தமிழ்நாடு முழுவதும் 2 நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும்: பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கலெக்டர்களுக்கு அரசு அனுமதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 14, 2014

தமிழ்நாடு முழுவதும் 2 நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும்: பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கலெக்டர்களுக்கு அரசு அனுமதி


வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது. இதனால், வட கிழக்கு பருவமழை மேலும் தீவிரம்அடைந்து,
தமிழக கடலோர மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, உள்ளூர் சூழ்நிலைக்கு ஏற்ப பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 20ம் தேதி தொடங்கியது. முதல் வாரத்தில் இயல்பு நிலையைவிட 38 சதவீதம் கூடுதலாகவே மழை பெய்தது. வங்க கடலில் உருவான இரண்டு காற்றழுத்தங்கள் புயலாக உருவெடுத்து திசை மாறி சென்றன. இதனால், தமிழகத்தில் மழை பெய்யாமல் கடந்த ஒரு வாரமாக வறண்ட வானிலை காணப்பட்டது.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு, தென் கிழக்கு வங்கக் கடலில் வளி மண்டல மேல் அடுக் கில் காற்று சுழற்சி உருவானது. அது வலுப்பெற்று காற்றழுத்தமாக மாறி தென்மேற்கு திசையில்நகர்ந்து தமிழக கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ளது. அதனால், தமிழகத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. நேற்று பகலிலும் பல இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 150 மிமீ மழை பெய்துள்ளது. திருத்துறைப் பூண்டி 140 மிமீ, சோழவரம் 110 மிமீ, தாமரைப்பாக்கம், பூண்டி 100 மிமீ மழை பெய்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் 70 மிமீ அளவுக்கு மழை பெய்துள்ளது. அதேபோல காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 60 மிமீ மழை பெய்துள்ளது. இந்த மழையின் காரணமாக சென்னை மற்றும் புறநகரின் பல இடங்களில் மழை நீர் தேங்கியதுடன் குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் புகுந்துள்ளது. பல குடியிருப்பு பகுதிகளுக்கு செல்ல முடியாத வகையில் போக்குவரத்தும் தடை பட்டுள்ளது. வருவாய்த்துறை, மாநகராட்சி நிர்வாகத்தினர் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கனமழையை தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 கடலோர மாவட்டங்களில் இயங்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. தனியார் பள்ளிகளும் விடுமுறை அறிவித்தன. சென்னைப் பல்கலைக் கழக தேர்வுகள் நேற்று ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கை மற்றும் மன்னார் வளைகுடாவில் தொடங்கி தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிவரை பரவியுள்ளதால் இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். குறிப்பாக தென் மாவட்டங்களில் பலத்தமழை பெய்யும். கடலில் மணிக்கு 54 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சில இடங்களில் கடல் சீற்றம் இருக்கும். இது தவிர தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும் சில இடங்களில் கனமழை பெய்யும். தெற்கு ஆந்திர கடலோரப் பகுதி, கேரளா, தெற்கு கர்நாடகா, ராயலசீமா, லட்சத்தீவு, தெலங்கானா விலும் கனமழை பெய்யும். வட தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் கன மழை பெய்யும்.இதையடுத்து, மழை பாதிப்பு பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வும் உள்ளூர் நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி