முன்னாள் ராணுவ வீரர்கள் வாரிசுக்கு எம்.பி.பி.எஸ். ஒதுக்கீடு: அரசுக்கு எதிராக வழக்கு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 1, 2015

முன்னாள் ராணுவ வீரர்கள் வாரிசுக்கு எம்.பி.பி.எஸ். ஒதுக்கீடு: அரசுக்கு எதிராக வழக்கு


முன்னாள் ராணுவ வீரர்கள் வாரிசுகளுக்கு மருத்துவப் படிப்பில் கூடுதல் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து தமிழக அரசுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் எம்.அர்ஜுனன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்புமனு விவரம்:
தமிழகத்தில் கடந்த 1984-1985-ஆம் கல்வியாண்டில் 9 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே செயல்பட்டன. அதனால், மருத்துவக் கல்வியில் சேரும், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டன.ஆனால், தற்போது 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், 13 தனியார் மருத்துவக்கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன. மொத்தம் 3,165 இடங்கள் உள்ளன.ஆனால், இப்போதும் எம்.பி.பி.எஸ். படிப்பில் அதே 2 இடங்கள் மட்டுமே முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படுகிறது. தமிழத்தில் மொத்தம் 1 லட்சத்து 73 ஆயிரத்து 854 முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளனர். எனவே, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தேன்.இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்றம், தற்போது மருத்துவக் கல்லூரியில் உள்ள இடங்களின் அடிப்படையில் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்க மத்திய, மாநில அரசுகள் இரண்டு மாதங்களுக்குள் பரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.ஆனால், உயர் நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவு இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காத தமிழக சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் எஸ்.கீதாலட்சுமி, இந்திய மருத்துவக் கவுன்சில் இயக்குநர் கைலாஷ் எஸ்.சர்மா ஆகியார் மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், கர்நாடக மாநிலத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் வாரிசுகளுக்கு மருத்துவக் கல்லூரியில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக தெரிவித்தார்.இதுதொடர்பாக பதில் அளிக்க அரசுத் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஏப்ரல் 23-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி