சென்னையில் தமிழ்நாடு அறிவியல், தொழில்நுட்ப மையத்தின் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற மாதிரி ராக்கெட் தயாரித்தல் குறித்த கருத்தரங்கில் பேசுகிறார் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ராக்கெட் ஏவுதள மைய குழு இயக்குநர் பி.விஜயசாரதி. உடன் (இடமிருந்து) பிர்லா கோளரங்க இணை இயக்குநர் எஸ்.செளந்தரராஜபெருமாள், அறிவியலாளர் டி.முராரி, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் பி.ஐயம்பெருமாள், முதுநிலை அறிவியல் அலுவலர் ஆர்.ஸ்ரீனிவாசன்.
வரும் டிசம்பர் 12 முதல் 20-ஆம் தேதிக்குள் ஜி.எஸ்.எல்.வி மாக்-3 சோதனை ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ராக்கெட் ஏவுதள மைய குழு இயக்குநர் பி.விஜயசாரதி கூறினார்.
தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையத்தின் சார்பில் ஆசிரியர்கள், அறிவியல் இயக்கத்தினர் பங்கேற்ற மாதிரி ராக்கெட் தயாரித்தல் குறித்த நான்கு நாள் மண்டலக் கருத்தரங்கு சென்னையில் திங்கள்கிழமை தொடங்கியது.
தொடக்க விழாவில் பங்கேற்று பி.விஜயசாரதி பேசியது:
எதிர்காலத்தில் ராக்கெட் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு மாணவர்களிடம் அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமானது. ராக்கெட்டின் தேவை, பயன்பாடு போன்றவற்றை ஆசிரியர்கள் மாணவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும். 5-ஆம் வகுப்பு முதலே ராக்கெட்டுகள் குறித்த பாடங்கள் இடம்பெறுவதன் மூலம்
மாணவர்களிடம் ராக்கெட்டுகள் மீதான ஆர்வத்தைத் தூண்ட முடியும். கடந்த 1979-ஆம் ஆண்டு முதல் ராக்கெட்டை இந்தியா விண்ணில் ஏவி வருகிறது. இதில், செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அதேபோல, இந்தியா அனுப்பிய 27 பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளில் 26 ராக்கெட்டுகள் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது உலக அளவில் சாதனையாகும்.
டிசம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் ஜிஎஸ்எல்வி மாக்-3 ராக்கெட்டை ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 ஆயிரம் கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும். இந்த வகை ராக்கெட்டுகள் 5 ஆயிரம் கிலோ எடையை எடுத்துச் செல்லும் திறன் பெற்றவை.
சோதனை ராக்கெட்டில் ஆளில்லா விண்கலமும் ஏவப்பட உள்ளது. வளிமண்டலத்துக்கு மேல் இந்த விண்கலம் கொண்டு செல்லப்பட்டு, கடலில் பத்திரமாக இறக்கப்படும்.
அந்தமானுக்கு அருகில் உள்ள கடல் பகுதியில் இந்த ஆளில்லா விண்கலத்தை இறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பூமியிலிருந்து கிளம்பி மொத்தம் 48 மணி நேரம் இந்த விண்கலம் பயணம் மேற்கொள்ளும். விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்துக்கு இந்தச் சோதனை நிச்சயம்
உதவியாக இருக்கும், என்றார் அவர். தமிழ்நாடு அறிவியல், தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் பி.ஐயம்பெருமாள், பிர்லா கோளரங்க இணை இயக்குநர் எஸ்.சௌந்தரராஜபெருமாள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி