மத்திய அரசின் திட்டத்தில் கல்வி பயிலும் 90 முஸ்லிம் மாணவிகளுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 26, 2015

மத்திய அரசின் திட்டத்தில் கல்வி பயிலும் 90 முஸ்லிம் மாணவிகளுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க உத்தரவு


மத்திய அரசின் திட்டத்தின் கீழ் கல்வி பயிலும் 90 முஸ்லிம் மாணவிகள் வேறு பள்ளியில் சேர்வதற்காக மாற்றுச் சான்றிதழ் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை செரியன் நகரை சேர்ந்த முகமது அலி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
என் மகள் ரசியாபானு எஸ்எஸ்எல்சி தேர்வில் 491 மதிப்பெண் பெற்றார். மத்திய அரசு வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் ஏழை முஸ்லிம் குழந்தைகளுக்கு இலவச உணவு, தங்கும் வசதியுடன் மேல்நிலைக் கல்வி அளிப்பது தொடர்பாக ஐஎல்எம்ஐ அறக்கட்டளை, கீழக்கரை இஸ்லாமிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.

இந்த அறக்கட்டளை நடத்திய நுழைவுத்தேர்வில் எனது மகள் வெற்றி பெற்று, இஸ்லாமிய மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் 1 படிப்பில் சேர்ந்தார். என் மகளைப் போன்று 90 மாணவிகள் இத்திட்டத்தில் கல்வி பயின்று வருகின்றனர்.இந்நிலையில் அறக்கட்டளைக்கும், கீழக்கரை பள்ளி நிர்வாகத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், 90 மாணவிகளையும் தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஆர்.டி.பி. மெட்ரிகுலேஷன் பள்ளியில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து 90 மாணவிகளின் மாற்றுச் சான்றிதழ், எஸ்எஸ்எல்சி மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை வழங்க பள்ளி நிர்வாகத்தை அறக்கட்டளை கேட்டுக்கொண்டது. ஆனால், பள்ளி நிர்வாகம் மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டது. இதனால், 90 மாணவிகளின் எதிர்காலம் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே, எனது மகளின் மாற்றுச் சான்றிதழ் மற்றும் எஸ்எஸ்எல்சி மதிப்பெண் சான்றிதழை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இத்திட்டத்தில் பயிலும் தேனி, நாமக்கல், கோவை, நெல்லை, காஞ்சிபுரம், புதுச்சேரி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 90 மாணவிகள் சார்பில் அவர்களின் பெற்றோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தன. அரசு வழக்கறிஞர் குணசீலன் முத்தையா வாதிடும்போது, 90 மாணவிகளின் கல்விச் சான்றிதழ் களை வழங்குவதாக மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளரிடம் கீழக்கரை இஸ்லாமிய மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் நேரில் தெரிவித்துள்ளார் என்றார்.இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, வேறு பள்ளியில் சேர்வதற்காக 90 மாணவிகளுக்கும் தாமதமின்றி கல்விச் சான்றிதழ்களை வழங்க கீழக்கரை இஸ்லாமிய மெட்ரிக் பள்ளி முதல்வர், தாளாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி