எழுத்து தேர்வின்றி நடக்கும் ஓட்டுனர் நியமனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 17, 2014

எழுத்து தேர்வின்றி நடக்கும் ஓட்டுனர் நியமனம்

'தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுனர், நடத்துனர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு, எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், எழுத்து தேர்வு இன்றி நேர்முக தேர்வு நடப்பது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அல்லாமல், நேர்முகத் தேர்வு தொடரும் நிலையில், யாராவது நீதிமன்றம் சென்றால், தேர்வு நடவடிக்கையில் சிக்கல் ஏற்படும் என்கின்றனர், வழக்கறிஞர்கள்.

காலியிடங்கள்:


தமிழகத்தில் உள்ள, எட்டு அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுனர், நடத்துனர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் ஆகியவற்றில், 7,500 காலி பணியிடங்கள் உள்ளன. இவற்றில், ஓட்டுனர், நடத்துனர் பணிகளில், அதிகளவில் காலி பணியிடங்கள் உள்ளன. வழக்கமாக, காலி பணியிடங்களை நிரப்ப, வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இருந்து பதிவு மூப்பின் அடிப்படையில், தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பது வழக்கம். இந்த முறை, நேரடியாக விண்ணப்பிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளில் சேர, போக்குவரத்து கழக அலுவலகங்களில், 2.31 லட்சம் பேர் விண்ணப்பம் பெற்றிருந்தனர். இதில், 1.50 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். சமீபத்தில், போக்குவரத்து கழகத்தில் நியமனம் தொடர்பான ஒரு வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அரி பரந்தாமன், உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில், 'நேர்முகத் தேர்வின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்வது, அரசியலமைப்பு சட்டத்தை மீறுவது போலாகும்; படிப்பில் பெற்ற மதிப்பெண்களுக்கு, 'வெயிட்டேஜ்' மற்றும் எழுத்து தேர்வு அவசியம்' என, கூறப்பட்டது. இந்த உத்தரவு, கடந்த வாரம் பத்திரிகைகளில் வெளியானது; அதற்கு முன்பே, ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களுக்கான, நேர்முகத் தேர்வு துவங்கி விட்டது. கடந்த, 10ம் தேதி முதல் துவங்கி, ஓட்டுனர், நடத்துனர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு, நேரடியாக விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகத் தேர்வு தொடர்ந்து நடக்கிறது. எழுத்து தேர்வு இன்றி, சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி, செயல்திறன் தேர்வு, பள்ளி, கல்லூரிகளில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் தேர்வு முறையை நடத்தி வருகின்றனர்.முறைகேடு:


இது குறித்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்க பொதுச் செயலர் ஆறுமுக நயினார் கூறியதாவது: சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில் எழுத்து தேர்வு நடத்த வேண்டும் என தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்த நடைமுறையில் தேர்வு செய்யும் முறை நடக்காதது முறைகேட்டிற்கு வழி வகுக்கும். 'எழுத்து தேர்வு மூலம் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்' என, போக்குவரத்து துறை செயலர் மற்றும் அனைத்து போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்களுக்கு கடிதம் எழுதிஉள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத மாநகர போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களில் தகுதியான, 37 ஆயிரத்து 500 பேர் அழைக்கப்பட்டு, நேர்முகத் தேர்வு முடிந்து விட்டது. நேரடியாக விண்ணப்பிக்கும் முறையில், 1.50 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். இதில், 50 ஆயிரம் பேருக்கு நேர்முக தேர்வு முடிந்து விட்டது. சென்னை உயர் நீதிமன்றம், 'தற்போது நடக்கும் பணி நியமனங்களில் தலையிட விரும்பவில்லை. இனி வரும் காலங்களில் பணியிடங்களை நிரப்பும்போது, எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்ய வேண்டும்' என்று தான் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

இதுகுறித்து, சர்வீஸ் பார் அசோசியேஷன் தலைவரும், வழக்கறிஞருமான எல்.சந்திரகுமார் கூறியதாவது: ஓட்டுனர், நடத்துனர் தேர்வு குறித்து, உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பிக்கும்போது, அதை, அரசு பின்பற்ற வேண்டும். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, தடை பெற்றதாக தெரியவில்லை. எனவே, பழைய முறையை பின்பற்றுவது தவறு. நீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பதற்கு முன், நேர்முகத் தேர்வை துவங்கி விட்டதாக கூறினாலும், அது, துவக்க நிலை தான். இன்னும் முழுமை பெறவில்லை. நேர்முகத் தேர்வு தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் யாராவது வழக்கு தொடுத்தால், தேர்வுக்கு தடை விதிக்க, அதிக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு, வழக்கறிஞர் சந்திரகுமார் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி