2 மாதங்களுக்கு 500 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்தினால் கட்டண உயர்வில்லை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 12, 2014

2 மாதங்களுக்கு 500 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்தினால் கட்டண உயர்வில்லை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு மின் கட்டண உயர்வு இருக்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், மின் நுகர்வோர்களுக்கு 500 யூனிட்கள் வரை உயர்த்தியுள்ள மின் கட்டணச் சுமையை தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

இரண்டு மாதங்களில் 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர்கள் தற்போது அவர்கள் செலுத்தி வரும் மின் கட்டணத்தையே தொடர்ந்து செலுத்தினால் போதும். அவர்கள் செலுத்த வேண்டிய கூடுதல் மின் கட்டணத்தை தமிழக அரசே தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு செலுத்தி விடும். இதன் காரணமாக தமிழ்நாடு அரசுக்கு ரூ.825.90 கோடி கூடுதல் நிதி சுமை ஏற்படும். இதனால் 1 கோடியே 61 லட்சத்து 21 ஆயிரம் வீட்டு மின் இணைப்பு நுகர்வோர் பயன்பெறுவர்.

வீட்டு மின் இணைப்பு நுகர்வோருக்கென இனி தமிழக அரசு ஆண்டுக்கு ரூ. 2,714.03 கோடி மானியமாக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கும். மொத்த வீட்டு மின் நுகர்வோரான 1 கோடியே 71 லட்சத்து 55 ஆயிரம் மின் நுகர்வோர்களில் 1 கோடியே 61 லட்சத்து 21 ஆயிரம் வீட்டு மின் நுகர்வோர், அதாவது 94 சதவீதம் வீட்டு மின் நுகர்வோருக்கு எந்தவித கட்டண உயர்வும் இருக்காது.

குடிசை மின் இணைப்புகள்: சுமார் 11 லட்சத்து 83 ஆயிரம் குடிசை மின் இணைப்புகளுக்கு மின் கட்டணம் ஏதுமின்றி மின்சாரம் வழங்கப்படுகிறது. அது தொடர்ந்து வழங்கப்படும். தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் குடிசை மின் இணைப்புகளுக்கு என உயர்த்தப்பட்ட கட்டணமான ஆண்டொன்றுக்கு ரூ.28 கோடியே 39 லட்சம் ரூபாயை அரசே கூடுதல் மானியமாக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கும். இதன் காரணமாக குடிசை மின் இணைப்புகளுக்கென வழங்கப்படும் மானியம் ஆண்டொன்றுக்கு ரூ.224.54 கோடி ரூபாய் என உயரும்.

விவசாயிகள்-கைத்தறி நெசவாளர்கள்: கைத்தறி நெசவாளர்களைப் பொறுத்தவரை, இப்போது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை 100 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு கட்டணம் ஏதுமில்லாமல் மின்சாரம் வழங்கப்படுகிறது. அதற்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் கைத்தறி நெசவாளர்களுக்கு வீட்டு மின் உபயோகிப்பாளர்களுக்கான மின் கட்டண விகிதத்தில் மின் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த அடிப்படையிலேயே, தற்போதும் மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். இதன் காரணமாக, தமிழ்நாடு அரசு ஆண்டொன்றுக்கு ரூ.1.57 கோடி கூடுதல் மானியமாக வழங்கப்படும்.

இரண்டு மாதத்திற்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் விசைத்தறி மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் எதுவுமின்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் செலுத்த வேண்டிய முழு மின் கட்டணத்தையும் அரசே ஏற்று வருகின்றது. இரண்டு மாதத்திற்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் விசைத்தறி மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் எதுவுமின்றி மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். இதனால் 69,000 விசைத்தறி மின் நுகர்வோர்கள் பயன்பெறுவர்.

விவசாய மின் இணைப்புகளுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தை அரசே ஏற்று, விவசாயிகளுக்கு தொடர்ந்து மின் கட்டணம் ஏதுமின்றி மின்சாரம் வழங்கப்படும். வழிபாட்டுத் தலங்களுக்கென தற்போது உயர்த்தப்பட்ட கட்டண விகிதங்களுக்கேற்ப கூடுதலாக ரூ.1.04 கோடியை மானியமாக மின்சார வாரியத்திற்கு வழங்கும்.

ஆண்டுக்கு மானியம் எவ்வளவு?: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ள மின் கட்டண உயர்விலிருந்து ஏழை, எளிய, நடுத்தரப் பிரிவு மக்களை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு இனி ஆண்டுக்கு ரூ.1,310.23 கோடியை மின்சார வாரியத்திற்கு கூடுதல் மானியமாக வழங்கும்.

எனவே, தமிழக அரசு மின் கட்டண மானியமாக மின்சார வாரியத்திற்கு அளிக்கும் தொகை உயர்ந்துள்ளது. அது ஆண்டுக்கு ரூ.6,295.32 கோடியாக இருக்கும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி