தொழில் திறன் மிக்க இந்தியா உருவாகும் வகையில் பள்ளிக் கல்வித்திட்டத்தில் மாற்றம் மிக அவசியமாகும் என முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை பேசினார்.
ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியின் பொன்விழாவிற்கு செய்யது அம்மாள் அறக்கட்டளையின் தலைவர் டாக்டர்.பாபு அப்துல்லா தலைமை வகித்தார்.உறுப்பினர்கள் டாக்டர்.செய்யதா அப்துல்லா,ராஜாத்தி அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அறக்கட்டளையின் செயலாளர் டாக்டர்.சின்னத்துரை அப்துல்லா வரவேற்று பேசினார். விழாவில் பள்ளியின் பொன்விழா ஆண்டு கல்வெட்டினை முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் திறந்து வைத்த பின்னர் பள்ளி மாணவ,மாணவியர்களிடையே எழுச்சியுரையாற்றியதாவது... பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகள் முடித்து செல்லும் போது மாணவர்களுக்கு இரு சான்றிதழ்கள் வழங்க வேண்டும்.அவற்றில் ஒன்று மதிப்பெண் சான்றிதழ்.மற்றொன்று உலகளாவிய திறன் மேம்பாட்டுச் சான்றிதழ்.இந்த 2வது சான்றிதழை வழங்குவதற்காக இப்போது இருக்கும் பாடத்திட்டத்தில் 25 சதவிகிதம் குறைத்து தொழில் திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பாடத்திட்டங்களை கற்பிக்க வேண்டும்.மேல்நிலைப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு மேல்நிலைக்கல்வியில் பல்வேறு பாடத்திட்டங்களை புகுத்தி தேவையற்ற பாடப்பிரிவுகளை அகற்றி தனித்திறன் வளர்க்கும் வகையிலான பாடத்திட்டங்களை தேர்ந்தெடுத்து படிக்க மத்திய,மாநில அரசுகள் வழி செய்தால் பள்ளிக் கல்வி சிறக்கும்.
தொழில் திறன் மிக்க இந்தியா உருவாக வேண்டுமானால்பள்ளிக்கல்வித் திட்டத்தில் மாற்றமும் மிக அவசியம். பள்ளிக்கல்வியை மாணவர்களுக்கு நல்ல அனுபவக் கல்வியாக மாற்றினால் மட்டுமே தகுதிவாய்ந்த,அறிவார்ந்த சமுதாயத்தையும் உருவாக்க முடியும்.இப்படிப்பட்ட சீர்திருத்தம் நம்நாட்டில் வரவேண்டும் என்பது எனது லட்சியம். மாணவர்களை ஊக்கப்படுத்தி,அவர்களின் படிப்பு மேம்பாடு அடையும் வகையில் விழிப்புணர்வு பெற்று சாதிக்கக் கூடிய மாணவனாக மாற்றும் முயற்சியில் ஒவ்வொரு பள்ளியும் ஈடுபட வேண்டும்.ஆந்திராவிலும்,தமிழகத்தில் கோவையிலும் வளரும் இந்தியா 2020 என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நான் அளித்த 10 உறுதிமொழிகள் வாயிலாக பயிற்சி அளிக்கப்படுகிறது.தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும்,இடைநின்ற மாணவர்களுக்கும் இதை எடுத்து செல்ல வேண்டும் என்பது தான் எனது விருப்பமாகவும் இருக்கிறது.இந்த லட்சியம் வெற்றியடைந்தால் ஒவ்வொரு மாணவனின் லடசியமும் வெற்றியடையும். அது நாளைய வரலாறாகவும் மாறும்.சரித்திர சாதனைகளும் படைக்கும்.ஒவ்வொரு இந்திய இளைஞனும் வெற்றி பெறுவான்.லட்சியத்தை அடைய கடுமையாக உழைக்கவும் வேண்டும்.விடா முயற்சி வேண்டும்.தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி கொடுத்து வெற்றி பெறுவோம். கனவு என்பது இளைஞர்களின் வாழ்வில் முக்கியமானது.கனவு தான் வாழ்க்கையில் தன்னம்பிக்கை தரக்கூடியது.
ஒவ்வொரு இளைஞன் மனதிலும் லட்சிய விதை விதைக்கப்பட வேண்டும்.அந்த விதை நாளைய வரலாற்றை உருவாக்கி இந்தியாவை வலிமை மிக்க தேசமாக மாற்றும் என்றும் அப்துல்கலாம் பேசினார். செய்யது அம்மாள் அறக்கட்டளையின் பொருளாளர் செல்லத்துரை அப்துல்லா நன்றி கூறினார்.முன்னதாக பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற தமிழாசிரியர் சிவ.சண்முகம் அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர்.இ.எம்.அப்துல்லாவின் சேவை மனப்பான்மையை விரிவாக பேசினார்.10 மற்றும் 12 ஆம் வகுப்புகளி்ல் தங்கப்பதக்கம் பெற்ற மாணவர்கள், ஆசிரியர்கள்,பணியாளர்கள், பள்ளியின் பழைய மாணவர்கள் ஆகியோருக்கு பள்ளியின் சார்பில் நினைவுப்பரிசுகளும் வழங்கப்பட்டது.விழாவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார்,எஸ்.பி.மயில்வாகனன் ஆகியோர் உட்பட முக்கியப்பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி