டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு மைய கம்ப்யூட்டர் சர்வரில் கோளாறு : 40 பேருக்கு இன்றுமீண்டும் தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 9, 2014

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு மைய கம்ப்யூட்டர் சர்வரில் கோளாறு : 40 பேருக்கு இன்றுமீண்டும் தேர்வு


சென்னை அருகே டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு மையத்தில் கம்ப்யூட்டர் சர்வரில் கோளாறு ஏற்பட்டதால் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 40 பேருக்கு இன்று மீண்டும் தேர்வு நடைபெறுகிறது.
குரூப்-2 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப்-2 தேர்வு மூலம் 1,204 காலி பணியிடங்களை நிரப்புவதற்குகடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பம் செய்தனர். இதில் முதல்நிலை தேர்வு எழுதிதேர்ச்சி பெற்ற 11 ஆயிரத்து 497 பேருக்கு நேற்று தமிழகம் முழுவதும் 24 தேர்வு மையங்களில் முதன்மை தேர்வு நடைபெற்றது.முதலில் காலை 10 மணியில் இருந்து 12 மணி வரை ஆன்லைன் மூலம் தேர்வும், மதியம் 2 மணி முதல் 3 மணி வரை எழுத்து தேர்வும் நடந்தது.இதில், சென்னையை அடுத்த மறைமலைநகர் சட்டமங்கலம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியின் தேர்வு மையத்தில் சுமார் 300 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இங்கு தேர்வு எழுதுவதற்காக வேலூர், அரக்கோணம், ஆற்காடு பகுதிகளில் இருந்து 270 பேர் வந்து இருந்தனர்.

கம்ப்யூட்டர்கள் இயங்கவில்லை

காலை 10 மணிக்கு ஆன்லைன் தேர்வு எழுதுவதற்கு அவர்கள் கம்ப்யூட்டரை இயக்கியபோது அவர்களில் 40 பேருடைய கம்ப்யூட்டர்கள் மட்டும் செயல்படவில்லை.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனே தேர்வு மைய அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து அந்த கம்ப்யூட்டர் களை அதிகாரிகள் சரி செய்ய முயன்றனர். எனினும் முடியவில்லை.இதனால் தேர்வு எழுத முடியாத 40 பேரும் தேர்வு மையத்தின் முன்பாக தரையில் அமர்ந்து தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அமைதியானமுறையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவருக்கு தேர்வு மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தை

உடனே தேர்வாணையத்தின் தலைவர் சி.பாலசுப்ரமணியன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா ஆகியோர் சட்டமங்கலம் தேர்வு மையத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தைநடத்தினர். இந்த பேச்சு 2½ மணி நேரம் நீடித்தது.அப்போது பாதிக்கப்பட்டவர்கள் தேர்வாணையக்குழு தலைவரிடம் கூறியதாவது:-நாங்கள் 40 பேரும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். காலை 8 மணிக்கே தேர்வு மையத்திற்கு வந்துவிட்டோம். ஆனால் தேர்வுகள் எந்த அறையில் நடைபெறுகிறது என்பது குறித்த தகவல் கூட இந்த மையத்தில் உள்ள தகவல் பலகையில் ஒட்டப்படவில்லை. இதனால் தேர்வு அறைகளை கண்டுபிடிப்பதற்கே முடியவில்லை. இந்த தேர்வு மையத்திற்கு வருவதற்குதேவையான பஸ் வசதியும் கிடையாது. இது போன்ற மையங்களில் இனி வரும் காலங்களில் தேர்வு நடத்துவதை தவிர்க்க வேண்டும்.எங்களது கம்ப்யூட்டர்கள் இயங்காத காரணத்தால் நாங்கள் மீண்டும் தேர்வு எழுதினால் கேள்விகள் கடினமாக வர வாய்ப்பு உள்ளது. எனவே தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.தேர்வு எழுதுங்கள்இதற்கு தேர்வாணைய தலைவர் கூறும்போது, “உங்களுக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பு எனக்கு வருத்தமாக உள்ளது. உங்கள் கஷ்டம் எங்களுக்கு புரியும். எனவே மாலை நடைபெறும் தேர்வை நீங்கள் 40 பேரும் எழுதுங்கள். காலையில் நடைபெறும் தேர்வை நாளை, அதாவது இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை வைத்துகொள்ளலாம்” என்றார்.இதற்கு பாதிக்கப்பட்டவர் கள் அனைவரும் ஒன்றுகூடி எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர். இதன் பின்னர் மீண்டும் தேர்வாணைய தலைவர் பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 40 பேருக்கும் இதே தேர்வு மையத்தில் நாளை காலை ஆன்லைன் தேர்வும், மாலை எழுத்து தேர்வுகளும் நடைபெறும் என்று அவர் உறுதி அளித்தார்.இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.

உணவு, தங்கும் இடம் ஏற்பாடு

இது குறித்து தேர்வாணைய தலைவர் பாலசுப்ரமணியம் நிருபர்களிடம் கூறுகையில், “எதிர்பாரதவிதமாக ஏற்பட்ட கம்ப்யூட்டர் சர்வர் கோளாறு காரணமாக வெளிமாவட்டத்தைச் சேர்ந்த 40 பேரால் குரூப்-2 முதன்மை தேர்வை எழுத இயலவில்லை. இவர்கள் அனைவருக்கும் இதே தேர்வு மையத்தில்தங்குவதற்கும், அவர்களுக்கு உணவு வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு புதிய கேள்வித்தாள் வழங்கி நாளை (இன்று) காலை தேர்வு நடைபெறும். இனிவரும் காலங்களில் தேர்வு மையங்கள் பஸ் போக்குவரத்து வசதிகள் கொண்ட பகுதியில் மட்டும் அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.

1 comment:

  1. Tirunelveli dist.xam centre laum Ithe problem than. Xam 11.15 ku start panni 1.15 ku mudinjathu. Lunch break half an hour than. .CBT ku hall allot panninathu oru room. But xam nadanthathu vera room. .tension paduthitanga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி