும் ஏற்காமல், பிரிவினைக்கு ஆதரவு தராமல் இருந்தார் காந்தி. ஆனால், வரலாற்றின் போக்குகள், பல்வேறு சம்பவங்களில் மாறும் என்பதற்கு ஏற்ப, பல அதிர்ச்சி சம்பவங்கள் நடந்தன.

அது ஒருபுறம் இருக்க, அன்றைய சுதேசி சமஸ்தானங்களை, இந்திய யூனியனாக மாற்றிய சர்தார் படேல் பணி மகத்தானது. அத்துடன், இந்திய சிவில் சர்வீசஸ் பயிற்சி அமைப்பை உருவாக்கி, இந்தியாவை ஆளும் ஐ.ஏ.எஸ்., வர்க்கம் எப்படி ஆளுமை கொண்டிருக்க வேண்டும் என்று அதற்கான வழிகாட்டியவர் படேல்.

அவரைப் பற்றிய தகவல்கள், பாடநூல்களில் இன்று கிடையாது. முதன் முதலில் தேசிய

ஒற்றுமை, நல்ல ஆட்சி ஆகிய இரண்டும் சுதந்திர இந்தியாவுக்கு தேவை என்று வலியுறுத்திய அவர், தன் மகன், மகளை அமைச்சராக்க விரும்பவில்லை.

படேல் பின்பற்றிய ஆளுமைகளை ஆய்வு செய்ய, பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு அரசு உத்தரவிட்டிருக்கிறது. படேல் நினைவு தினம் அக்., 31ல் அனுசரிக்கப்படுகிறது. சமீபத்தில் இந்தியாவை தூய்மைப்படுத்தும் பணியை, காந்தி பிறந்த தினமான அக்., 2ல், பிரதமர் துவக்கியது, சுத்தமான இந்தியாவை உருவாக்கும் பிரமாண்ட திட்டம். அதே போல, நாட்டின் ஒற்றுமை காக்க, சர்தார் படேலை நினைவு கூர்வது, இந்திய இறையாண்மையை மக்களுக்கு நினைவு படுத்தும் நல்ல முயற்சியே.

இந்த இரு பெரும் தலைவர்களுக்கு, நாடு போற்றும் விழா எடுப்பதும், அவர்கள் பெயரில் மட்டும் அரசு விழாக் கொண்டாட்டம் என்பதும், வளர்ந்த நாடுகள் பின்பற்றுவது போன்ற நல்ல செயல்; அரசியல் துதிபாடும் போக்கு குறையும். ஆங்கிலேயர் ஆண்ட தொடர்ச்சியின் வழியில் பிரதமராக நேரு இருந்தால், அது நிர்வாகத்திற்கு வசதியாக இருக்கும் என்று காந்தி கருதியதால், அவரை அன்று முன்னிலைப்படுத்தினார் என்பதும் வரலாற்றில் உள்ள தகவல்.

அதே சமயத்தில், திருவள்ளுவர் குறளுக்கு முக்கியத்துவம் தந்து, திருவள்ளுவர் பெருமை, சோழ மன்னர் ராஜேந்திரனுக்கு கவுரவம், பண்டித மதன்மோகன் மாளவியா பிறந்தநாளில் ஆசிரியர்கள் பயிற்சி சிறப்பு திட்டங்கள் என, மாநிலம் தோறும், மாமனிதர்களை நினைக்க, மோடி அரசு வாய்ப்பு ஏற்படுத்தினால், அது ஒட்டுமொத்தமாக தனிமனித கவுரவத்தை உயர்த்தும். பொருளாதார பலத்துடன் சுயகவுரவம் காக்க, தேசிய நினைப்பும், கலாசார உணர்வும் தேவை என்பதை, இந்த அரசு இதன் மூலம் கடைப்பிடிப்பது நல்லது.

வளர்ந்து வரும் இளைய தலைமுறையினர், சுயமாக சிந்திக்க வழிகாட்ட அரசு முற்பட்டால், எளிதாக இந்தியா வலிமை கொண்ட நாடாகும். அதன் முதல்படியாக இம்முடிவுகளை அரசு அமலாக்கம் செய்கிறது என்றே கருதலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி