துணைவேந்தர் அனுமதித்தால் மட்டுமே இணைப்பு கல்லூரி விண்ணப்பம்:கடல்சார் பல்கலையில் பணிகள் மந்தம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 12, 2014

துணைவேந்தர் அனுமதித்தால் மட்டுமே இணைப்பு கல்லூரி விண்ணப்பம்:கடல்சார் பல்கலையில் பணிகள் மந்தம்

இந்திய கடல்சார் பல்கலையில், இணைப்பு கேட்டு கல்லுாரிகள் அணுகும் போது, விண்ணப்பத்திற்கே, துணைவேந்தர் அனுமதி கேட்டு, பல வாரங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.கடல்சார் பிரிவில், ஆண்டுதோறும் ஏற்பட்டு வரும் தேவையை கருத்தில் கொண்டு, வல்லுனர்களை உருவாக்கும் நோக்கில், 2008 நவ., 14ம் தேதி, இந்திய கடல்சார் பல்கலை துவக்கப்பட்டது.சென்னையை தலைமையிடமாக கொண்டு, இப்பல்கலை செயல்பட்டு வருகிறது.இப்பல்கலையின் துணைவேந்தராக, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அசோக் வரதன் ஷெட்டி உள்ளார்.
இணைப்பு:நாடு முழுவதும், இந்த பல்கலைக்கு, 27 இணைப்புக் கல்லுாரிகள் உள்ளன. மேலும், இணைப்பு கேட்டு, பல்வேறு கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்து வருகின்றன.

சமீபத்திய தகவல்படி, இரண்டு கல்வி நிறுவனங்கள் இணைப்பு கேட்டுள்ளன.

இதில், புதிய சிக்கல், இணைப்புக்கான விண்ணப்பம் கிடைக்காதது தான். வழக்கமாக, இணைப்பு கேட்டு கல்லுாரிகள், பல்கலைகளை அணுகும் போது, அதற்கான விண்ணப்பத்தை, இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.




ஆனால், இந்த பல்கலையில் விண்ணப்பம் பெற, 5,000 ரூபாய் டி.டி., செலுத்தி விண்ணப்பித்து, வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.

விண்ணப்பித்த கல்லுாரி தரப்பில், பல்கலையில் கேட்டபோது, 'துணைவேந்தர் கோப்பில் கையெழுத்திட்டால் மட்டுமே, விண்ணப்பம் தர முடியும்; அவர் வெளியூர் சென்றிருந்ததால், தர முடியவில்லை' என, அதிகாரிகள் பதிலளித்து உள்ளனர்.

ஆனால், விண்ணப்பம் கொடுப்பதற்குக் கூட, துணைவேந்தர் அனுமதி அவசியமா என, கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதுகுறித்து, கல்வியாளர் ஒருவர் கூறியதாவது:பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்று, ஆறு மாதங்கள் முடிந்த நிலையில், அவர், அனைத்து விஷயங்களிலும், காகித பயன்பாட்டை நீக்கிவிட்டு, ஆன் - லைன் பயன்பாட்டை புகுத்த உத்தரவிட்டு உள்ளார்.

அவர் தலைமையிலான, மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்த பல்கலையிலோ, இணைப்பு கல்லுாரிக்கு, விண்ணப்பம் வாங்க கூட, தனியாக விண்ணப்பித்து, விண்ணப்பத்திற்காக, துணைவேந்தரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி வருகையை எதிர்பார்த்து, காத்திருக்க வேண்டி உள்ளது.

அதற்கான, தொகை செலுத்தப்பட்ட பின்பும், விண்ணப்பத்தை தர, துணைவேந்தர் வரவேண்டும் என, பல்கலை அதிகாரிகள் கூறுகின்றனர்.பல்கலை துணைவேந்தர், விண்ணப்பம் விற்பனை செய்யும் பணியிலா உள்ளார்? இதற்கெல்லாம், ஏன் அவரது அனுமதியை கோருகின்றனர் என்பது, தெரியவில்லை.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

துவக்கப்பட்டபோதே பிரச்னை

இந்த பல்கலை, 2008ல் துவக்கப்பட்டபோது, துணைவேந்தராக விஜயன் நியமிக்கப்பட்டார்.

இவர் மீது, மாணவர் சேர்க்கையில் முறைகேடு; வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என, புகார்கள் எழுந்தன.

தொடர்ந்து, பல்கலை மற்றும் துணைவேந்தரின் வீட்டில், 2011 ஜனவரியில், ரெய்டு நடத்திய சி.பி.ஐ., விஜயன் மற்றும் அவரது மனைவி மீது, வழக்கு பதிவு செய்தது.

துணைவேந்தர் பதவியில் இருந்து, விஜயன் நீக்கப்பட்டார். இந்த வழக்கில், கடந்த செப்டம்பர் மாதம் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ., தாக்கல் செய்தது.

கடந்த மாதம், விஜயன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

துணைவேந்தர் பதவியில் இருந்து, விஜயன் நீக்கப்பட்டதும், ரகுராம் என்பவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். அவரும் ராஜினாமா செய்துவிட, கடந்தாண்டு, கேப்டன் முகேஷ் பவேஜா துணைவேந்தரானார்.

தற்போது, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியான, அசோக் வரதன் ஷெட்டி துணைவேந்தராக உள்ளார்.பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில், தமிழகத்திற்கு கிடைத்த, கடல்சார் பல்கலையில், ஆறு ஆண்டுகளில், ஐந்து துணைவேந்தர்கள் வந்துவிட்ட நிலையில், விதிகள் முழுமை பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக, பல்கலை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பல்கலை துவக்கப்பட்டு, ஐந்தாண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது; துணைவேந்தர்களாக பலரும் இருந்து விட்டனர். ஆனால், பல்கலை தொடர்பான, நடைமுறை விதிகள் இன்னும் முழுமை பெறவில்லை.அதனால் தான், எந்த விஷயமாக இருந்தாலும், துணைவேந்தர் அனுமதி பெற வேண்டியுள்ளது. விரைவில், ஆன் - லைன் வசதி இங்கும் வந்துவிடும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி