10ம் வகுப்பு அரையாண்டு தேர்வு தமிழ் வினாத்தாளில் குளறுபடி: ‘புளூ பிரின்ட்’படி வினாக்கள் இல்லை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 15, 2014

10ம் வகுப்பு அரையாண்டு தேர்வு தமிழ் வினாத்தாளில் குளறுபடி: ‘புளூ பிரின்ட்’படி வினாக்கள் இல்லை



தமிழகத்தில் 10-ம் வகுப்பு அரையாண்டு தேர்வில், தமிழ் முதல் தாள் வினாத் தாளில், ‘புளூ பிரின்ட்’படி நெடுவினாக்கள் இடம்பெறவில்லை.
இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை 10-ம் வகுப்புக்கு தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. அதில் பிரிவு 5, பகுதி -1ல் 8 மதிப்பெண் கேள்விகள் இடம்பெற்றிருந்தன.செய்யுளில் சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட வேண்டும். ஆனால் அதற்குப் பதில் கம்ப ராமாயணம் மற்றும் திருக்குறளில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

உரைநடை நெடுவினாவில், இயல்-1 உயர்தனி செம்மொழி, இயல்-10 பல்துறை வேலைவாய்ப்பு கள் ஆகிய பாடங்களில் இருந்துதான் வினாக்கள் கேட்கப்பட வேண்டும். ஆனால் அவற்றுக்குப் பதில் வேறு இயல்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதனால் வினாத் தாளைப் பார்த்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழில் மட்டும் தோல்வி அடைந்துள்ளனர். மாணவர்கள் தமிழில் தோல்வி அடைவதை தடுக்க, நடப்பு கல்வியாண்டு தொடக்கத்திலேயே ஆசிரியர்களை அழைத்து அரசு அதிகாரிகள் கூட்டம் போட்டு ஆலோசனை நடத்தினர்.அப்போது மாணவர்கள் மிக எளிமையாகப் பாடங்களைப் புரிந்து கொள்ளும் வகையில், எப்படி பாடங்களை சொல்லிக் கொடுப்பது என்பது போன்ற பல முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு திட்டம் வகுக்கப் பட்டது.

ஆனால், அரையாண்டுத் தேர்வு வினாத்தாளில் 4 வினாக் களில், 3 வினாக்கள் ‘புளூ பிரின்ட்’படி இடம்பெறவில்லை.புளூ பிரின்ட்படி வினாக்கள் வராத போது, சாதாரண மாணவர் கள் பதற்றம் அடைந்து விடுகின் றனர். உளவியல் ரீதியாக மேற் கொண்டு தெரிந்த வினாக்களுக்குக் கூட அவர்களால் சரியாகப் பதில் அளிக்க முடிவதில்லை. வரும் மார்ச் மாதம் நடக்கும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்விலும் இதேநிலை நீடித்தால், திறன் குறைந்த மாணவர்கள் நிச்சயம் பாதிக்கப்படு வார்கள். இதை தடுக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுத் தேர்வு வினாத் தாள்களில், புளூ பிரின்ட்படி வினாக்கள் உள்ளனவா என்பதை முதலிலேயே ஒரு குழு மூலம் சரி பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி