ஆரியக் கூத்தாடுகிறார் சுப்பிரமணியன் சுவாமி! பழ.கருப்பையா - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 3, 2014

ஆரியக் கூத்தாடுகிறார் சுப்பிரமணியன் சுவாமி! பழ.கருப்பையா

வரலாற்றை மறைக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி
பழ.கருப்பையா''திராவிடத்தைப்பற்றி வாய் கிழியப் பேசுகிறார்கள்; 'திராவிடன்’ என்று எவனாவது இருக்கிறானா என்று மரபியல் சோதனை (genetic test ) செய்து பார்த்தும் எந்தத் திராவிடனும் இல்லை என்ற முடிவுதான் எட்டப்பட்டிருக்கிறது. 
''ஆரியனும் இல்லை; திராவிடனும் இல்லை. எல்லா இந்தியர்களும் ஒரே வகையான மரபணுக்களைத்தான் பெற்றிருக்கிறார்கள். ஆனால், இங்கே உள்ள வரலாற்று நூல்கள் மட்டும், 'இந்தியா பல இனங்களை உள்ளடக்கிய (multi-ethnic) ஒரு நாடு’ என்று பேசுகின்றன. ஆகவே, நேரு காலத்து வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய இந்த நூல்கள் கொளுத்தப்பட வேண்டும்!''
''இங்கு, இந்து நாகரிகம் ஒன்றுதான் உண்டு; யூத கிருத்துவ நாகரிகத்துக்குப் பிந்தையது இந்து நாகரிகம் என்று காட்டுவதற்காக அதன் தலையை வெட்டி, அதன் கால நீளத்தைக் குறைத்துவிட்டார்கள் (truncated )!''
இப்படி எல்லாம் ஓர் ஆங்கில நாளிதழில் என்னென்னவோ பிதற்றியிருக்கிறார், நம்முடைய சோழவந்தான் சுப்பிரமணியன் சுவாமி.
உலகத்தார், உண்டு என்பதை எல்லாம் இல்லை என்பதும், நன்று என்பதை எல்லாம் தீது என்பதும் அவருக்கு இயல்பு.

சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர்களின் நாகரிகம்; அது, உலக அளவில் தொன்மையான நாகரிகங்களில் ஒன்று. அதை அடுத்து இந்திய மண்ணில் மலர்ந்த மற்றொரு நாகரிகம் வேதகால ஆரிய நாகரிகம்... நிறுவப்பட்ட முடிவுகள் இவை.
ஹரப்பா, மொகஞ்சதாரோவில் சான்று பகரும் வண்ணம் இன்றும் நம் கண்முன்னே விரிந்துகிடக்கும் அகழ்வுகள், திராவிட இன மரபுகளைப் பறையறைந்து முழக்கவில்லையா? இன்றும், பாகிஸ்தான் பகுதிகளில் வழங்கும் பிராகுயி மொழி, திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததுதானே?

வேதகால நாகரிகத்தை மறுப்பது என்பது அவர்கள் பாடு. ஆனால் ஆரிய - திராவிட இனங்களே இல்லை என்று சொல்வதன் நோக்கம், வேதகால நாகரிகத்தை மறுப்பதுபோன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு, திராவிட நாகரிகத்தை முற்றாக வேரறுப்பதுதான்.
'இந்து நாகரிகம்’ வரலாற்றில் எங்கே இருந்திருக்கிறது? நிகழ்காலத் தேவைக்கு ஏற்ப வேத நாகரிகம் அணிந்து வருகின்ற முகமூடிதானே இந்து நாகரிகம் என்பது!

இந்திய மக்களைத் தனித்தனியாக வேறுபடுத்தி அறியமுடியாத நிலையில், இசுலாமியர்கள் நம்மை மொத்தமாக 'இந்து’ என்று அழைத்தார்கள். அதை வெள்ளைக்காரன் புழக்கத்துக்குக் கொண்டு வந்துவிட்டான்.
'இந்து’ என்னும் சொல் சங்க இலக்கியத்தில் காணப்படுகிறதா? திருக்குறள் உள்ளிட்ட பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் காணப்படுகிறதா? ஐம்பெருங்காப்பியங்களில் காணப்படுகிறதா? வடமொழிக் காப்பியங்களைத் தமிழில் 'ராமாயணம்’ என்றும் 'மகாபாரதம்’ என்றும் மொழிபெயர்த்த கம்பனுக்கும் வில்லிபுத்தூரார்க்கும் அந்தச் சொல் தெரிந்திருந்ததா? வால்மீகிக்குத் தெரிந்தல்லவா கம்பனுக்குத் தெரிய வேண்டும்? நமக்கு மிக நெருக்கத்தில் வாழ்ந்த, கருணையே வடிவான வள்ளலார் அந்தச் சொல்லை அறிவாரா?

அதனால்தான், விவேகானந்தர் திருவனந்தபுரத்தில் இந்து மறுமலர்ச்சியைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது, ஒருவர் ''நாங்கள் எல்லாம் இந்துக்கள் இல்லை'' என்று ஆணித்தரமான குரலில் குறுக்கிட்டார். அத்தோடு வியர்த்து விறுவிறுத்து அமர்ந்துவிட்டார் விவேகானந்தர்.
அப்படிக் குறுக்கிட்டவர், நமக்கு 'நீராருங் கடலுடுத்த’ என்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைத் தந்த மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை.

வங்காளி, ஒரியன், மராத்தியன் என்று மொழிவழி இன அடையாளம் கொண்ட மாநிலங்கள் இன்னும் பல உண்டு. ஆனால், அவர்களுக்கு நம்முடைய சைவசித்தாந்தம்போல் தனியான மெய்யியல் மரபு இல்லை; குறள்போல் தனியான வழிகாட்டு நூல்கள் இல்லை; ஐம்பெருங்காப்பியங்கள் இல்லை; சிலம்பு போற்றும் மாதவி போன்ற நாட்டியத் தாரகைகள் இல்லை; யாழ்போன்ற இசைக் கருவிகள் இல்லை. எல்லாவற்றையும்விட அவர்களுடைய மொழிகள் வளர்ச்சியடைந்த செவ்வியல் மொழிகளாக இல்லை.

அதனால்தான், வங்கத்தில் காயத்தர் வகுப்பில் பிறந்த விவேகானந்தர், ஆரிய வேதாந்தத்தைத் தூக்கிப் பிடிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

அதே கையறுநிலைதான் தமிழர்களின் நிலையும் என்று எண்ணிக்கொண்டு தெற்கே வந்து வேத வேதாந்தம், இந்து மறுமலர்ச்சி என்றெல்லாம் பேச முற்பட்டு, மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையால் குறுக்கிடப்பட்டு அமரும் நிலை ஏற்பட்டது விவேகானந்தருக்கு.

தமிழ்நாட்டின் நிலையே வேறு. இங்கு பெருமாள் உலாவரும்போது தமிழ் முன்னால் போகும்; அதைக் கேட்டுக்கொண்டே மகிழ்ந்து பெருமாள் பின்னால் போவார். பெருமாளை விரட்டிப் பிடித்துக்கொண்டு சமஸ்கிருதம் போகும்.
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தைப் புரட்சியாளர் ராமாநுசர் 'திராவிட வேதம்’ எனச் சிறப்பித்தார். அதை எழுதியவர்கள் திராவிடர்கள் என்பதால், அது 'திராவிட வேதம்’ எனப்பட்டது. தங்களுக்குத் தேவையான வேதத்தைப் படைத்துக்கொள்ளும் ஆற்றல் திராவிடர்களுக்கு உண்டு என்பதை இது காட்டவில்லையா?

தமிழர்களை ஒருமைப்படுத்தித் தூக்கி நிறுத்துகின்ற முயற்சி, வரலாற்றில் இரண்டுமுறை நேரிட்டது. ஒருமுறை பக்தி இயக்கத்தாலும் இன்னொரு முறை திராவிட இயக்கத்தாலும்.

முதல் முயற்சியை மேற்கொண்டு வெற்றியும் கொண்டது பக்தி இயக்கம். அது ஐந்தாம் நூற்றாண்டில் தொடங்கிச் சில நூற்றாண்டுகள் வரை தொடர்ந்து நடைபெற்றது.

சாதியால் நேரிட்ட 'மேல்கீழ்’ என்னும் பாகுபாடு தமிழினத்தைச் சூறையாடிவிட்டது. தமிழினம் பிளவுபட்டுக் கீழ்மைப்பட்டிருந்தது. அதைப் போக்குவதற்கான முயற்சி சிவனையும் பெருமாளையும் முன்வைத்து நடத்தப்பெற்றது.

பார்ப்பனரிலிருந்து, தாழ்த்தப்பட்டவர், சலவைத் தொழிலாளி, பாணர், மண்பாண்டம் செய்வோர் என அனைவரும் நாயன்மார்களாகவும் ஆழ்வார்களாகவும் ஆகலாம்; 'உயர்நிலை அடைவதற்குச் சாதி ஒரு தடையில்லை’ என்பது முழக்கமாக்கப்பட்டது. பக்தி இயக்கத்துக்குப் பிறகும் சாதிகள் நீடித்தன என்றாலும், அவற்றின் மையமான உயர்வுதாழ்வு சைவ வைணவங்களால் ஒழிக்கப்பட்டுவிட்டன.

'பசுவைத் தோலுரித்துத் தின்று வாழும் புலையனாயினும் சிவனுக்கு அவன் அன்பன் ஆகில், அவன்தான் நான் வணங்கும் கடவுள்’ என்றார் திருநாவுக்கரசர். சிவனைவிடக் கூடுதலான இடம் அடியார்க்கு வழங்கப்பட்டு, சாதி அழுத்தி வைக்கப்பட்டது மாபெரும் புரட்சியாகும்.
பௌத்தத்துக்கும் சமணத்துக்கும் எதிராக நடந்த இந்தப் போரில், பக்தி இயக்கத்தால் ஏற்பட்ட தலையாய பயன் தமிழர்கள் ஒருமைப்பட்டதுதான்.

பக்தி வெள்ளம் சுழித்தடித்து ஆர்த்தபோது, ஞானசம்பந்தன் உள்ளிட்ட எண்ணிலடங்கா ஆரியர்கள் இந்த இழுவையில் உள்ளே வந்துவிட்டனர். திருமூலர், காரைக்கால் அம்மையார் என வந்த பக்தி இயக்கத்தில், திருநாவுக்கரசருக்கு நிகரான இடம் ஞானசம்பந்தருக்கு வழங்கப்பட்டது.
ஞானசம்பந்தர் சீர்காழி பார்ப்பனர். அவர் திராவிட சமய உயர்வைப் போற்றி உள்ளே வந்து, அதோடு இரண்டறக் கலந்து, அதன் மேன்மைக்குத் தோள் கொடுக்கப் புறப்பட்டமையால், அவர் தமிழர்களால் பெரிதும் போற்றப்பட்டார். தமிழர் வீடுகளில் ஞானசம்பந்தர் பெயர் பரவலாகக் காணப்படுவதற்கும் ஆரியர் வீடுகளில் அந்தப் பெயர் அறவே காணப்படாமைக்கும் ஞானசம்பந்தரின் திராவிட சமயப் பிணைப்பே காரணம்.
திராவிடர்கள் ஆவிடைக்குள் இருக்கும் லிங்கத்தை வழிபடுபவர்கள். உலகிலுள்ள எல்லாத் தொன்மையான நாகரிகத்தினரும் குறி வழிபாட்டினர்தாம்.

ஆயினும் திராவிட சமயத்தினரை ஆண்குறியை (சிசுனத்தை) வழிபடுபவர்கள் எனப் பழித்த வைதிக மரபில் வந்த ஆதிசங்கரர், அந்தச் சமயத்தை உயர்த்திப் பிடித்த ஞானசம்பந்தரை 'திராவிடச் சிசு’ என்றும் பழித்தார். பிறப்பில் ஆரியராயினும், அவர் சாதி நீக்கம் செய்யப்பட்டுத் திராவிடச் சிசு ஆக்கப்பட்டார். அவ்வளவு சினம் ஆதிசங்கரருக்கு. ஞானசம்பந்தருக்கு மிகவும் பின்னால் வந்தவர் ஆதிசங்கரர். செத்துப் போனவரைக்கூடத் தன் சாதியில் இருக்கவிட ஆதிசங்கரருக்கு மனம் இல்லை.

வேத பாராயணம் செய்து தீயை வழிபடும் குலத்தில் பிறந்த ஞானசம்பந்தர் 'சிசுனத்தை’ வழிபடச் சென்றுவிட்டதை ஆதிசங்கரரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பக்தி இயக்கத்தால் திராவிடச் சமயங்களை நோக்கி இழுத்துச் செல்லப்பட்ட ஆரியர்களின் எண்ணிக்கை ஆதிசங்கரரை மருளச் செய்தது.
திராவிடச் சமயத்தால் மேலும் மேலும் இழுத்துச் செல்லப்படாமல் இருக்க, ஆரியர்களுக்கு 'அத்வைதம்’ என்னும் வைதிகக் கோட்பாட்டைப் பரிந்துரை செய்து 'நீயே பிரம்மம்' எனப் போதித்தார் ஆதிசங்கரர்.

வாழ்க்கைப் போராட்டத்தில் நொறுங்கிப் போகின்ற மனிதனுக்கு 'நானே பிரம்மம்’ (அகம் பிரம்மாஸ்மி) என்று எண்ணிப் பார்ப்பது சுகத்தைத் தரவில்லை; பயத்தைத் தந்தது.

ஆகவே, நினைப்பில் ஆதிசங்கரர் விரும்பியபடி அத்வைதிகளாகவும், நடப்பில் திராவிடச் சமய 'சிசுன’ வழிபாட்டினராகவும் அவர்கள் விளங்கத் தலைப்பட்டார்கள்.

ஆதிசங்கரரால் பழிக்கப்பட்ட, தமிழ்நாடு முழுவதும் உள்ள 'சிசுனங்களுக்கு,’ அவர்களே பால் ஊற்றி, நீர் ஊற்றி நீராட்டுபவர்களாகவும், தீபங் காட்டுபவர்களாகவும் மணியடிப்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது ஆதிசங்கரரின் தோல்வியையும் சிசுன வழிபாடு என இழிவுபடுத்தப்பட்ட திராவிடச் சமயத்தின் வெற்றியையும் குறிக்கவில்லையா?

பூசகர்களாகத் திராவிடர்கள் இல்லை என்பதும், பூசனைக்குரிய மொழியாகத் தமிழ் இல்லை என்பதும் மிகப் பெரிய உறுத்தல்தான் எனினும், ஆரியர்கள் பூசனை செய்கிற தெய்வங்கள் திராவிடத் தெய்வங்கள் என்பது திராவிட நாகரிகத்தின் வெற்றியா? வேத நாகரிகத்தின் வெற்றியா?

பக்தி இயக்கம் போலவே, தமிழர்களை ஒருமைப்படுத்துவதற்கான பிறிதொரு இயக்கத்தின் காலத்தேவை 20-ம் நூற்றாண்டின் முதற்பகுதியில் ஏற்பட்டது.
பக்தி இயக்கம், சாதிகளைத் தாண்டித் தமிழர்களை ஒருமைப்படுத்த ஒருகட்டத்தில் சிவனையும் அடுத்த கட்டத்தில் பெருமாளையும் முன்வைத்ததுபோல, திராவிட இயக்கம் மொழிவழிப்பட்ட இன உணர்வை முன்வைத்தது. இது தெளிந்த அறிவுநிலை.

அரசு அலுவலகங்களில் ஆரிய ஆளுமை, பண்பாட்டுத் தளத்தில் சமஸ்கிருத ஆளுமை, சமூகத் தளத்தில் திராவிடர்கள் சூத்திரர்களாகிவிட்ட தாழ்மைநிலை... இவை எல்லாம் காந்தியின் தலைமையில் விடுதலைப் போராட்ட வீரராக இருந்த பெரியாரை, அதிலிருந்து திருப்பித் தன்மான இயக்கத்தைத் தோற்றுவிக்கச் செய்தது. பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் இணைந்து தமிழர்க்குச் செய்த நன்மை அளப்பரியது.

சொல்லொணா அறிவும் நெறிசார்ந்த வாழ்வும் உடைய ராஜாஜி, 'குல்லூகப் பட்டர்’ ஆக்கப்பட்டது கொடுமைதான். ஆயினும் 1,000 ஆண்டு அடிமை நிலையிலிருந்து வீறுகொண்டு எழும் ஓர் இனம் அளந்து பேச முடியாது என்பதை அறிந்தே அமைதி காத்தார் ராஜாஜி.

ஆனால், 1967 தேர்தலில் ''பூணூலை ஒரு கையில் பிடித்துக்கொண்டு, இன்னொரு கையால் தி.மு.க-வுக்கு வாக்களியுங்கள்'' என்று ராஜாஜி சொல்லமுடிந்ததற்குக் காரணம், 'சமூகத்தில் பேதம் நீங்கிச் சமநிலை ஏற்படுவதற்கான காலத்தேவைதான் திராவிட இயக்கம்’ என்பதை ராஜாஜி உணர்ந்திருந்ததாகத்தான் இருக்கும்.

தன்மானம் என்பது தன்னுடைய மானம் மட்டுமில்லை; இனத்தின் மானமும்கூட! இனத்தின் முகம் மொழிதானே! ஆகவே திருக்குறள், சிலப்பதிகாரம் முன்னிலை பெற்றன. தொழத்தக்க கண்ணகி, பண்பாட்டின் பிரதிபலிப்பாகிவிட்டாள். சமஸ்கிருதத்துக்கு எதிரான தனித்தமிழ்ப் போர் மறைமலை அடிகள் தலைமையில் நடந்தது. 

சமஸ்கிருதக் கலப்பால் தமிழின் நேர்த்தி கெட்டுப் போகிறது என்று சொல்லி பிறப்பால் பார்ப்பனரான சூரியநாராயண சாஸ்திரி, தன்னுடைய பெயரைத் தனித்தமிழில் பரிதிமாற்கலைஞன் என மாற்றிக்கொண்டதைக் கண்டு பூரித்த தமிழ்ச் சமூகம், அவரைத் தலைமேல் வைத்துக் கூத்தாடியது. திராவிட இயக்கத்தின் முக்கியத் திருப்பம் அதன் ஒரு பிரிவுத் தலைமையை ஜெயலலிதா மேற்கொண்டது.

பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் என்னும் வரிசையில் ஜெயலலிதா படம் காணப்படுவதும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் திராவிடக் கட்சிக்கு ஒரு பார்ப்பனப் பெண் தலைமை ஏற்பதும் ஒரு முரண் அல்லவா என்று கருணாநிதி கேட்டார்.

இட ஒதுக்கீட்டுக் கொள்கையிலிருந்து ராஜபக்ஷே எதிர்ப்புநிலை வரை, இந்தி எதிர்ப்பிலிருந்து பி.ஜே.பி-க்கு சமஸ்கிருத வார ஒழிப்புநிலை வரை, எந்தத் திராவிடக் கொள்கையிலிருந்தாவது ஜெயலலிதா தடம் புரண்டிருந்தால், கருணாநிதியின் 'திராவிட முரண்’ என்னும் வாதம் நிலைபெறும்! அப்படி நடந்ததா? இன்னும் சொன்னால் கருணாநிதியைவிடக் கூடுதலாக அவர் வேகப்படவில்லையா? இப்போது அது குறித்ததல்ல வாதம்!

வேத மதத்தினரான ஞானசம்பந்தரின் திராவிட சமயச் சார்பும் சமஸ்கிருத மொழியைச் சார்ந்திருக்க வேண்டிய பரிதிமாற்கலைஞரின் தனித்தமிழ் இயக்கச் சார்பும், ஜெயலலிதாவின் திராவிட இயக்கச் சார்பும் ஆரிய முரண்களே தவிர, எப்படித் திராவிட முரண்கள் ஆகும்?
ஐரோப்பாவில், தன்னை யாரும் கவனிக்கவில்லையே என்று கவலைப்பட்ட ஒரு பெண், ஆடைகளை அவிழ்த்துப் போட்டுவிட்டு அம்மணமாக நடுச்சாலையில் ஓடினாளாம்.

தேடுவாரற்றுப் போய்விட்ட நிலையில் தன்னுடைய இருப்பைப் வலுப்படுத்திக்கொள்ளச் சோழவந்தான் சுப்பிரமணியன் சுவாமி இவ்வளவும் செய்ய வேண்டியிருக்கிறது.
எனவே, ஆரியக் கூத்தாடுகிறார் சுப்பிரமணியன் சுவாமி!

17 comments:

 1. Mikavoum payanoulaa seithi nantree sir pls more post

  ReplyDelete
  Replies
  1. நண்பர்களுக்கு காலை வணக்கம்.... ராமர் வழக்கு நாளைய பட்டியலில் 48 ஆவது எண்ணாக இடம் பெற்றுள்ளது...
   நாள்: 05/11/14
   வழக்கு எண்; 16547
   கோர்ட் எண் : 12
   வரிசை எண்: 48
   நீதிபதி: மாண்புமிகு.டி.ராஜா

   நல்லதே நடக்கும்... அவை அனைத்தும் நல்லதாகவே நடக்கும்.....

   Delete
 2. Iyya karppayavin Tamil pani sirakka valthukkal. Nandri iyya

  ReplyDelete
 3. nalla karutthulla seithi nandri maniyarasan sir,and pazha karuppaiya sir

  ReplyDelete
 4. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கீங்க மணி ஜீ

  நன்றி

  ReplyDelete
 5. 3000 posting nu kalvi seithihal la snnanga athu poiyya unmaiya

  ReplyDelete
 6. அருமையான கட்டுரை.தக்க நேரத்தில் திரு.பழ.கருப்பையா அவர்களின் அறிவு சார் வாதங்களோடு கூடிய கட்டுரையை எடுத்து வெளியிட்ட திரு.மணியரசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. அசத்தும் அடுத்த சுவாமி.... மணியரசன்

  ReplyDelete
 8. Mr.Akilan Sir weightage for Adi diravidar List pathi oru update pannunga pls...

  ReplyDelete
 9. மணியரசன் சார்
  கலக்கிட்டீங்க போங்க!
  அற்புதம்!
  அருமை!
  சார் நீங்க ஒரு புரட்சியாளர்
  உங்கள் பணி மேலும் சிறப்படைய எனது வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. நன்றி திரு மணியரசன்.

  தமிழ் பேசத்தெரியாத அய்யர், திராவிடனைப்பற்றி சொல்லவதற்க்கு உரிமையே இல்லை. அவர் எது சொன்னாலும் அபத்தமே. மீனவர்களை பற்றி பேட்டி கொடுத்து, நான் பேசவில்லை என்று மறுதளித்துவிட்டார்.

  திராவிடனுக்கு ஏற்படுத்திய அனீதி

  நேரு தமது இந்திய வரலாற்றுப் புத்தகத்தில் எழுதியுள்ளார். திராவிடரின் போர் முறை நேருக்கு நேர் நின்று மோதுவது! அடுத்துக் கெடுப்பது ஆரியரின் போர் முறை !

  ஆரியரின் போர்முறை மரத்தின்பின் மறைந்து தாக்குவது! ஆரியக் கூட்டம் ஒரு சிறு கும்பல்தான். மிகச்சிறு கும்பல்! ஆனால் நீர் மூழ்கிக் கப்பல்போல் (சப்மெரைன் போல்) மறைந்திருந்து தாக்கும் இயல்பு விடவாயு போல் பரவினதும் மாய்க்கும் கொடிய சக்தி; வெடிகுண்டுபோல் வீசப்பட்டதும் அரண்களைப் பிளந்தெறியும் வலிமை பெற்றது. இல்லையேல் சிறுகும்பல் பெரியதோர் கூட்டத்தை எங்ஙனம் எதிர்க்கத் துணியும்? (அறிஞர் அண்ணா; தமிழரின் மறு மலர்ச்சி)

  தமிழரின் பண்பாட்டையும் மொழி, கலை முதலான செல்வங்களையும் அழித்தொழிப்பதற்கு இன்றுவரை ஆரியர்கள் இடைவிடாது முயன்று வருகின்றனர். அறிஞர் அண்ணா இது பற்றிக் கூறுவதை அப்படியே தருகின்றோம்.

  "கூவுங்கள் ஆரியர்களே! கொக்கரியுங்கள்! தமிழ் மீது மோதிக் கொள்ளுங்கள்; தமிழரின் முயற்சிக்கெல்லாம் தடை செய்யுங்கள்! தமிழ் மொழியைத் தழைக்க விடாதீர்கள்; தமிழிலே வடமொழியை ஆங்கிலத்தை, இந்தியைக் கலக்கிக் குழப்புங்கள்; தமிழன் தன்னைத் தமிழன் என்றுரைத்தால் சீறுங்கள். தமிழ்மொழியில் இசை இருக்கட்டும் என்றால் எதிர்த்துப்பேசுங்கள். கலைச் சொற்களுக்கு வடமொழியே இருக்க வேண்டும் என்று வாதாடுங்கள்; தமிழனைத் தாழ்ந்த சாதி என்று சொல்லுங்கள். கூட இருக்கக் கூடாது என்று கட்டளை-யிடுங்கள். கோயிலிலும் குளத்திலும் இழிவு படுத்துங்கள். சாப்பாட்டு விடுதி-களிலும் சாக்கடை இடத்தையே தமிழருக்குத் தாருங்கள். உம் ஆணவச் செயலைத், திமிர்வாதத்தை, ஆரியத்தை நாம் வரவேற்கிறோம். ஆம்! உம் எதிர்ப்பு வளர வளரத்தான் தமிழனின் உள்ளத்தில் வேதனை பிறக்கும். வேதனை வளர்ந்தால் அவன் வேல்பட்ட புலிபோலச் சீறுவான்! "(தமிழரின் மறுமலர்ச்சி)

  ReplyDelete
  Replies
  1. bharathiyar,periyar,kamarajar iruntha engal tamizh desathil saathi,madham pirivinaikku velai illai,thanku maniyarasan,alex sir,

   Delete
 11. Thamilar anaivarum sathi,matham kadanthu ondru badavendiyathu indru miga mukkiyam. I appriciat Mani Ara San sir and Alex sir.

  ReplyDelete
 12. sathi.madham.ellam irunthalthalthan panam pugal serkka mudium.ithu thalaivargal arasialvaathigalthan karanam

  ReplyDelete
 13. gurugulam sir 3000 posting papper 1kka 2kka pls sollunga matra nanbargalum therinthaal sollunga.ethai nan kadasi vaaippaga nenaikkeren . next month nan dubaikku pogiren petrol bunkil job 12000 salary.3years agriment.tet my wiet64,05,i am m.a.m.ed.d.ted tamail majar nanevvalavu padithatharkku dubai petrol bunk vealai kidaithirukku.paarthingala en tamizkku kidaitha vaaipugalai.mariyathayai.simmasanathai

  ReplyDelete
  Replies
  1. dear mr.kannan,mudintha alavu nam naatileyae job try pannungal.kandippaga kidaikkum.teacher profession vittu veru velaikku sellatheergal.neengal athigama padithulleergal.so,intha fieldlaye job try pannungal.kandippaga kidaikkum.foreign vaalkai tharpothaikku nalamaga thondrum.aanal furture il athu namakku uthavathu.so school il try pannungal.kandippaga kidaikkum.trb next callfare pannumpothu neengal nichayam vetri peruveergal...muyarchi irunthal nichayam vetri peruveergal...vaalthukkal...nam ethir kaalam than namakku mukkiyam....

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி