தாய்மொழி தினத்தை மறந்தாச்சு: அரசியலே வாழ்க்கை ஆயாச்சு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 20, 2015

தாய்மொழி தினத்தை மறந்தாச்சு: அரசியலே வாழ்க்கை ஆயாச்சு

ஐக்கிய நாடுகள் சபை அறிவித்த சர்வதேச தாய்மொழி தினம், சி.பி,எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில், பிப்., 21ம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் உத்தரவு கிடைக்காததால், தமிழக பள்ளிகளில் தாய்மொழி தினம் கொண்டாடப்படுவது கேள்விக் குறியாகி உள்ளது. தமிழக அரசிடமிருந்து தகவல் இல்லாததால், பள்ளிக்கல்வித் துறையும் இதில் முனைப்பு காட்டவில்லை. 'தமிழக அரசு, இவ்விஷயத்தில் மெத்தனமாக இருக்க, அமைச்சர்கள் அனைவரும், தங்கள் துறை தொடர்பான பணியில் ஈடுபடுவதை விட, அரசியலில் அதிக நேரம் செலவிட வேண்டி இருப்பதால், இந்நிலை ஏற்பட்டுள்ளது' என, தமிழ்மொழி ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபை சார்பில், பிப்., 21ம் தேதி, சர்வதேச தாய்மொழி தினம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி, உலகம் முழுவதும் ஒவ்வொரு நாடுகளிலும், கல்வி நிறுவனங்களில் தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பிப்., 21ம் தேதி, தாய்மொழி தினத்தை (மாத்ரி பாஷா திவாஸ்) கொண்டாட, அனைத்து சி.பி,எஸ்.இ., பள்ளிகளுக்கும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சுற்றிக்கை அனுப்பி உள்ளது. எனவே, தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா மற்றும் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத் தனியார் பள்ளிகளில், தாய்மொழியை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பாட்டுப்பாடுதல், வேறு மொழி (ஆங்கிலம், இந்தி) கலப்பின்றித் தமிழ் மொழியில் பேசுதல், பேச்சுப் போட்டி போன்ற, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஆனால், தமிழகத்தில் அரசின் சமச்சீர்க் கல்வி பாடத்திட்டத்தை பின்பற்றும் ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக், மாநில, மாவட்ட மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில், தாய்மொழி தினம் கொண்டாட, எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. பல பள்ளிகளில் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகம் சார்பில், தாய்மொழி தினம் கொண்டாட தயாராக உள்ளனர். ஆனால், தாய்மொழி தினம் கொண்டாடுவது குறித்து, பள்ளிக்கல்வித் துறை இதுவரை முறையான அறிவிப்பு செய்யவில்லை. எனவே, தமிழகத்தில் தாய்மொழி தினக் கொண்டாட்டம் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் கேட்ட போது, 'தமிழக அரசிடமிருந்து முறையான தகவல் வந்தால் மட்டுமே, நாங்கள் பள்ளிகளுக்கு அறிவுறுத்த முடியும். தற்போது வரை, எங்களுக்கு தாய்மொழி தினக் கொண்டாட்டம் குறித்து, அரசிடமிருந்து எந்த உத்தரவும் வரவில்லை' என்றனர். இதுகுறித்து, தமிழ்மொழி ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கையில், 'தனியார் பள்ளிகளில், தமிழ் படிப்பதே அபூர்வமாகி விட்டது. இதை தாய்மொழியாகக் கொண்டாடும் வகையிலாவது, இதன் மீதான ஆர்வத்தை மாணவர்களிடையே ஊக்குவிக்க வேண்டியது, தமிழக அரசின் கடமை. தனியாக மாநாடு நடத்திச் செலவழித்து, காசை வீணடிப்பதை விட, இது போன்ற உபயோகமான நிகழ்ச்சிகளை நடத்துவதில் ஆர்வம் காட்டுவதை விட, அரசியலில் ஆர்வம் காட்டி, அமைச்சர்கள் பொழுதைக் கழிக்கின்றனர்' என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி