நகைகளுக்கு சேதாரம் வசூலிப்பதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த ஹைகோர்ட்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 6, 2014

நகைகளுக்கு சேதாரம் வசூலிப்பதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த ஹைகோர்ட்!

சேதாரம் என்ற பெயரில் நகைக் கடைகளில் பெருங் கொள்ளையடிப்பதை நம்மவர்கள் பேஸ்புக் உள்ளிட்ட ஊடகவாயிலாக எச்சரிக்கைக் குரல் கொடுத்தபடிதான் இருக்கிறார்கள்.ஆனாலும் 16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் அடித்து விடுகிறார்கள் நகைக் கடை முதலாளிகள்.
இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில்ஒன்பதாயிரம் ரூபாய்தெண்டம் அழ வேண்டும். ஏறக்குறைய 16 சதவீதம்? இதையடுத்து தங்கநகைகள் வாங்கும்போது சேதாரம் என்று கூறி வாடிக்கையாளரிடம் பணம் வசூலிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட ஒரு பொது நல வழக்கை சென்னை ஹைகோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது.

சென்னை ஹைகோர்ட்டில், வக்கீல் எம்.பழனிமுத்து என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில்,”தங்க நகைகள் வாங்கும்போது சேதாரம் மற்றும் செய் கூலியை வாடிக்கையாளரிடம் இருந்து தங்கநகை கடை அதிபர்கள், எந்த ஒரு சட்ட அங்கீகாரமுமின்றி வசூலிக்கின்றனர். தங்க நகை செய்யும்போது, சேதாரம் ஏற்பட்டால், அந்த சேதாரத் தங்கத்தை வாடிக்கையாளரிடம் கொடுத்துவிடவேண்டும். ஆனால், நகைக்கடை அதிபர்கள் அந்த சேதாரத் தங்கத்தை அவர்களே வைத்துக்கொள்கின்றனர். மேலும், இந்த சேதாரம் என்று கூறி, வாங்கும் தங்கநகையின் மதிப்பில், 10 முதல் 30 சதவீதம் வரை தங்கள் விருப்பம்போல், வாடிக்கையாளர்களிடம் பணத்தை வசூலிக்கின்றனர்.
அதேபோல, வெள்ளியில் ஆபரணங்கள் செய்யும் அதில், 60 முதல் 70 சதவீதம்தான் வெள்ளி இருக்கும். ஆனால், 92.5 சதவீதம் வெள்ளி என்று குறிப்பிட்டு வாடிக்கையாளர்களிடம் பணத்தை வசூலிக்கின்றனர்.மேலும், தங்கநகைகள் வாங்கும்போது, உத்தேச ரசீதுகளைத்தான் கொடுக்கின்றனர். அசல் ரசீதை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டியது நகைக்கடைக்காரர்களின் கடமை. ஆனால், அவர்கள் அவ்வாறு செய்வதில்லை. அசல் ரசீதை வாடிக்கையாளர்கள் கேட்கும்போது, பல்வேறு வரிகள் எல்லாம் விதிக்கப்படும் என்று கடைக்காரர்கள் எச்சரிக்கை செய்வதால், உத்தேச ரசீதுகளையே வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்கின்றனர். இதனால் அரசுக்கு வரவேண்டிய வருவாய், நகைக்கடைக்காரர்களால் தடைப்படுகிறது.
எனவே தங்கநகைகள் மீதான சேதாரத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிப்பது சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும். தங்கநகை வியாபாரத்தை விதிமுறைகளுடன் முறைப்படுத்த வேண்டும் என்று மத்திய நுகர்வோர் நலத்துறை செயலாளர், இந்திய தரச்சான்று இயக்குனர் ஜெனரல், தமிழக வணிகவரித்துறை செயலாளர் ஆகியோருக்கு கடந்த நவம்பர் 25-ந்தேதி மனு அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ”என்று அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் பழனிமுத்து ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,”மனுதாரர் தங்கம், வெள்ளி வியாபாரத்தில் விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் நகைகள் செய்யும்போது ஏற்படும் சேதாரத்தை வாடிக்கையாளரிடமே கொடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்து இந்த பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். எங்களது கருத்தின்படி, தங்கநகைகள் என்பது ஒரு மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள் இல்லை. தங்கநகைகளை வாங்கியே தீரவேண்டும் என்று பொதுமக்கள் யாரையும், யாரும் கட்டாயப்படுத்துவதும் இல்லை.
மேலும், தங்கநகை வியாபாரம் தொடர்பான நடவடிக்கைகளை ஒழுங்குப்படுத்துவது அரசின் கடமையாகும். மேலும், மனுதாரர் 25-ந்தேதி கோரிக்கை மனுவை மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பிவைத்துவிட்டு, அந்த மனுவை பரிசீலிக்க அதிகாரிகளுக்கு காலஅவகாசம் வழங்காமல், இந்த வழக்கை 6 நாட்களில் தாக்கல் செய்துள்ளார். மேலும், தங்கநகை கடைகள், சேதாரம் தொடர்பாக மக்களை திசைத்திருப்பும் விளம்பரங்களை வெளியிடுகிறார்கள் என்றால், அதை தடுக்க தகுந்த அமைப்பிடம் மனுதாரர் முறையிடலாம். அதற்காக பொதுநல மனுவாக இந்த கோர்ட்டில் வழக்கை தாக்கல் செய்யமுடியாது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம். ”என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி