கணினி பட்டதாரிகள் பட்டியலில் சொதப்பல்: ஒப்பு கொண்டது வேலைவாய்ப்பு அலுவலகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 9, 2014

கணினி பட்டதாரிகள் பட்டியலில் சொதப்பல்: ஒப்பு கொண்டது வேலைவாய்ப்பு அலுவலகம்


கணினி ஆசிரியர் நியமனத்திற்கான பரிந்துரை பட்டியலில், குளறுபடிஉள்ளதை, 'தினமலர்' நாளிதழ் சுட்டிக்காட்டியது. இந்த செய்தியை, மேற்கோள் காட்டி, புதிய பட்டியலை அனுப்ப, வேலைவாய்ப்பு இயக்குனரகம் குறிப்பாணை அனுப்பியுள்ளது.
கணினி ஆசிரியர், 652 பேர் நியமனத்திற்கான மாநில பதிவு மூப்பு பட்டியல், கடந்த 2ம் தேதி, இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில், கணினி பட்டதாரிகளுடன், இதர பாடங்களில் பட்டம் பெற்றவர்களின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.

அதிர்ச்சி:

பட்டியலை ஆய்வு செய்த கணினி பட்டதாரிகள், குளறுபடிகளை பார்த்து, அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில், கடந்த 4ம்தேதி செய்தி வெளியானது. இதையடுத்து, நேற்று, திருவள்ளூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், கணினி பட்டதாரிகள், வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டனர்.

முற்றுகை:

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட பட்டதாரிகள், புதிய மற்றும் சரியான பட்டியலை வெளியிட வேண்டும் என, கோரி, நேற்று காலை 11:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை, காத்திருந்தனர். மாலை 5:00 மணியளவில், வேலைவாய்ப்பு அலுவலக வாயிலில், 'புதிய பட்டியல், நாளை (10ம் தேதி) மாநில வேலைவாய்ப்புஅலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்' என்ற, குறிப்பாணை ஒட்டப்பட்டது. இதையடுத்து, பட்டதாரிகள் கலைந்து சென்றனர்.

குளறுபடி:

இந்த குறிப்பாணையில், 'தினமலர்' நாளிதழ் சுட்டிக் காட்டியதன் பேரில், பட்டியல் ஆய்வு செய்யப்பட்டு, குளறுபடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக, தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து, வேலைவாய்ப்பு அலுவலக உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'கணினி பட்டம் தவிர, இதர பட்டம் பெற்றவர்களில், சிலரது எண்கள் மாறியதால் தான், இந்த குழப்பம் ஏற்பட்டது. தற்போது, பட்டியல் மாற்றிஅமைக்கப்பட்டு விட்டது' என்றார்.

மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் குழப்பம்:

கணினி ஆசிரியர் பணிக்கான பட்டியலில், மாற்றுத்திறனாளிகள், 100 பேர் இடம்பெற்று உள்ளனர். இதில், நான்கு பேரின் பெயர்கள் இரண்டு முறை இடம்பெற்று உள்ளன. இதனால், மேலும், நான்கு பேருக்கு வர வேண்டியவாய்ப்பு, தடைபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து,வேலைவாய்ப்புத் துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'இதுபற்றி தகவல் வந்ததும், இரண்டு முறை இருந்த, நான்கு பேரின் பெயர்கள் அகற்றப்பட்டுவிட்டன. பட்டியலில் திருத்தம் செய்ய, நாளை (10ம் தேதி) வரை வாய்ப்புள்ளது. பெயர்கள் அகற்றப்பட்டு, புதிதாக நான்கு பேர் சேர்க்கப்படுவர்' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி