காலாண்டு தேர்வு மதிப்பீட்டு பணிகள் தீவிரம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 7, 2014

காலாண்டு தேர்வு மதிப்பீட்டு பணிகள் தீவிரம்


மாவட்ட பள்ளிகளில், காலாண்டு தேர்வு முடிவுகள் குறித்த மதிப்பீட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அரசுப் பள்ளிகளில், படிக்கும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள், பள்ளிக் கல்வித்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாலை நேர சிறப்பு வகுப்புகள், வழிகாட்டி கையேடுகள், பாட ஆசிரியர்களுக்கு பயிற்சி, கற்றல் குறைபாடுள்ள மாணவர்கள் மீது சிறப்பு கவனம் என பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.அடுத்த கட்டமாக, ’காலாண்டு தேர்வில் 60 சதவீதத்திற்கும் குறைவாக பெறும் பள்ளிகளின் மீதும், தலைமையாசிரியர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, மதிப்பீட்டு பணிகள் தீவிரமாக நடக்கிறது.மதிப்பீட்டு பணிகள் நிறைவு பெற்றதும், தேர்ச்சி விகிதம் குறைவு, மாணவர்கள் மதிப்பெண் குறைந்ததற்கான காரணம் அனைத்தும் ஆய்வு செய்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு அறிக்கை அனுப்பப்படவுள்ளது. கோவை மாவட்டத்தில், காலாண்டு தேர்வு ஆய்வின் முடிவில், பத்தாம் வகுப்பில் மாவட்ட சராசரி தேர்ச்சி விகிதம் 73.75 சதவீதமாகவும், பிளஸ் 2 வகுப்பில் 80.38 சதவீதமாகவும் உள்ளது.

கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில், ”காலாண்டு தேர்வு முடிவுகளை கொண்டு, பொதுத்தேர்வு முடிவுகளை நிர்ணயிக்க இயலாது. இத்தேர்வு முடிவுகளை கொண்டு மாணவர்களின் நிலையை உணர்ந்து எளிதாக தயார்படுத்த இயலும். இதன் காரணமாகவே மதிப்பீட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.மதிப்பீட்டு பணிகளின் விபரம் சென்னைக்கு அனுப்பப்படவுள்ளது. மேலும், கோவை மாவட்டத்தில், 60 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி விகிதம் பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. காலி பணியிடங்களில் ஆசிரியர்கள் பணிநியமனம், கற்றல் குறைபாடுள்ள மாணவர்கள் மீது தனி கவனம் என பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது,” என்றார்.

4 comments:

  1. எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கின்றனர் ஆசிரியர்கள் ,
    குறிப்பாக,
    கிராமத்து பள்ளிகளில்10 மற்றும் +2 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள் .
    சுய ஊக்குவித்தலே இல்லாமல்
    " என்னவோ போடா மாதவா !"
    மனநிலையிலேயே தற்போதைய மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர் !
    பத்தாம் ,பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களை வகுப்பில் உட்கார வைப்பதே பெரிய சாதனையாக இருக்க, அவர்களின் மனதை பாடத்தில் ஒருமுகப்படுத்துவது இமாலய சாதனையாக இருக்கிறது .

    சட் சட்டென இயல்பு மாறும் பதின் பருவத்தில் இருக்கும் மாணவர்கள், எப்போதும் துரு துருவென எதிர்க்காலத்தைப் பற்றிய கவலையற்ற மனநிலையில் இருப்பது, ஆசிரியர்களுக்கு மிகுந்த கவலை அளிப்பதாக இருக்கின்றது.
    ஆசிரியர்கள், எப்படியாவது இந்த மாணவர்களை தேர்ச்சி பெற செய்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யும் ஒவ்வொரு விஷயமும், மாணவர்களிடம் கேலிக்குரியதாக மாறிப்போகிறது.
    இது சற்று வயது முதிர்ந்த ஆசிரியர்களுக்கு சலிப்பை தருகிறது .
    ஆசிரியர்கள் எவரும் மாணவர்களுக்கு அறிவுரை கூறி தங்கள் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை .
    நேரம் கிடைப்பதே பெரிய விஷயமாகி போய் விட்டது,
    எப்படியாவது 75%க்கு மேல் வாங்கி அதிகாரிகளின் கண்டன பேச்சிலிருந்து தப்பி விட வேண்டும் என்பதே ஆசிரியர்களின் தற்போதைய கவலை !
    இப்படியொரு மனநிலையில் இருக்கும் ஆசிரியர்களுக்கு எப்படி நேரத்தை வீணாக்க தோன்றும் ?
    விளைவு !
    நீதி போதனை பாட வேலைகளும் பாட ஆசிரியர்களின் கரங்களில் அடைக்கலமாகிவிட்டன !
    இது தான் தற்போதைய அரசுப்பள்ளிகளின் நிலைமை !
    மெட்ரிக் பள்ளிகளின் நிலைமை?
    சொல்லவே வேண்டாம் !
    பிராய்லர் கோழிகள் வளர்ப்பு தான் !
    ஆசிரியர்களின் மீதான அதிகாரிகளின் வன்முறை வார்த்தை பிரயோகங்கள் மற்றும் கிடுக்கு பிடி செயல்பாடுகள் தளர்ந்து,
    எப்போது அன்பான, ஆரோக்கியமான ,நட்பான , அரவணைப்பான அணுகுமுறை உருவாகிறதோ அப்போது தான் உண்மையான கல்வி நிகழும் !
    நல்ல சமுதாயம் தழைக்கும் !
    இளைய தலை முறையினரை வெறும் மதிப்பெண் அடிப்படையில் பார்த்து ,
    ஒரு மாணவன் தேர்ச்சி பெறவில்லை என்றால்,
    2%போயிற்று (ஒவ்வொரு மாணவனும் 2%),
    என்று மாண்புமிகு மாணவன் வெறும் மதிப்பெண் சதவீதமாக மாறிப்போய் கிடக்கும் கொடுமையை காண்பதை விட, ஒரு நல்ல ஆசிரியருக்கு ,ஒரு மனசாட்சி உள்ள மனிதருக்கு வேறு பெரிய தண்டனை இருந்து விட முடியாது.
    கட்டுரை எழுதியவர் : திருமதி.D.விஜயலெட்சுமி ராஜா அவர்கள், ஆங்கில ஆசிரியை, அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கண்ணமங்கலம், திருவண்ணாமலை மாவட்டம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி