கல்லூரிகள் விவரம் வெளியீடு: மாணவர் தேர்ச்சி விகிதம் இல்லை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 7, 2015

கல்லூரிகள் விவரம் வெளியீடு: மாணவர் தேர்ச்சி விகிதம் இல்லை

மாணவர்களுக்கு பயன் தரும் வகையில் பொறியியல் கல்லூரிகள் குறித்த விவரங்களையும், ஒரே பெயர் கொண்ட கல்லூரிகளின் விவரங்களையும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அதே நேரம், கடந்த ஆண்டைப்போல் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகிதத்தை பல்கலைக்கழகம் வெளியிடவில்லை.
இது ஏமாற்றம் அளிப்பதாக மாணவர்களும், பெற்றோரும் கருத்துத் தெரிவித்தனர்.


கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பொறியியல் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகிதம், ஒரே பெயர் கொண்ட கல்லூரிகளின் பட்டியல் ஆகியவற்றை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது.
அதாவது, கடந்த ஆண்டு டி.பூபாலசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், ஆண்டுதோறும் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிப்புகளில் சேருகின்றனர். அவர்களில் 60 சதவீதத்தினர் கிராமங்களிலிருந்தும், நகர்ப்புறங்களில் இருந்தும் வருகின்றனர். இதனால், அவர்களுக்கு ஒவ்வொரு கல்லூரிகள் குறித்த உண்மை நிலை உடனடியாகத் தெரிவதில்லை என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மாணவர்களின் நலன் கருதி மாணவர் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையிலான கல்லூரிகளின் பட்டியலையும், ஒரே மாதிரி பெயர் கொண்ட கல்லூரிகள் பட்டியலையும் தனித் தனியாக வெளியிட உத்தரவிட்டது.


அதன் அடிப்படையில், 2014-15 பொறியியல் கலந்தாய்வுக்கு முன்பு இந்தப் பட்டியல்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. இது, கல்வியில் சிறந்து விளங்கும் கல்லூரியை இனம் காண மாணவர்களுக்கு மிகுந்த பயனளித்தது.


இதுபோல், 2015-16 கல்வியாண்டு பொறியியல் சேர்க்கைக்கு முன்னதாகவும், இந்த இரு பட்டியல்களையும் பல்கலைக்கழகம் வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையேயும், பெற்றோரிடையேயும் இருந்து வந்தது.
இந்த நிலையில், ஒரே மாதிரி பெயர் கொண்ட பொறியியல் கல்லூரிப் பட்டியல், கல்லூரிகள் குறித்த விவரங்கள் (முகவரி, சேர்க்கை எண்ணிக்கை எவ்வளவு, மாணவர் விடுதிக் கட்டணம் எவ்வளவு) ஆகியவற்றை மட்டும் ஜ்ஜ்ஜ்.ஹய்ய்ஹன்ய்ண்ஸ்.ங்க்ன்/ற்ய்ங்ஹ 2015 என்ற இணையதளத்தில் பல்கலைக்கழகம் இம்முறை வெளியிட்டுள்ளது.


மாணவர் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையிலான கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை பல்கலைக்கழகம் வெளியிடவில்லை.


இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை பி.இ. விண்ணப்பங்களை வாங்கிச் சென்ற மாணவர்களும், பெற்றோரும் கூறியது:
கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகிதம் வெளியிடுவது, பொறியியல் கல்லூரிகளின் கல்வித் தரம் குறித்து கிராமப்புற மாணவர்கள் ஓரளவுக்கு தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.


ஆனால், பல்கலைக்கழகம் இம்முறை வெளியிடாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டிய இந்த விஷயத்தை மறைப்பது, தனியார் கல்லூரிகளை காக்க முயற்சிப்பதுபோல் அமைந்துள்ளது என்றனர்.


கடந்த ஆண்டு கட்-ஆஃப் இன்று வெளியீடு
கடந்த 2014-15 கல்வியாண்டு பொறியியல் கலந்தாய்வு கட்-ஆஃப் விவரங்கள் வியாழக்கிழமை வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியது:

2015-16 கல்வியாண்டில் பி.இ. சேரப்போகும் மாணவர்களுக்கு பயன் தரும் வகையில், 2014-15 கல்வியாண்டு கலந்தாய்வில் எந்தெந்த கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கு எந்தெந்த கல்லூரிகள் கிடைத்தன என்ற விவரங்களை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட உள்ளது.


இது, தனது மதிப்பெண்ணுக்கு எந்த கல்லூரி கிடைக்கும் என்பதை மாணவர்கள் தெரிவு செய்து கொள்ள உதவிகரமாக இருக்கும்.
இதனடிப்படையில் குறைந்தபட்சம் 10 கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்து வைத்துக் கொண்டால், கலந்தாய்வின் போது விரைவாக கல்லூரியைத் தேர்வு செய்து சேர்க்கைக் கடிதத்தைப் பெற்றுச் சென்று விட முடியும் என்றார் அவர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி