முறைகேட்டை தடுக்க கணினி அறிவியல் தேர்வில் நான்கு வகை வினாத்தாள்: கணினி மூலம் திருத்த ஓ.எம்.ஆர்., விடைத்தாள் வினியோகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 14, 2015

முறைகேட்டை தடுக்க கணினி அறிவியல் தேர்வில் நான்கு வகை வினாத்தாள்: கணினி மூலம் திருத்த ஓ.எம்.ஆர்., விடைத்தாள் வினியோகம்

பிளஸ் 2 கணினி அறிவியல் தேர்வில், 75, ஒரு மதிப்பெண் வினாக்கள் உட்பட எளிமையான வினாக்களே இடம் பெற்றிருந்தன. ஒரு மதிப்பெண் வினாவில், மாணவர் காப்பியடிப்பதைத் தடுக்க, நான்கு வகை வினாத்தாள் வினியோகிக்கப்பட்டன.

பிளஸ் 2 வகுப்புக்கு கடந்த வாரம் மொழிப் பாடத் தேர்வுகள் முடிந்து விட்ட நிலையில், நேற்று, முக்கியப் பாடங்களுக்கு தேர்வு துவங்கியது. இதில் கணிதம் - கணினி அறிவியல் பிரிவினருக்கு கணினி அறிவியல் தேர்வு நடந்தது. தேர்வில் வினாக்கள் எளிமையாக இருந்ததாக மாணவ, மாணவியர் தெரிவித்தனர். பாடத்திட்டத்தில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்பட்டன. மொத்தம், 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இதில், 75, ஒரு மதிப்பெண் வினாக்கள்; தலா, இரண்டு மதிப்பெண் வீதம், 20 வினாக்கள்; தலா, ஐந்து மதிப்பெண் வீதம், ஏழு வினாக்கள் இடம் பெற்றிருந்தன. ஒரு மதிப்பெண் வினாக்களில், தலா, நான்கு விடைகள் அளிக்கப்பட்டு, சரியான விடையைத் தேர்வு செய்யும் வகையில் இடம் பெற்றன. ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடையளிக்க, புகைப்படம், பதிவு எண் அச்சிடப்பட்ட ஓ.எம்.ஆர்., கணினி பதிவுத்தாள் வழங்கப்பட்டன.

மற்ற பாடத்துக்கு இல்லாத வகையில் கணினி அறிவியலுக்கு மட்டும், ஓ.எம்.ஆர்., விடைத்தாள் வழங்கியது குறித்து, தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மற்ற பாடங்களில் இல்லாத அளவுக்கு, கணினி அறிவியலுக்கு, 75 ஒரு மதிப்பெண் வினாக்கள் இடம் பெற்றுள்ளன. அவை, விடையைத் தேர்வு செய்யும் வகையாக இடம் பெற்றதால், திருத்தம் செய்வதில் ஆசிரியர்களுக்கு குழப்பமும், காலதாமதமும் ஏற்படும். இதைத் தவிர்க்க, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மத்திய பணியாளர் தேர்வாணையம் மற்றும் குடிமையியல் (சிவில் சர்வீஸ்) தேர்வுகள் போல், கணினி முறையில் எளிதாகத் திருத்தம் செய்யும் படி, ஓ.எம்.ஆர்., விடைத்தாள் அளித்துள்ளோம். இதில், 75 வினாக்களுக்கும், ஒரு மாணவர் விடையை தெரிந்து கொண்டு, மற்ற மாணவருக்கு எளிதாக சைகையில் கூற முடியும். இதைத் தடுக்க, மற்ற பாடங்களுக்கு இல்லாத வகையில், ஒவ்வொரு தேர்வு அறையிலும் நான்கு வகை வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. இதனால் அருகருகிலுள்ள மாணவர்களுக்கு, வினாத்தாள் வரிசை மாற்றப்பட்டு, மாணவர்கள் விடைகளை காப்பியடிப்பது தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி