கலப்பு திருமணத்திற்கு வழங்கப்படும் மத்திய அரசு நிதி எங்கே? தமிழகத்தில் இருந்து யாரும் பெறாத அவலம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 16, 2015

கலப்பு திருமணத்திற்கு வழங்கப்படும் மத்திய அரசு நிதி எங்கே? தமிழகத்தில் இருந்து யாரும் பெறாத அவலம்

கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு, மத்திய அரசு வழங்கும் நிதியுதவியை பெற்றுத் தர, தமிழக அரசு அதிகாரிகள், கடந்த, இரண்டு ஆண்டுகளாக, எந்த நடவடிக்கையும் எடுக்காதது, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு சேவை செய்ய, மாணவ, மாணவியருக்கு, கல்வி உதவித் தொகை வழங்க, 1992ல், அம்பேத்கர் அறக்கட்டளை துவக்கப்பட்டது.


ஜாதியை ஒழிக்க:


மக்களிடையே ஜாதியை ஒழிக்கவும், கலப்பு திருமணத்தை ஊக்குவிக்கவும், சமூக ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும், கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு நிதியுதவி வழங்க, மத்திய அரசு முடிவு செய்தது. கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களை, இரு வீட்டாரும் புறக்கணிக்கும்போது, அவர்கள் தங்கள் வாழ்க்கையைத் துவக்க, இந்நிதி உதவியாக இருக்கும் என்பதற்காக, இத்திட்டம் துவக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும், ஆண்டுக்கு, 500 தம்பதியருக்கு, தலா, 2.50 லட்சம் ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டது. அந்த தொகையில், 1.25 லட்சம் ரூபாயை, ரொக்கமாக அவர்களிடம் ஒப்படைக்கவும், மீதித் தொகையை, அவர்கள் பெயரில், நிரந்தர வைப்புத் தொகையாகச் செலுத்தவும், முடிவு செய்யப்பட்டது.

இந்நிதியுதவியைப் பெற விரும்புவோர்

* கலப்பு திருமணம் செய்தி ருக்க வேண்டும்.


* அவர்களில் யாரேனும் ஒருவர், ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.


* திருமணம் முடிந்த, ஓராண்டுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


* அவர்களின் விண்ணப்பங்களை, எம்.பி., அல்லது எம்.எல்.ஏ., கலெக்டருக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.


* கலெக்டர் அனுப்பும் விண்ணப்பங்களை, அரசு பரிசீலித்து, மத்திய அரசின், சமூக நீதித் துறைக்கு அனுப்ப வேண்டும்.


* இந்து திருமண சட்டத்தின் கீழ், திருமணத்தை பதிவு செய்திருக்க வேண்டும்.


அருணாசல பிரதேசம்:

ஆதிதிராவிட மக்கள் தொகை அடிப்படையில், ஒவ்வொரு மாநிலத்திலும், எத்தனை தம்பதியருக்கு வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, 'தமிழகத்தில், ஆண்டுக்கு, 36 கலப்பு திருமண தம்பதியருக்கு, நிதியுதவி வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது. ஆதிதிராவிட மக்கள் இல்லாத, அருணாசல பிரதேசம், நாகாலாந்து, அந்தமான் நிகோபார் தீவு, லட்சத்தீவு ஆகியவற்றில், இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இத்திட்டம், 2013 - 14ல் செயல்பாட்டிற்கு வந்தது. 'இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் எத்தனை பேருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது?' என, தமிழ் மக்கள் பண்பாட்டுக் கழகம் நிறுவனர் கோ.ரா.ரவி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தகவல் கேட்டார். இதற்கு பதில் அளித்த, அம்பேத்கர் அறக்கட்டளை உறுப்பினர் செயலர் பாபுலால் மீனா, 'தமிழகத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில், யாருக்கும் நிதியுதவி வழங்கப்படவில்லை' என தெரிவித்துள்ளார். இதற்கு காரணம், தமிழகத்தில் இருந்து, யார் விண்ணப்பத்தையும் பரிந்துரைக்கவில்லை. இது குறித்து, தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகளை கேட்டபோது, 'திட்டம் குறித்து எதுவும் தெரியவில்லை' என, 'கூலாக' பதில் அளித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி