கே.வி., பள்ளிகளில் சமஸ்கிருதம் கட்டாயம் என்ற உத்தரவால் சர்ச்சை: 70 ஆயிரம் மாணவர் பாதிக்கப்படுவர் என கல்வியாளர்கள் புகார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 15, 2014

கே.வி., பள்ளிகளில் சமஸ்கிருதம் கட்டாயம் என்ற உத்தரவால் சர்ச்சை: 70 ஆயிரம் மாணவர் பாதிக்கப்படுவர் என கல்வியாளர்கள் புகார்

'கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மூன்றாவது மொழிப்பாடமாக, ஜெர்மன் மொழிக்குப் பதிலாக, சமஸ்கிருதத்தை போதிக்க வேண்டும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை எழுப்பி உள்ளது. இதனால், 70 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கே.வி.எஸ்., என, அழைக்கப்படும், கேந்திரிய வித்யாலயா சங்கதன் அமைப்பின், ஆளுனர்கள் குழும (போர்டு ஆப் கவர்னர்ஸ்) கூட்டம், அதன் தலைவரான, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில், கடந்த மாதம், 27ம் தேதி நடைபெற்றது. அப்போது, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மூன்றாவது மொழிப்பாடமாக, ஜெர்மனி மொழி போதிப்பதை கைவிடுவது என்றும், அதற்குப் பதிலாக, சமஸ்கிருதத்தை போதிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. வேண்டுமானால், ஜெர்மன் மொழியை, மாணவர்கள் கூடுதல் பாடமாக கற்றுக் கொள்ளலாம் என, முடிவு செய்யப்பட்டது.இந்த முடிவால், நாடு முழுவதும் உள்ள, 500 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், மூன்றாவது மொழிப்பாடமாக, ஜெர்மன் மொழிக்குப் பதிலாக, சமஸ்கிருத மொழி கற்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவர் என்றும், அதனால், அவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் கேள்வி எழுப்பிய போது, அவர் கூறியதாவது:கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மூன்றாவது மொழிப்பாடமாக, ஜெர்மன் மொழியை போதிப்பதில்லை என்ற முடிவு, நாட்டின் நலன் கருதி எடுக்கப்பட்டது. ஆனால், இந்த விஷயத்தில், ஊடகங்கள் குழப்பமான செய்திகளை வெளியிட்டு, பெற்றோர் மத்தியில் பீதியை கிளப்பி வருகின்றன.இந்த முடிவை மத்திய அரசு ஏன் எடுத்தது என்பது தொடர்பாக, அமைச்சகம் சார்பில், விரைவில் அறிக்கை ஒன்று வெளியிடப்படும். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின், சமஸ்கிருத ஆசிரியர்கள், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர். அதில், ஜெர்மன் மொழியை மூன்றாவது மொழிப்பாடமாக அறிமுகப்படுத்தியதற்கு, எதிர்ப்புத் தெரிவித்துஉள்ளனர். சமஸ்கிருத மொழியை, மூன்றாவது மொழிப்பாடமாக அறிமுகம் செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளனர். ஜெர்மன் மொழியை அறிமுகம் செய்தது, கல்விக் கொள்கைக்கு எதிரானது என்றும் கூறியுள்ளனர். இவ்வாறு, ஸ்மிருதி இரானி கூறினார்.

114 சதவீதம் அதிகரிப்பு:

*சமஸ்கிருதத்தை மூன்றாவது மொழிப்பாடமாக அறிமுகப்படுத்தியதற்கு, பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளில் ஒன்றான, பா.ம.க., எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை, சமஸ்கிருதத்தை கட்டாயமாக திணிக்கும் செயல் என்றும் கூறியுள்ளது.

*உயர் கல்வி படிக்க, ஜெர்மன் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆறு ஆண்டுகளில், 114 சதவீதம் அதிகரித்துள்ளது. அதற்கு, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஜெர்மன் மொழி போதிக்கப்பட்டதும் ஒரு காரணம்.

*மத்திய அரசு தற்போது எடுத்துள்ள, புதிய முடிவால், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், இனி மாணவர்களுக்கு சமஸ்கிருதம் தான் போதிக்கப்படும். ஜெர்மன் மொழி போதிக்கப்படாது. வேண்டுமானால், மாணவர்கள் கூடுதல் பாடமாக அதை கற்றுக் கொள்ளலாம்.

*கல்வி ஆண்டின் மத்திய பகுதியில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இதுவரை ஜெர்மன் மொழி படித்த மாணவர்கள், இனி, சமஸ்கிருதத்திற்கு மாற வேண்டியது நேரிடும்.

*கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஆங்கிலம், இந்தி மற்றொரு இந்திய மொழி என்ற மும்மொழி பாடத்திட்டம் அமலில் உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி