பகல் கொள்ளை-பெட்ரோல், டீசல் விலை-நடப்பது என்ன? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 13, 2014

பகல் கொள்ளை-பெட்ரோல், டீசல் விலை-நடப்பது என்ன?

பெட்ரோல், டீசல் விலை உயரும்போது, அதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கூக்குரல் எழுப்புகின்றன. ஆனால், அவற்றின் விலை குறையும்போது, எதிர்த்தவர்கள் மெளன விரதம் கடைப்பிடிக்கின்றனர். எதிர்க்கட்சியாக இருக்கும்போது, விலை உயர்வைக் கடுமையாகக் கண்டிப்பதும், ஆட்சியில் இருக்கும்போது அடக்கிவாசிப்பதும் வாடிக்கையானதுதான்.

பெட்ரோல் விலை கடந்த 4 மாதங்களில் 7 முறையும், டீசல் விலை கடந்த ஒன்றரை மாதங்களில் 3 முறையும் குறைக்கப்பட்டுள்ளபோதும் இப்போது விமர்சிப்பதற்கு வலுவான காரணங்கள் உள்ளன.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை இப்போது குறைத்துள்ளதற்கும், கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி முதல்முறையாக டீசல் விலை குறைக்கப்பட்டதற்கும் துள்ளி குதிப்பது தேவையற்றது.
ரயில், சாலைப் போக்குவரத்து, மின் உற்பத்தி, விவசாயம் ஆகியவற்றுக்குப் பயன்படுவதாலும், ஒட்டுமொத்த பணவீக்கத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதாலும் டீசல் மிக முக்கியமான பொருள் ஆகிவிட்டது. எனவே, டீசல் விலை குறைக்கப்பட்டால் அதை வரவேற்றுத்தான் ஆக வேண்டும். ஆனால், குறைக்கப்பட்ட விதம் மெச்சத்தகுந்ததாக இல்லை.
சந்தை நிலவரத்துக்கேற்ப விலை நிர்ணயம் செய்யப்படும் என்ற முடிவு காரணமாக டீசல் விலைக் குறைப்பை முழு மனதுடன் வரவேற்க முடியவில்லை. சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை குறைந்ததால் பெட்ரோலிய பொருள்களின் விலை குறைந்துள்ளது.
டிசம்பர் 1-ஆம் தேதி நிலவரப்படி ஒரு டாலருக்கு ரூ.62.14 என்ற கணக்கில் ஒரு பேரல் (சுமார் 159 லிட்டர்) கச்சா எண்ணெய் விலை 67.72 டாலராக (ரூ.4,208.12) இருந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை சுமார் 105 டாலராக இருந்தது.
2008-ஆம் ஆண்டின் மத்தியில்தான் கச்சா எண்ணெய் விலை உச்சத்தைத் தொட்டது. ஒரு பேரல் 130 டாலருக்கு விற்கப்பட்டது. அப்போது, கொள்ளை லாபம் அடிப்பதற்காக, கடினமான பாறைப் பகுதி எனக் கருதப்பட்ட இடங்களிலும் எரிசக்தி நிறுவனங்கள் தோண்டித் துருவின.
பல்வேறு உத்திகளைக் கையாண்டு ஒரு நாளைக்கு கூடுதலாக 40 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் எடுப்பதற்காக அமெரிக்க நிறுவனங்கள் மிகமிக அதிகமாக முதலீடு செய்து, அதில் வெற்றியும் கண்டன.
அண்மைக்காலமாக, வரத்து அதிகமானதாலும், தேவை குறைந்ததாலும் கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது.
மிக அதிக முதலீடு செய்த புதிய நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக, கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியடைவதை பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு (ஓபெக்) கண்டுகொள்ளாததுடன் எண்ணெய் உற்பத்தியையும் குறைக்கவில்லை.
தேவை, உற்பத்தி ஆகியவற்றைத் தவிர எண்ணெய் அரசியலும் விலை வீழ்ச்சிக்குக் காரணமாக இருப்பதையே இது காட்டுகிறது. ஆனால், இதை நிரந்தரமானதாகக் கருத முடியாது. எனவே, சர்வதேச அளவில் எண்ணெய் விலை உயர்ந்தால் இந்தியாவில் பெட்ரோலிய பொருள்களின் விலை உயரக் கூடும்.
துரதிருஷ்டவசமாக, டீசல் மீதான விலைக் கட்டுப்பாட்டைத் தளர்த்துவது என கடந்த மாதம் முடிவு செய்யப்பட்டபோதோ, பெட்ரோல் மீதான விலைக் கட்டுப்பாட்டைத் தளர்த்துவது என 2010 ஜூனில் முடிவு மேற்கொள்ளப்பட்டபோதோ எங்கும் வலுவான எதிர்ப்பை காண முடியவில்லை.
விலை மீதான கட்டுப்பாட்டைத் தளர்த்துவது என்ற தனது முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது மட்டுமல்ல, அது குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டும். அரசு ஈட்டும் பெரும் வருவாய் மற்றும் எண்ணெய் நிறுவனங்களுக்கு கிடைக்கும் லாபம் ஆகியவற்றை வைத்தே இந்த நியாயமான கோரிக்கை வைக்கப்படுகிறது.
"2013 - 14-ஆம் ஆண்டுக்கான இந்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு புள்ளிவிவரம்' என்ற அறிக்கையை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ளது. பெட்ரோலிய பொருள்களுக்கு 2007-08 முதல் 2013-14 வரை "மலைக்கவைக்கும்' தொகையான ரூ.3,09,837.61 கோடி மானியம் அளிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கை கூறுகிறது.
ஆனால், அதே காலகட்டத்தில் சுங்க வரி மற்றும் உற்பத்தி வரி மூலம் மத்திய அரசுக்கு ரூ.6,21,520 கோடியும், விற்பனை வரி மூலம் மாநில அரசுகளுக்கு ரூ.6,04,307 கோடியும் வருவாய் கிடைத்துள்ளதாக அதே அறிக்கை கூறுகிறது.
விஷயம் இத்தோடு முடியவில்லை. உரிமைப் பங்கீட்டுத் தொகையாக (ராயல்டி) கச்சா எண்ணெய் மூலம் ரூ.82,930 கோடி, எரிவாயு மூலம் ரூ.17,923 கோடி, எண்ணெய் மேம்பாட்டு வரியாக ரூ.68,005 கோடி, ஆதாயப் பங்குத் தொகையாக ரூ.89,074 கோடி வருவாய் அரசுக்கு கிடைத்துள்ளது.
ஆக மொத்தம், மத்திய, மாநில அரசுகளுக்கு ரூ.14,83,759 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்தத் துறையின் மூலம் தான் ஈட்டிய வருவாயில் 20.88 சதவீதத்தை மட்டுமே மானியமாக அரசு அளித்துள்ளது. எனவே, எண்ணெய் துறைக்கு மானியம் அளிப்பதாக அரசு கூறுவது வடிகட்டிய பொய்யாகும்.
அதுமட்டுல்ல, மறைமுகமாகவும் இத் துறை மூலம் அரசுக்கு வருவாய் கிட்டுகிறது. உதாரணத்துக்கு, 2013 - 14-இல் மட்டும் பெட்ரோலிய பொருள்களின் போக்குவரத்தால் அரசுக்கு ரூ.5,405.37 கோடி வருவாய் கிடைத்துள்ளது. சரக்குப் போக்குவரத்தின் மொத்த வருவாயில் இது 6 சதவீதம் ஆகும்.
இது போதாதென்று, 3 வார இடைவெளிக்குள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு 2 முறை உயர்த்தியுள்ளது. பெட்ரோல் மீதான உற்பத்தி வரி நவம்பர் 12-இல் லிட்டருக்கு ரூ.1.50-ம், டிசம்பர் 2-இல் ரூ.2.25-ம், டீசல் மீதான உற்பத்தி வரி டிசம்பர் 2-இல் ரூ.1-ம் உயர்த்தப்பட்டது.
பொருளின் மதிப்புக்கேற்ப வரி விதிக்காமல் "ஒரு லிட்டருக்கு' என வரி விதிப்பதால், பெட்ரோலிய பொருள்களின் விலை வீழ்ச்சியால் மத்திய அரசுக்கு வருவாய் குறைவதில்லை. ஆனால், பெட்ரோலிய பொருள்களின் மதிப்புக்கேற்ப விற்பனை வரியை விதிப்பதால், மாநில அரசுகளின் வருவாய் பாதிக்கப்படும்.
அடிக்கடி கூறப்படுவது போல, எண்ணெய் நிறுவனங்களும் கூட நஷ்டத்தை சந்திப்பதில்லை. அரசின் வருவாய்க்குப் பிறகும், 2007-08 முதல் 2013-14 வரையிலான காலகட்டத்தில் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.2,72,848.75 கோடி லாபம் ஈட்டியுள்ளன.
டிசம்பர் 1-ஆம் தேதி நிலவரப்படி, ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை ரூ.4,208.12 அல்லது ஒரு லிட்டர் விலை ரூ.26.46. இது அரசின் அறிக்கையிலேயே உள்ளது.
பெட்ரோலிய பொருள்களின் பங்கில் 90 சதவீதம் கச்சா எண்ணெய் என்பதால், அரசின் வருவாய் பங்கை கழித்துவிட்டோமானால், இப்போது விற்கும் விலையில் பாதி விலையிலேயே பெட்ரோலிய பொருள்களை அளிக்க முடியும்.
இந்தியாவில் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெய் முழுவதும் இறக்குமதி செய்யப்படுவதில்லை. மொத்த பயன்பாட்டில், சுமார் 25 சதவீத கச்சா எண்ணெய் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.
உதாரணத்துக்கு, 2013 - 14-இல் 37.788 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதையும் கருத்தில் கொண்டால், உற்பத்தி செலவு மேலும் குறையும்.
அதேபோன்று, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியால் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரிக்கிறது என்று அரசும், எண்ணெய் நிறுவனங்களும் கூறுகின்றன. 2013 - 14-இல் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு ரூ.8,64,875 கோடி. ஆனால், சுத்திகரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டதன் மூலம் கிடைத்த வருவாய் ரூ.3,68,279 கோடி.
உள்நாட்டுக்குத் தேவையானதைவிட அதிக கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்து சுத்திகரித்து ஏற்றுமதி செய்கிறது. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி இறக்குமதிக்கு பாதகமானால், ஏற்றுமதிக்கு அது சாதகமாக இருக்கும் என்பது தெளிவு.
இந்தப் பின்னணியில் பார்த்தோமானால், எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டமடைவதில்லை என்பது தெளிவாகிறது.
பெட்ரோலியப் பொருள்களின் விலையைக் குறைக்க வேண்டும். அரசு பெட்ரோலியப் பொருள்களின் விலை குறித்த கொள்கையை உடனடியாக மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
அத்துடன், எதிர்காலப் பிரச்னைகளைத் தவிர்க்க எண்ணெய் வளங்களைக் கண்டறிவது, உற்பத்தி ஆகியவை குறித்து முழுமையான கொள்கையையும் வகுக்க வேண்டும்.


நன்றி தினமணி

3 comments:

 1. விகடனில் பகிரப்பட்ட ஒரு செய்தி.....

  ''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?''
  ''உண்மையாக விடுதலையை நேசிப்பவர்களால் அந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள முடியும். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கைக்கு அனுப்பிவைத்த அமைதிப் படையில் பகத்சிங்கின் தம்பி ரன்பீர் சிங்கின் மகன் யோணன் சிங்கும் இடம் பெற்றிருந்தார். அமைதிப் படை இந்தியா திரும்பிய பிறகு யோணன் சிங்குக்கு வீர விருது கொடுப்பதாக இந்திய அரசு அறிவித்தது. இந்தச் செய்தியைத் தன் அப்பாவிடம் சொன்ன யோணன், விழாவுக்கு அவரையும் அழைத்தார். ஆனால் ரன்பீர் சிங்கோ, 'ஓர் இன விடுதலையை அடக்கியதற்காகக் கொடுக்கப்படும் விருதை வீர விருதாகக் கருத முடியாது. அப்படி ஒரு விருதை வாங்கிக்கொண்டு இந்த வீட்டுக்குள் நுழைய வேண்டாம்' என்றார். யோணன் சிங் அந்த விருதைப் புறக்க ணித்தார். ஒரு விடுதலைப் போராட்டத்தின் வலி என்ன என்பதை பகத்சிங்கின் பக்கத்தில் இருந்து பார்த்ததால்தான் ரன்பீர் சிங்கால் அப்படிச் சொல்ல முடிந்தது!''
  - எம்.ராஜா, பூண்டி
  நானே கேள்வி.. நானே பதில்!

  ReplyDelete
 2. SRI ONLY FOR U SIR, OR SURULIVEL SIR, WHAT IS THE IMPOTANCE FOR CPS ?

  HW TO APPLY CPS ?

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி