படிவம் கொடுக்காதவர்களுக்கு எரிவாயு உருளை தரக் கூடாது: விநியோகஸ்தர்களுக்கு வாய்மொழி உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 11, 2015

படிவம் கொடுக்காதவர்களுக்கு எரிவாயு உருளை தரக் கூடாது: விநியோகஸ்தர்களுக்கு வாய்மொழி உத்தரவு


எரிவாயு உருளைக்கான (காஸ் சிலிண்டர்) மத்திய அரசின் நேரடி மானியத் திட்டத்தையொட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றாத வாடிக்கையாளர்களுக்கு எரிவாயு உருளை வழங்கக் கூடாது என எரிவாயு நிறுவனங்களின் அதிகாரிகள் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளனர்.
சமையல் எரிவாயுக்கான மத்திய அரசின் நேரடி மானியத் திட்டம் தமிழகத்தில் கடந்தஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை எரிவாயு விநியோகஸ்தர்கள் வழங்கி வருகின்றனர். அத்துடன் ஆன்-லைன் மூலமும் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.புதிய திட்டத்தின் மூலம் சமையல் எரிவாயு மானியம் பயனாளிக்கு நேரடியாக அவரது வங்கிக் கணக்கில் சென்றடைய வேண்டும் என்பதே அரசின் நோக்கம். இத்திட்டத்தில் சேர ஆதார் அட்டை தேவை எனினும் தற்போது அது கட்டாயப்படுத்தப்படவில்லை.

இதனால் ஆதார் அட்டை உள்ளவர்களுக்கு ஒரு விண்ணப்பமும், ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு மற்றொரு விண்ணப்பமும் வழங்கப்படுகிறது. அரசின் நேரடி மானியத்துக்கு எரிவாயு உருளைக்கான வாடிக்கையாளர் அட்டை வைத்துள்ள குடும்பத் தலைவரின் பெயரில் ஏதேனும் ஒரு வங்கியில் சேமிப்புக் கணக்கு இருக்கவேண்டும். இதுவரை வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் புதிதாக கணக்குத் தொடங்க வேண்டும்.பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் வங்கிக் கணக்கு பாஸ் புத்தகத்தில் புகைப்படம், முகவரி இடம்பெற்ற பக்கத்தின் நகலை இணைத்து விநியோகஸ்தரிடம் வழங்கவேண்டும். இந்த விண்ணப்பத்தை அளித்தவர்களுக்கு மட்டுமே தற்போது எரிவாயு உருளை வழங்கப்பட வேண்டும் என வாய்மொழி உத்தரவை எரிவாயு உருளை விநியோகிக்கும்முகவர்களை கண்காணிக்கும் அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர்.மாதம்தோறும் சந்தை விலைக்கு ஏற்ப 14.2 கிலோ எடையுள்ள எரிவாயு உருளைக்கான தொகையை விநியோகஸ்தரிடம் வாடிக்கையாளர் செலுத்திப் பெறுவார். அவர் எரிவாயு உருளை பெற்ற ஓரிரு தினங்களில் அவரது வங்கிக் கணக்கில் மானியத் தொகை விலை மாற்றத்துக்கு ஏற்ப வழங்கப்படும்.

எரிவாயு உருளை இணைப்பு பெற்றவர்கள் எவரேனும் காலமான நிலையில், அவரது வாரிசுகள் அதை பயன்படுத்தி வந்தால், உரிய ஆதாரங்களுடன் எரிவாயு இணைப்பை வாரிசுகள் தங்கள் பெயருக்கு மாற்றிக்கொண்ட பிறகே மானியம் பெற தகுதியுண்டு.எரிவாயு உருளையின் மானியத் தொகையை வங்கிக் கணக்கில் பெறும் புதிய திட்டத்தில் இணைந்திட கடந்த 3 மாதமாக வாடிக்கையாளர்கள் அந்தந்த எரிவாயு விநியோகஸ்தர்களிடம் விண்ணப்பம் பெற்று அளித்து வருகின்றனர்.இதுவரை விண்ணப்பம் செய்தவர்கள் பெரும்பாலோருக்கு எரிவாயு உருளை பெற்ற ஓரிரு தினங்களில் மானியமும் வங்கிக் கணக்கில் சேரத் தொடங்கியுள்ளது.இந்த புதிய நடைமுறையில் இணைய வாடிக்கையாளர்களுக்கு வரும் மார்ச் 31 வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் எரிவாயு உபயோகிப்பாளர்கள் பலர் இன்னும் காலஅவகாசம் இருப்பதால் படிவங்களை கொடுத்துக் கொள்ளலாம் என்ற மெத்தனப் போக்கில் இருப்பதும் உண்மை.இந்நிலையில்,எரிவாயு விநியோகஸ்தர்களுக்கு ஒரு வாய்மொழி உத்தரவை எரிவாயு நிறுவனங்களின் அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர்.புதிய நடைமுறை விண்ணப்பங்களை எரிவாயு விநியோகஸ்தர், வங்கிகளில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே இனி எரிவாயு உருளை வழங்க வேண்டும் என்பதே அந்த உத்தரவு.வாடிக்கையாளர் படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்க மார்ச் இறுதி வரை காலஅவகாசம் உள்ள நிலையில், அவர்களிடம் எரிவாயு விநியோகஸ்தர்கள் இந்த வாய்மொழிஉத்தரவை நடைமுறைப்படுத்தினால் எதிர்ப்புக்கு ஆளாகும் நிலைக்கு ஏற்படும் என அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் பலர் படிவங்களைப் பூர்த்தி செய்து அளிக்கும்நடைமுறைகளை பின்பற்றியிருந்தாலும், ஒரு சில வங்கிகளில் மானியத் தொகை பெறுவதற்கான இணைப்பு நடைமுறைகளை செயல்படுத்துவதில் காலதாமதம் செய்து வருகின்றன.குறிப்பாக பூஜ்ய இருப்புத் திட்டத்தில் தொடங்கப்பட்ட கணக்குகளை வாடிக்கையாளர் இத்திட்டத்தில் கொடுக்கும்போது, குறைந்தபட்சம் ரூ.500 இருப்பு இருந்தால் மட்டுமே மானியத் தொகை இணைப்புக்கான அனுமதியை வழங்க முடியும் என வங்கிகள் கட்டாயப்படுத்தத் தொடங்கியுள்ளன.இதனால் ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பூஜ்ய இருப்பு வங்கிக் கணக்கை தொடங்கியிருந்தாலும், குறைந்தபட்சம் ரூ.500-ஐ வங்கிகளில் இருப்பு வைத்துக் கொள்ளும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த வாய்மொழி உத்தரவால் பெரிதும் பாதிக்கப்படுவர் என்று எரிவாயு விநியோகஸ்தர்கள்தரப்பில் கூறுகின்றனர்.

வங்கிகள் மானியத் தொகை பெறுவதற்கான அனுமதி வழங்காத வரை எரிவாயு உருளையை வாடிக்கையாளர்களுக்கு வழங்க இயலாத நிலை உள்ளதை, பல வாடிக்கையாளர்கள் புரிந்துகொள்ளாமல் தங்களிடம் சண்டையிடும் நிலை புதிய உத்தரவால் ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலை தவிர்க்க அரசு வாய்மொழி உத்தரவை செயல்படுத்த வலியுறுத்துவதை தவிர்த்து வெளிப்படையான உத்தரவை அரசு வெளியிட்டால் மட்டுமே வாடிக்கையாளர்களை சமாளிக்க முடியும் என்கின்றனர் எரிவாயு விநியோகஸ்தர்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி