அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 16,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த இடங்களுக்கு நேரடித் தேர்வு முறையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு பல்வேறு அமைப்பினரும், கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். வழக்கமாக நடத்தப்படுவதுபோல வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து பதிவு மூப்புப் பட்டியல் பெற்று அதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.
இதற்கு விளக்கம் அளித்து மாநகரப்போக்குவரத்துக்கழகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:
இந்தப் பணியிடங்கள் அனைத்தும் நாளிதழ்களில் விளம்பரமாக வெளியிட்டு நேரடியாக விண்ணப்பங்கள் வழங்கி தகுதியானவர்கள் கண்டறியப்படுவதோடு, வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து பதிவு மூப்புப் பட்டியல் பெற்றும் தகுதியானவர்கள் கண்டறியப்பட்டு அதன்பிறகே நிரப்பப்படும். இதற்கான விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி நாள் நவம்பர் 20 ஆம் தேதி ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் டிசம்பர் 8 ஆம் தேதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துக்கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியது:
கடந்த 2011-ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பணியிடம் நிரப்பபடுவதற்கு எதிராக கடலூரைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்போது, நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டு நேரடியாகவும் நிரப்ப வேண்டும் என உத்தரவிட்டது.
இதற்கு எதிராக அரசுத் தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனவே, அந்த உத்தரவுப்படியே இப்போது பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன என்றார்.
Is any vacancy for b.e computer science
ReplyDelete