காலியிடங்கள் நீதிமன்ற உத்தரவுப்படியே நிரப்பப்படுகின்றன: போக்குவரத்து துறை விளக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 7, 2014

காலியிடங்கள் நீதிமன்ற உத்தரவுப்படியே நிரப்பப்படுகின்றன: போக்குவரத்து துறை விளக்கம்

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலியிடங்களை நிரப்பும் பணி நீதிமன்ற உத்தரவுப்படியே நடைபெறுவதாக போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 16,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த இடங்களுக்கு நேரடித் தேர்வு முறையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு பல்வேறு அமைப்பினரும், கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். வழக்கமாக நடத்தப்படுவதுபோல வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து பதிவு மூப்புப் பட்டியல் பெற்று அதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.

இதற்கு விளக்கம் அளித்து மாநகரப்போக்குவரத்துக்கழகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

இந்தப் பணியிடங்கள் அனைத்தும் நாளிதழ்களில் விளம்பரமாக வெளியிட்டு நேரடியாக விண்ணப்பங்கள் வழங்கி தகுதியானவர்கள் கண்டறியப்படுவதோடு, வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து பதிவு மூப்புப் பட்டியல் பெற்றும் தகுதியானவர்கள் கண்டறியப்பட்டு அதன்பிறகே நிரப்பப்படும். இதற்கான விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி நாள் நவம்பர் 20 ஆம் தேதி ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் டிசம்பர் 8 ஆம் தேதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துக்கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியது:

கடந்த 2011-ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பணியிடம் நிரப்பபடுவதற்கு எதிராக கடலூரைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்போது, நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டு நேரடியாகவும் நிரப்ப வேண்டும் என உத்தரவிட்டது.

இதற்கு எதிராக அரசுத் தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனவே, அந்த உத்தரவுப்படியே இப்போது பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன என்றார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி