'ஆதார்' இருப்பவர்களுக்கு மட்டும் வேலை: உத்தரவால் 25 சதவீதம் பேர் வேலையிழப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 17, 2015

'ஆதார்' இருப்பவர்களுக்கு மட்டும் வேலை: உத்தரவால் 25 சதவீதம் பேர் வேலையிழப்பு

மேட்டூர்: 'ஆதார்' அட்டை இருப்பவர்களுக்கு மட்டுமே, வேலை தர வேண்டும்' என, அரசு உத்தரவிட்டதால், தேசிய ஊரக வேலை திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர் களில், 25 சதவீதம்பேர் வேலை இழந்து உள்ளனர்.

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், தமிழகத்தில், 12,618 பஞ்சாயத்துகளில், தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.

வங்கியில் வரவு:

'தொழிலாளர்கள் அனைவரும், வங்கிக் கணக்கு துவங்க வேண்டும்; அப்போது தான் சம்பளம், அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்' என, அரசு கூறியது. இதனால், தொழிலாளர்கள், தேசிய வங்கிகளில் தனித்தனியாக வங்கிக் கணக்கு துவங்கினர். இந்நிலையில், 'ஆதார் அட்டை உள்ள தொழிலாளர்களுக்கு மட்டும், வேலை வழங்க வேண்டும்' என, கடந்த மாதம் அரசு உத்தரவிட்டது. அரசின் இந்த நடவடிக்கையால், ஒவ்வொரு பஞ்சாயத்திலும், அதிகபட்சமாக, 25 சதவீத தொழிலாளர்கள், வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும், இன்னும், 30 சதவீதம் பேர், ஆதார் பெறாமல் இருப்பதால், இந்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாநிலம் முழுவதும்:

அரசு உத்தரவு வந்ததில் இருந்து, ஆதார் இல்லாத தொழிலாளர்களுக்கு, மாநிலம் முழுவதும் வேலை மறுக்கப்படுகிறது. வேலை இல்லாததால், வருமானம் இழந்து, தொழிலாளர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

தொழிலாளர் நிலை பரிதாபம்:

சேலம் மாவட்டம், கொளத்தூர் ஒன்றியம், தின்னப்பட்டி பஞ்., தலைவர் முனுசாமி கூறியதாவது: எங்கள் பஞ்சாயத்தில், ஆதார் அட்டை இல்லாத, 25 சதவீத தொழிலாளர்களை, வேலையை விட்டு நிறுத்தி விட்டோம். அவர்களில் பலர், ஊரக வேலையை நம்பியே வாழ்க்கை நடத்தியதால், தற்போது வறுமையில் வாடுகின்றனர். அவர்கள், ஆதார் அட்டை பெற்றுத் தருமாறு, எங்களிடம் கேட்கின்றனர்; அட்டை பெறுவதிலும், பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன; எப்படியாவது வேலை கொடுக்குமாறு கெஞ்சுகின்றனர். அவர்களின் நிலையை கருத்தில் கொண்டு, வேலை வழங்க நாங்கள் நினைத்தாலும், ஆதார் இல்லாததால் வழங்க முடியவில்லை. பஞ்சாயத்துகளில், ஆதார் அட்டை கேட்டு விண்ணப்பித்துள்ள தொழிலாளர்களுக்கு, உடனடியாக ஆதார் அட்டை கிடைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

1 comment:

  1. Today Hindu News

    Don't insist on Aadhaar, warns Supreme Court.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி