80 வயதை தாண்டினாலும் ‘மறுமணம் ஆகவில்லை’ என சான்றிதழ் அளித்தால் தான் ஓய்வூதியம்-மூத்த குடிமக்கள் அவதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 10, 2015

80 வயதை தாண்டினாலும் ‘மறுமணம் ஆகவில்லை’ என சான்றிதழ் அளித்தால் தான் ஓய்வூதியம்-மூத்த குடிமக்கள் அவதி


80 வயதை தாண்டினாலும் ‘மறு மணம் ஆகவில்லை’ என சான்றிதழ் அளித்தால் தான் ஓய்வூதியம் வழங்கப்படும் என தமிழக அரசு வெளியிட்டு உள்ள புதிய உத்தரவினால் மூத்த குடிமக்கள் நாள்தோறும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

ஓய்வூதியர்களுக்கு நேர்காணல்

திருச்சி மாவட்ட கருவூலம் மூலம் ஓய்வூதியம் பெறும் அனைத்து ஓய்வூதியர்களுக்கும், அவர்கள் உயிரோடு இருப்பதை உறுதி செய்வதற்காக கடந்த 1–ந்தேதியில் இருந்து நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது. வருகிற ஜூன் மாதம் வரை இந்த நேர்காணல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இதற்காக வங்கி வாரியாக ஓய்வூதியர்கள் வருவதற்கான பட்டியலும் ஏற்கனவே வெளியிடப்பட்டு உள்ளது. 58 வயது வரை கவுரவம் மற்றும் அதிகாரம் நிறைந்த அரசு பதவியில் பணியாற்றி விட்டு, வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெற்ற பின்னர், ஓய்வூதியத்தை தொடர்ந்து பெறுவதற்காக அவர்கள் தள்ளாத வயதில் நேர்காணலுக்கு வரும்போது பல இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது.

புதிய உத்தரவால் கொந்தளிப்பு

இதற்கு தமிழக அரசு பிறப்பித்து உள்ள ஒரு உத்தரவு தான் காரணம். தாங்கள் உயிரோடு தான் இருக்கிறோம் என்பதை நிரூபணம் செய்வதற்காக செல்லும் குடும்ப ஓய்வூதியர்கள் (80 வயதுக்கு மேல் இருந்தாலும்) தங்களுக்கு மறு மணம் ஆகவில்லை என சான்றிதழும், திருமணம் ஆகாத ஓய்வூதியர்கள் தங்களுக்கு திருமணம் ஆகவில்லை என்ற சான்றிதழையும் அரசின் பதிவு பெற்ற அலுவலரிடம் மேலொப்பம் (அட்டஸ்டேசன்) வாங்கி சமர்ப்பிக்க வேண்டும் என 31–3–2015 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசின் புதிய ஆணையை காரணம் காட்டி கட்டாயப்படுத்துவதாகவும்,இது ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்களை கொந்தளிப்பு அடைய செய்து இருப்பதாகவும் முறையிட்டு உள்ளார் திருச்சி மாவட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்க தலைவர் அருள் ஜோஸ்.

வேதனைக்கு முடிவு என்ன?

எந்த ஒரு சான்றிதழுக்கும் அரசு பதிவு பெற்ற அதிகாரியிடம் மேலொப்பம் பெற தேவைஇல்லை, சுய மேலொப்பமே போதும் என கடந்த 23–9–2014 அன்று ஏற்கனவே தமிழக அரசு ஒரு ஆணை பிறப்பித்து உள்ள நிலையில் தற்போது அரசு பிறப்பித்து உள்ள இந்த புதிய உத்தரவு ஓய்வூதியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் ஒரு அதிகாரியிடம் போய் எனக்கு மறு மணம் ஆகவில்லை என்பதை உறுதி செய்ய மேலொப்பம் செய்யும்படி கேட்கும்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கையொப்பமிட தயங்குவதாகவும், இதனால் பலபிரச்சினைகள் ஏற்படுவதால் கருவூலத்தில் உள்ள பதிவு பெற்ற அலுவலர்களே மேலொப்பம் போட்டுக்கொடுத்து மூத்த குடிமக்களின் மன வேதனைக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

1 comment:

  1. புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியத்தை நிறுத்தி விட்டார்கள். இப்பொழுது கொடுத்துக் கொண்டிருக்கும் ஓய்வூதியத்தையும்
    "ஏன் இவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று" எண்ணி பாடாய் படுத்தத் துவங்கிவிட்டார்கள் போலும். ஏற்கனவே 1988 முதல் 1995 வரை ஓய்வு பெற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டிய ஊதிய உயர்வு மற்றும் நிலுவைத் தொகைக்கு நாமம் வேறு போட்டு விட்டார்கள். இப்படிச் செய்தால், அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் எப்படித்தான் நிம்மதியாக வாழ்வது?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி