சென்னைப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற "திருக்குறளின் தொடர்பியல் பரிமாணங்கள்' என்ற தலைப்பிலான கருத்தரங்கு தொடக்க நிகழ்வில் திறந்து வைக்கப்பட்ட திருவள்ளுவர் படம், அதை வரைந்த ஓவியர் வேணுகோபால் சர்மா படத்துடன் (இடமிருந்து)பல்கலைக்கழக இதழியல், தகவல் தொடர்பியல் துறைத் தலைவர் ரவீந்திரன், மத்திய கலால், சேவை வரித் துறை ஆணையர் சி.ராஜேந்திரன், பல்கலைக்கழகத் துணைவேந்தர் தாண்டவன்,மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் அவருடைய மனைவி வந்தனா, ஓவியர் வேணுகோபால் சர்மாவின் மகன் ஸ்ரீராம் சர்மா தம்பதி.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்களின் மனங்களும், ஆன்மாவும் விடுதலை பெற வழி வகுத்த திருவள்ளுவர்தான் உண்மையான தேசப் பிதா என்று மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் கூறினார்.
சென்னைப் பல்கலைக்கழக இதழியல், தகவல் தொடர்பியல் துறை சார்பில் "திருக்குறளின் தொடர்பியல் பரிமாணங்கள்' என்ற தலைப்பிலான கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
தொடக்க நிகழ்வாக, ஓவியர் கே.ஆர். வேணுகோபால் ஷர்மாவால் வரையப்பட்ட திருவள்ளுவர் உருவப் படம் மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவுற்றதைக் குறிக்கும் வகையில் திருவள்ளுவர், ஓவியர் வேணுகோபாலின் படங்கள் திறந்து வைக்கப்பட்டன.
விழாவில், பங்கேற்று படங்களைத் திறந்து வைத்து மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் பேசியது:
திருவள்ளுவர் எனும் மிகப் பெரிய ஆன்மிகப் புலவரை இந்தியா இந்த உலகுக்குத் தந்துள்ளது. இதற்காக ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ள வேண்டும். திருக்குறள் என்பது சாதாரணத் தத்துவப் புத்தகமல்ல, மனிதாபிமானத்தைப் போதிக்கும் இந்தியாவின் புத்தகமாகும். இந்தியாவுக்கான சிறந்த அறிமுகம் திருக்குறள் என்று கூறுவதும் மிகையாகாது. ஏனெனில், தனது திருக்குறள்கள் மூலம் தமிழகத்தின் பழைமைவாய்ந்த கலாசாரத்துக்கு மட்டுமின்றி, தொன்மையும் பழைமையும் வாய்ந்த இந்திய நாகரீகத்துக்கு சிறந்த தூதராக திருவள்ளுவர் விளங்கி வருகிறார்.
சுதந்திரப் போராட்டத்தை வழி நடத்திச் சென்று, 1947-இல் இந்தியாவுக்குச் சுதந்திரம் பெற்றுத் தந்த மகாத்மா காந்தியை தேசப் பிதா என போற்றுகின்றபோது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்களின் மனங்களும், ஆன்மாவும் விடுதலை பெற வழி வகுத்த திருவள்ளுவரை ஏன் தேசப் பிதாவாக நாம் போற்றக்கூடாது. அப்படிப் பார்க்கும்போது திருவள்ளுவர்தான் உண்மையான தேசப் பிதா.
"ஜெய் ஹிந்த்' எனக் கூறும்போதும், மூவர்ண தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்துகிறபோதும், மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்துகிறபோதும் திருவள்ளுவரை நாம் கௌரவிக்கிறோம். துரதிருஷ்டவசமாக இந்தியாவின் பிற பகுதிகளுக்கு குறிப்பாக வட இந்தியாவுக்கு திருக்குறள் குறித்தும், திருவள்ளுவர் குறித்தும் பரப்பப்படாமல் கைவிடப்பட்டுள்ளது.
இனியாவது இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு பள்ளிகளிலும் திருக்குறள் கற்றுத்தரப்பட வேண்டும். மனித வாழ்வின் ஒவ்வொரு படி நிலைகளையும் விளக்கமாகவும், முழுமையாகவும் திருக்குறள் விளக்குகிறது.
இந்திய ஆட்சிப் பணியில் இடம்பெறும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் திறமையான நிர்வாகம், மக்களுக்கு பாகுபாடற்ற முறையான சேவையைச் செய்வதற்கு கற்றுக்கொள்ள முதலில் திருக்குறளைப் படிக்க வேண்டும். இதற்கு உத்தரகண்டிலுள்ள லால்பகதூர் சாஸ்திரி குடிமைப் பணிகள் அகாதெமியில் திருக்குறளும் பாடமாகச் சேர்க்கப்பட்டு கற்றுத்தரப்பட வேண்டும். அதோடு, அரசால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படம் வரையப்பட்டு 50 ஆண்டுகள் (பொன் விழா) நிறைவுற்றதை நாடு முழுவதும் அனுசரிக்க வேண்டும் எனவும், உலகம் முழுவதும் உள்ள இந்தியத் தூதரகங்களில் திருவள்ளுவர் படம் வைக்கப்பட வேண்டும் எனவும் மத்திய கலாசாரத் துறை அமைச்சரிடம் வலியுறுத்தப்படும்.
மேலும், பல மொழி, கலாசாரங்களைக் கொண்டும் ஒன்றுபட்டு இருப்பதுதான் இந்திய நாடு. இதுதான் இந்தியாவின் அடையாளம். இந்த அடையாளம் அழிந்துவிடாமல் காக்க, அனைவரும் அவரவர் தாய்மொழியை மதிக்க வேண்டும். பெற்றோர் தங்களுடைய குழந்தைகளுடன் தாய்மொழியில்தான் உரையாட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி