'கல கல வகுப்பறை' உருவாக்குவது எப்படி: அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 17, 2015

'கல கல வகுப்பறை' உருவாக்குவது எப்படி: அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி


மாணவர்களுக்கு பிடித்தமான 'கல கல வகுப்பறை' உருவாக்குவது குறித்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான மூன்று நாள் பயிற்சி மதுரையில் நேற்று துவங்கியது.பயிற்சி குறித்து மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் சிவா, ரமணன்,பாலமுருகன், முத்துக்குமார் கூறியதாவது:
'மாணவர்கள் தங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதில்லை. தவறு செய்தால் கண்டிக்க விடுவதில்லை. மீடியாக்களிடம் சொல்கின்றனர்' என்பது தான் தற்போதுள்ள ஆசிரியர்களின் குற்றச்சாட்டு. மாணவர்கள் தற்போது தான் தங்களின் உரிமையை தெரிந்து கொண்டுள்ளனர். இந்த விழிப்புணர்வை பாராட்ட வேண்டும். வகுப்பறையை மாணவர்களின் விருப்பமான அறையாக மாற்ற வேண்டியது ஆசிரியர் கடமை. ஆசிரியரை மாணவர்கள் நேசிக்க ஆரம்பித்தால், அவர்கள் நடத்தும் பாடங்களையும் விரும்புவர். இக்கருத்தில் உடன்பாடுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களை முகநூல் மூலம் ஒருங்கிணைத்தோம். மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் 30 ஆசிரியர்கள் சேர்ந்தனர் என்றனர்.பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்கள் கூறியது:வடிகாலாக இருக்க வேண்டும்:எஸ். மணிமாறன், மேலராதாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, திருவாரூர்: வகுப்பறையில் அடிக்கடி தொல்லை கொடுப்பவன் தான் மாணவன். நன்றாக படிக்கும் மாணவர்கள், நம்மை எந்தவிதத்திலும் பாதிக்காமல் கடந்து சென்று விடுவர். வகுப்பறையை தாண்டி யோசிக்கும் மாணவர்கள் தான் அதிகம். அவர்களின் அறிவாற்றலுக்கு வடிகாலாக இருக்க வேண்டும்.

மாணவர்கள் வெறுக்கக்கூடாது:எஸ்.நல்லமுத்து, அவ்வூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கோத்தகிரி: ஆசிரியர்கள் மாணவர்களுக்காக பணி ஓய்வு வரை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். எங்கள் பள்ளி மாணவர்களுக்காக சிலம்பம், பறை கற்றுக் கொண்டு, அவர்களுக்கும் கற்றுத் தருகிறேன். மாணவர்களை நேசிக்கும், நெருங்கும் ஆசிரியர்களை எந்த மாணவனும் வெறுப்பதில்லை.கதை சொல்ல வேண்டும்:பி.வசந்தன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கீழப்பாழையூர், கடலூர்: அட்டவணையிட்டு படி, படி என்று சொல்வதை விட துவக்கப்பள்ளிகளில் மாணவர்கள் விரும்பும் விதத்தில் பாடங்களை நடத்த வேண்டும். மழை வரும் போது மழையையும், வெயில் வரும் போது வெயிலையும் பற்றி சொன்னால் சந்தோஷமாக கேட்பர்.

நம்பிக்கையை விதைக்க வேண்டும்:கே.சத்யபிரியா, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, அவினாசி: வகுப்பறை என்பது மாணவர்கள் சுதந்திரமாக செயல்படும் ஒரு பயிற்சி களமாக இருக்க வேண்டும். அதிகார தொனியில் செயல்படக் கூடாது. ஆசிரியர்களிடம் எல்லா சந்தேகங்களையும் கேட்கலாம் என்ற நம்பிக்கையை மாணவர்கள் மனதில் விதைக்க வேண்டும்.

கலகல வகுப்பறை:வி.சசிகலா, சன்னதி தொடக்கப்பள்ளி, திருவண்ணாமலை: மாணவர்களிடம் நட்பு பாராட்ட ஆசிரியர்கள் தங்களை பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். வகுப்பறையை தாண்டி பாடங்கள் தொடர்பான நிறைய விஷயங்களை மாணவர்களோடு விவாதிக்க வேண்டும். அப்போதுதான் வகுப்பறை கலகல வகுப்பறையாக மாறும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி